8 மார்., 2011

பெயர்காரணம் ( தொடர கூடாத பதிவு :) )

7

அன்பு நண்பர் பாலாஜி சரவண கணேஷ் ஒரு பதிவ போட்டு நம்ம நாமகரணத்துக்கு என்ன காரணம் இருக்க முடியும்னு நம்மலேயே எழுத சொல்லிருக்காப்ல..  

பிறந்ததற்கே ஒரு காரணம் இருக்கத்தான் செய்யும் போல.. அப்படியிருக்கையில் பெயருக்கு இருக்காதா என்ன ..  மார்ச் மாதம் ஏதோ ஒரு நன்னாளின் இரவு .. நடுநிசியில் பழங்காநத்தம் உள்ளிருந்து வந்த அந்த ஆம்புலன்ஸ் வண்டியை ஒட்டி வந்த அந்த டிரைவருக்கு தெரியாது போல அவரின் நேரம்.. உள்ள இருந்த அந்த பெண்மணி பிரசவ வலியால் துடித்து கொண்டிருக்க அந்த ஆம்புலன்ஸ் மதுரை பெரிய ஆஸ்பத்திரியை நோக்கி விரைந்து கொண்டிருக்கயில், சரியாக மதுரை பைபாஸ் ரோட்டில் இருந்து திருமங்கலம் செல்லும் ஒரு லாரி, மெஜிரா காலேஜ் அருகில் இருந்து அதே திருமங்கலம் செல்லும் இன்னொரு லாரி , திருநெல்வேலியில் இருந்து வேறு எங்கயோ செல்லும் இன்னொரு லாரி. இம்மூன்று லாரிகளும் அந்த் ஆம்புலன்ஸை நெருங்கிய நேரத்தில ஆம்புலன்ஸின் பின் பக்க சக்கரங்களில் ஒன்று வேறுவழி தேடி கழன்று ஒடியது. ஆம்புலன்ஸ் கொடை சாய்ந்து நிற்க, பிரசவ வலியில் துடித்து கொண்டிருந்த பெண்ணின் அம்மா அவர்களின் வீட்டில் அருகே இருந்த ராமர் கோயிலில் குடியிருந்த ராமரிடம் வேண்டி கொண்டது “ பெருமாளே என் பொண்னயும், குழந்தையும் காப்பாத்தி கொடுத்துரு.. குழந்தைக்கு உன் பெயரயே வச்சுடறேன்” ... அதாகபட்டது பெருமாள் காப்பாற்ற அந்த குழந்தை பிறந்ததால் , அந்த குழந்தை இப்ப இந்த மொக்கய போட்டுட்டு இருக்கு உங்க கிட்ட...

பெருமாள் காப்பதிச்சுடா உன்னய.. அது எப்படி உங்களுக்கு தெரியும்...

ஒழுங்கா படிக்கலேன்னா சாமி வந்து கண்ண குத்தும்டா..  அப்படியாது அந்த சாமிய பார்ப்போம் வர சொல்லுங்க....

டேய் நெத்தில எதயாது எட்டுண்டு வெளிய் போடா.. ஏன் நெத்தில ஏதயாது வெச்சுகிட்டாதான் ஒத்துகிவாய்ங்களோ...

இப்படியாக அந்த குழந்தையின் இம்சை தொடரந்ததுக்கு வேறு ஒரு காரணம் இருந்தது..  அது பகுத்தறிவு பகலனவனின் மேல் அந்த குழந்தையின் தந்தைக்கு இருந்த அதித ஈடுபாடு..  இன்றைக்கு வாழும் பெரியார் அல்ல அந்த பகலவன்.. அவர்தான் உண்மையிலேயே வாழும் பெரியார்...

அப்படி இருந்த அந்த குழந்தை இன்றைக்கு , அதாவது திருமணம் முடிந்து எப்படி இருக்கிறது என்றால்...

“ ஏங்க வெளில போறப்ப நெத்தில எதுவும் வைக்காம போகதீங்க..” 

