13 ஜன., 2011

உயிர்முடிச்சு

6

" எலேய் சதிஷு இங்க கொஞ்சம் வா" டிவி பார்த்துகொண்டிருந்த சதிஷை அழைத்தாள் கிச்சனில் இருந்த அன்னபூரணி.

டிவியில் வைத்த கண்ணை எடுக்காமல் " என்னம்மா " என்றான் சதீஷ். 

" ஏய் செட்டியார் கடைல போய் ஒரு ரூபாய்க்கு வெள்ளை பூண்டும் நூறு தக்காளியும் வாங்கிட்டு வா.. கணக்கு நோட்ட எடுத்துட்டு போய் மறக்காம குறிச்சுட்டு வந்துரு " என்றாள் அன்னபூரணி..

" எம்மா நான் அப்புறம் போறேம்மா " என்றான் சதிஷ்.

" போகப்போறியா.. இல்லேன்னா ரெண்டு சாத்து சாத்தவா " என்றாள் அன்னபூரணி

"ச்சே இந்த அம்மா ரொம்ப மோசம் " நோட்டை எடுது கொண்டு கடைக்கு ஒடினான் சதிஷ்.

" பூரணி நான் கடைக்கு கிளம்பறேன் " என்றவாரு உள்ரூமில் இருந்து வெளியே வந்தார் கோமதிநாயகம் அன்னபூரணியின் கணவர்.

"இருங்க  இதோ வாரேன்" சொல்லியவாறே கிச்சனில் இருந்து வெளியே வந்தாள் அன்னபூரணி.

" பக்கது வீட்டுல என்னடி ஆச்சு.. பெரியவரு இருக்காரா.. போய் சேர்ந்தாரா " என்ற படி சைக்கிளை துடைக்க ஆரம்பித்தார் கோமதி நாயகம்.

 " ஸ்ஸ் .. மெல்ல பேசுங்க.. யாராவது வந்துர போறாங்க " என்ற அண்ணபூரணீ .

" இன்னும்  இழுத்துகிட்டுத்தான்   கிடக்கு .. வேலுச்சாமி டாக்டரும் டெய்லி வந்து பாத்துட்டுதான் போயிட்டுருக்காரு. தாத்தான் போய் சேராம இழுத்துகிட்டு கிடககாரு. அவரு மனசுல என்னவோ யாரு கண்டா " என்றாள்.

"செரி செரி .. எதுனாச்சும் ஆச்சுனா கடைக்கு போன் போடு. நான் கிளம்பறேன் " சொல்லிக்கொண்டே சைக்கிளை எடுத்தார் கோமதி நாயகம்.

" எங்கேந்து போன் போடறது.. அவுக வீட்டுலதான போன் இருக்கு.. " என்றாள் அன்னபூரணி.

"ஆமாம்ல .. சதிஷ்ட சொல்லி விடு .. நான் கிளம்பறேன் " சைக்கிளிலில் ஏறி கிளம்பினார் கோமதி நாயகம்.

" இந்தம்மா " என்று படியில் ஒடி வந்த சதிஷிடம்

 "கொண்டு போய் உள்ள வை.. நான் போய் தாத்தாவ பாத்துட்டு வாரேன்" என்று சொல்லிக்கொண்டு தெருவினில் இறங்கி அடுத்த வீட்டை பார்த்து நடந்தாள் அன்னபூரணி.
  
முற்றத்தின் கடைசியில் ஒரு கட்டிலில் படுத்திருந்தார் முத்தையா தாத்தா அல்லது படுக்கவைக்கபட்டிருந்தார். அவர் தலைமாட்டின் ஓரம் கன்னத்தில் கை வைத்து கொண்டு உட்கார்ந்திருந்தார் லட்சுமி பாட்டி.  எதோ ஒரு புக்கை கையில் வைத்துகொண்டு உட்கார்ந்திருந்தான் மகேஷ், முத்தையா தாத்தாவின் பேரன்.

வீட்டுக்குள் நுழைந்த அன்னபூரணி ஒரு நிமிடம் தாத்தா படுத்திருந்த கட்டிலுக்கு அருகில் போய் நின்றாள்.நிழல் அடிப்பதை உணர்ந்த லட்சுமி பாட்டி நிமிர்ந்து பார்த்தாள்.

" என்ன பாட்டி " என்றவளிடம் ஒன்றும் சொல்லாமல் திரும்பி தாத்தாவை பார்த்து உட்கார்ந்தால்.  ஒரு நிமிடம் அங்கேயே நின்று விட்டு " அம்மா எங்க" என்றால் மகேஷை பார்த்து.

மகேஷ் ஒன்றும் சொல்லாமல் கிச்சனை நோக்கி கையை காட்ட கிச்சனை நோக்கி நடந்தாள் அன்னபூரணி. 

கிச்சனுள் எதோ செய்து கொண்டிருந்த  திலகம் யாரோ வரும் சத்தத்தை கேட்டு திரும்பினாள்.

" என்னக்கா டாக்டர் என்ன சொல்றாரு " என்ற அன்னபூரணியை பார்த்து

" என்னத்த புதுசா சொல்றாரு.. அவரும் இன்னிக்கு முடிஞ்சுரும் முடிஞ்சுரும்னு டெய்லி வந்து சொல்லிட்டு போயிட்டுத்தான் இருக்காரு .. ஆனா நல்லதுதான் நடக்க மாட்டேங்கிது " என்று சொல்லி ஒரு பெருமூச்சை விட்டாள் திலகம்.