“ ஒ அப்படியாம்மா .. நீயே வெச்சு விட்டும்மா” 

என்று வாழ்ந்து கொண்டிருக்கிறது திராவிடமும் ஆரியமும் கலந்த ஒரு வாழ்க்கையை...

யார் யாருல்லாம் தொடரனும்னு நினைக்கறிங்களோ.. அவஙகல்லாம் தொடராதிங்கன்னு சொன்னா கேக்கவா போறீங்க...

இராமசாமி கண்ணன்.

7 மார்., 2011

மாதொருபாகன்

4நண்பர் பாலாசியின் இந்த கவிதையுடன் தொடங்க தோன்றுகிறது இந்த பதிவை.


வேறென்ன வேண்டும்
கல்யாணிக்கு
ஒருகால் இல்லை
அக்கம்பக்க பிள்ளைகளுக்கு
அவள் அத்தையாகியிருந்தாள்
சிலர் பெரியம்மா பெரியம்மா என்பார்கள்
நானும்தான்...
செல்லையன் மட்டும்
அம்மா என்றுதான் கூப்பிடுவான்
எனக்குத்தெரிந்து
கல்யாணிதான் பலருக்கு
நேற்றுப்பிறந்த பொண்டு பொடிசுகளால்
ஆத்தாவும் ஆகிவிட்டாள்
வேறென்ன வேண்டும்
கல்யாணிக்கு கல்யாணம்தான் ஆகவில்லை.


இவ்வுலகத்தில் பெண்மையின் பெருமை போற்றப்படுவது தாய்மையினால்தான்.   இக்கவிதையின் நாயகி கல்யாணமாகவிட்டாலும் பொடிசுகளால் ஒரு தாயாக ம்திக்கப்படுகிறாள். இந்த சமுகம் ஒரு பெண் திருமண ஆகிய உடனே அவள் தாம்பத்யம் நிறைவடைவது அவள் ஒரு குழந்தைக்கு தாயவாதில்தான் என்று நம்புகிறது. இன்றும் கிராமப்புறங்களில் அன்றி நகரங்களிலும் கூட திருமணமான ஒரு பெண்ணின் அன்னையிடமோ அல்லது அவளது மாமியாரிடமோ கேட்க படும் கேள்வியானது “ என்ன உங்க வீட்டுல ஏதாச்சும் விசேஷமுண்டா ?”.  ஒரு லஜ்ஜையின்றி கேட்கப்படும் இந்த கேள்வியானது எத்தனை பெண்களின் மனதை குத்தி கிழித்து ரணமாக்குகிறது என்று தெரிந்தும் கூட, அதே கேள்வி திரும்பி தம்மயோ அல்லது தம்மை சார்ந்தவரையோ தாக்க கூடும் என்று அறிந்தும் கூட இச்சமுகம் அந்த கேள்வியை மறந்தும் விடுவாதாயில்லை.


திரு. பெருமாள் முருகனின் இந்த நாவலானது நமக்கு உணர்த்த முற்படுவதும், நம்மை கேட்க நினைப்பதுவும் இதுவாகத்தான் இருக்கிறது.  இந்த கதையின் நாயகனான காளிக்கும், நாயகியான பொன்னாளிற்கும் திருமணமாகி பல வருடங்கள் ஆகியும் குழந்தை பேறு இல்லாமல் போக இச்சமுகம் அவர்களை எப்படி அனுகுகிறது என்பதையும், அவர்களின் மனநிலையையும் அவர்களின் பெற்றோர்களின் மனஓட்டங்களையும் படம்பிடித்து காட்டுகிறது இந்நாவல்.  அவ்விருவருக்கும் குழந்தை வேண்டி அவ்விருவரின் பெற்றோர் எடுக்கும் ஒரு முடிவின் வழி நம் பண்டைய மக்களின் சில சடங்குகளை கேள்விகுள்ளாகுகிறார் திரு. பெருமாள்முருகன்.   


மாதொருபாகன் என்பது பார்வதி தேவிக்கு தன் உடலில் சரி பாகத்தை கொடுத்த சிவபெருமானின் பெயர்.  உடலில் சரிபாதிதான் தர முடியாது மனதால் கூட எத்தனை பேர் அதை சாதித்திருக்கிறோம் என்று என்னும் போது பதில் தேடியும் கிடைக்காத ஒன்றாகிறது. இதை எழுதும் போது என் மனது கூட குற்றவுணர்ச்சியால் குறுகி போகிறது.   ஆண் சார்ந்த சமுதாயமாக ஆண்களால் வரையறுக்கப்பட்ட இந்த சமுதாயத்தில் பெண் என்பவள் சக்தியின் அடையாளமாக சொல்ல பட்டாலும் கூட மனம் சார்ந்து ஆண்களால் போகப்பொருளாகவும், ஆண்களை அண்டி வாழ வேண்டிய ஒரு உயிரினமாகவும் அடையாளபடுத்த படுகிறாள் என்பது வேதனைதான்.  ஆண் என்பவன் என்ன தவறு செய்தாலும் அவன் இந்த சமுதாயத்தில் கேள்விக்கு உள்ளாக்கபடுவதில்லை. ஆனால் ஒரு பெண் அவள் உண்மையிலேயே தவறு செய்திருக்காவிட்டாலும் கூட அவள் கேள்வி கனைகளில் இருந்து தப்புவதில்லை . இந்த கதையின் முடிவில் கதையின் நாயகன் காளியின் மேல இத்தகைய ஒரு உணர்வே எஞ்சி நிற்கிறது.  இறைவனை குறிக்க அடிக்கடி நாம் உபயோக படுத்தும் சொற்களனானது “ அவனின்றி அணுவும் அசையாது” ஆனால் இது “ அவளின்றி அணுவும் அசையாது” என்றே இருந்திருக்க வேண்டும்.

இந்நாவலின் ஊடாக திருச்செங்கோட்டின் வராலாற்றையும் அம்மண்ணின் மக்களின் பழக்கவழக்கங்களயும், அவர்கள் தொன்றுதொட்டு பின்பற்றும் சடங்குகளையும் வட்டாரமொழியில் அழகாக எழுதியிருக்கிறார்  திரு. பெருமாள்முருகன்.  

நாவலை படிக்க படிக்க நம்மை அந்த சூழ்நிலைகளிலேயே உலவும் படி செய்திருக்கிறார். நாவலை படித்து முடித்தபின் திருச்செங்கோட்டிற்குஒரு முறை சென்றுவரும் எண்ணமும் வலுத்திருகிறது. 


எல்லாரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகமிது. 


முடிவாக ஒன்றே ஒன்று மட்டும் சொல்லவேண்டியாதகிறது. 


“ பெண்மையை போற்றுதும்... பெண்மையை போற்றுதும் “.


நன்றி : பெருமாள்முருகன் சார், பாலாசி.


இராமசாமி கண்ணன்

2 மார்., 2011

வாசிப்பு என்னும் பேரானந்தம்.

10

சிறு வயதிருலிருந்து எனது நினைவு தெரிந்த நாள் முதல் என்னுடைய முக்கியமான பொழுது போக்கு கனவு காண்பது.. எனக்கு நானே கதைகள் சொல்லி கொண்டு ஏதோ ஒரு கனவில் அழைந்த பொழுதுகள் ஏராளம்.   அந்த பழக்கம் பிற்கு வந்த நாட்களில் பல கதை புத்தகங்களை வாசிப்பதில் கொண்டு போய் சேர்த்தது.  