" ஒரு சோலி பாக்க முடியல வீட்டுல .. எல்லாம் போட்டது போட்டபடி அப்படியே கிடக்கு..  உசிரு  இழுத்துக்கிட்டுத்தான் கிடக்கு இல்லெங்கில ... இந்த கிழவி வேற சொல்ற சொல்ல கேக்காம ஒழுங்கா சாப்டாம கொல்லாம என்னோட உயிர வாங்குது" என்று தொடர்ந்தவளிடம்

" அண்ணே என்ன சொல்றாக" என்றாள் அன்னபூரணி.

" அவுக என்னத்த சொல்லிற போறாக புதுசா.. எதுவும் சொன்னா என்ன எங்கப்பாவ சாகடிக்க சொல்லிருயான்னு  என்கிட்டே சண்டைக்கு நிக்கிறாங்க"  என்றாள் திலகம்.

" என் விதி இங்க கிடந்து அல்லாட வேண்டி கிடக்கு .. ஒரு விசேஷத்துக்கு கூட போக முடியாம இங்கனயே பலியா கிடக்க வேண்டியிருக்கு " என்ற திலகத்திடம்

" எங்கக்கா .. என்ன விசேஷம்" என்றாள் அன்னபூரணி.

" சேலத்துல என்னோட ஒன்னு விட்ட தங்கச்சி ராஜி இருக்கால. அவளோட மச்சினன் குழந்தைக்கு முடி இறக்கி கிடா  விருந்து வைக்கிறதா அழைப்பு வந்துச்சு .. நாந்தேன் போக முடியாம உட்காந்துகிட்டு இருக்கேன் " என்றாள் திலகம்.

" மெட்ராஸ் காரங்களுக்கு சொல்லி விட்டாசாக்கா " என்ற அன்னபூரணியிடம் 

" யாரு மகேஷு சித்தப்பா வீட்டுல சொல்றியா " என்றாள் திலகம்.

ஆமாம் என்ற அர்த்தத்தில் தலையாட்டிய அன்னபூரணியை பார்த்து " அவங்களுக்கு சோலி ஜாஸ்தியா கிடக்காம். எதுவும் ஆச்சுனா சொல்லுங்க  வாரோம்கிறாங்க .. என்னத்த சொல்ல " என்றாள் திலகம்.

" சரிக்கா அவரு வந்துருவாரு .. போய் சமைக்கணும்.. எதுவும் வேணும்னா ஒரு சத்தம் கொடுங்க .. ஓடி வாரேன் " என்று சொல்லி அங்கிருந்து நகர்ந்தாள் அன்னபுரணி.

" சரி நீ போய் வேலைய பாரு .. நான் என்னோட வேலைய பாக்கறேன் " என்று சொல்லியபடி வேலையை பார்க்க ஆரம்பித்தாள் திலகம்.

சற்று நேரம் களைத்து கிச்சன் வாசலில் வந்து நின்ற மகேஷை பார்த்து " என்னடா என்ன வேணும் " என்றாள்.

" நான் கொஞ்ச நேரம் வெளில போய்ட்டு வரேன்மா " என்றவனை பார்த்து 

" பொறுப்பிருக்கா உனக்கு .. இந்த கிழம் வேற இழுத்து கிட்டு கிடக்கு.. உங்கப்பா வேற  வீட்டுல இல்ல.. நீயும் வெளில போயச்சுன்னா ஏதானும் ஒன்னுனா நான் ஒட முடியுமா லொங்கு லொங்குன்னு .. எங்கயும் போக வேண்டாம் .. சும்மா கம்முன்னு வீட்டுல கிட " என்றாள் எரிச்சலுடன்.

என்னத்தையோ முனங்கி கொண்டு அந்த இடத்தில இருந்து நகர்ந்தான் மகேஷ்.

அன்னபுரணி சமைக்க ஆரம்பித்திருப்பாள் போல பூண்டு ரசத்தின் வாசனை திலகத்தின் நாசியை தொலைத்தது. திடீர் என்று திலகம் திலகம் என்று லட்சுமி பாட்டி கத்த திலகம் கிச்சனில் இருந்து வெளிய வருவதற்குள் மகேஷ் கட்டிலுக்கு பக்கத்தில் போய் நின்றிருந்தான். 

" என்ன பாட்டி" என்றான் மகேஷிடம் " தாத்தா என்னவோ சொல்லறாங்க பாரு" என்றாள் பாட்டி.

" என்ன பாட்டி உளறறீங்க " என்ற மகேஷிடம் "  நெசம்தான் எனக்கு விலங்கல .. கொஞ்சம் குனிஞ்சு என்னனு கேளு "

 என்ற பாட்டியை முறைத்து கொண்டே தாத்தாவிடம் குனிந்தான் மகேஷ்.

" அன்ன..  பூ.. டு.... சம் ... வச்ச...... கா.  .. ஒரு தம.. ல.. வான்... டு.. வா " வார்த்தைகள்  தெளிவற்று வந்தது முத்தையா தாத்தாவிடம் இருந்து..

ஒன்றும் புரியாமல் " என்ன தாத்தா என்றான் மகேஷ்.

பாட்டியும், திலகமும் ஒன்றும் புரியாமல் விழித்து கொண்டு இருக்க தாத்தாவின் வார்த்தைகள் புரியாமல் " என்ன தாத்தா,,,என்ன தாத்தா " என்று மகேஷ் திரும்ப திரும்ப கேட்டு கொண்டிருந்தான்.

சற்று நேரம் ஒன்றும் புரியாமல் நின்றிருந்த திலகம் டாக்டருக்கு போன் பண்ண போனை பார்த்து ஓடினாள்.

" பூண்டு  ரசம் வாசனை வருதாடா" மகனிடம் கேட்டு கொண்டிருந்தாள் அன்னபூரணி.

இராமசாமி கண்ணண்.