மற்ற சிறுவர்கள் பூந்தளிர், அம்புலிமாமா, சிறுவர் மலர் என்று படித்து கொண்டிருந்த காலத்திலேயே ஆனந்த விகடனை வாசிக்க காத்து கிடப்பேன் நான்.   ஏனோ எனக்கு புராண காலத்து கதாபாத்திரங்களின் மேல அந்த அளவு ஈடுபாடு இருந்தது இல்லை அந்த நாட்களில். அதானாலேயே என்னவோ காலப்போக்கில் தேவிபாலா, ரமணிசந்திரன் போன்றோர் எழுதிய நிகழ்கால மனிதர்களை போன்ற கதாபாத்திரங்களை உள்ளடக்கிய நாவல்கள் என்னை பெரிதும் கவர்ந்திருந்தன.  பாடப் புத்தகங்களை தொடாமல் நாவல்கள் , ஆனந்த விகடன் போன்ற புத்தகங்களிலேயே சஞ்சரித்திருந்தது என் மனம். இந்த பழக்கத்தினால் பள்ளியில் மதிப்பெண்கள் குறைய குறைய வீட்டில் வசவும் அடியும் ஏறுமுகம் அடைந்தது.

சிறுவயதிலேயே என்னிடம் ஒட்டிகிடந்த பிடிவாத குணம் அடிகளையும் வசவுகளையும் தாண்டி கதை புத்தகங்களை நோக்கி என்னை ஒட வைத்தது. வீட்டிற்கு தெரியாமல் கதை புத்தகங்களை எடுத்து பள்ளி பையினில் மறைத்து வைத்து பள்ளிக்கு எடுத்து சென்று படிக்கும் அளவுக்கு மனம் பித்து பிடித்து போயிருந்தது.   எப்படியோ பள்ளி பருவத்தை தத்தி தத்தி முடித்து , கல்லூரியில் அடி எடுத்து வைத்த நாட்களில் என் நண்பன் சங்கரநாரயணின் வாயிலாக பாலகுமாரனும் சுஜாதவும் அறிமுகமானர்கள். என் உலகம் மாறிப்போனது. அவர்களின் எழுத்துகளின் வாயிலாக எனக்கு புது புது மனிதர்கள் அறிமுகமானர்கள்.  கிட்ட தட்ட என் கனவுகளில் கணேஷ் வசந்துடன் அவர்கள் திரிந்த எல்லா இடங்களிலும் சுற்றி திரிந்துருக்கிறேன் நான். கணேஷ் வசந்த் அளவுக்கு என்னில் தாக்கத்தை ஏற்படுத்தியது விவேக்..   இந்த விவேக் எழுத்தாளர் திரு ராஜேஷ் குமார் அவர்களின் ஹீரோ.. 

திரை கதாநாயகர்களை விட இந்த புத்தக கதாநாயகர்களின் மேல அளவிட முடியாத ஈர்ப்பு எனக்கு ஏற்பட சுஜாதா, ராஜேஷ்குமார் அவர்களின் எழுத்தை விட என்ன காரணம் இருக்க முடியும்.  பாலகுமாரனின் மெர்குரிபூக்கள், இரும்பு குதிரைகள் இன்னும் எத்தனை எத்தைனையோ புத்தகங்களை சொல்லி கொண்டே போகலாம்..  வேலைக்கு வந்த உடன் நண்பர்களின் அறிமுகத்தால் ஒரு முறை புத்த்க காட்ச்சிக்கு சென்ற போது என் தந்தைக்கு பரிசளிக்க வேண்டி வாங்கிய புத்தகங்கள் பொன்னியின் செல்வனும், அலைஒசையும்.  வாங்கிய நாளுக்கும் ஊருக்கு கிளம்பும் நாளுக்கும் இடைவெளி அதிகமிருந்ததால் அந்த இரண்டு புத்தகங்களையும் வாசிக்க ஆரம்பித்தேன்.. வாசிக்க வாசிக்க புராண கதாபாத்திரங்களின் மேல நான் கொண்ட எண்ணம் சுக்கு நூறக கண்டேன்..  எல்லையில்லா பேரானந்தம் கிடைத்தது அந்த புத்த்கங்களின் மூலம்.  வந்தியத்தேவனும், குந்தைவை பிராட்டியாரும், அருள்மொழிவர்மனும் பழுவேட்டரையர்களும் மனதில் நீங்காமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இன்றைக்கும்.. 

இன்னும் எத்தனையோ புத்தகங்கள் இருக்கிறது படித்து ரசிக்க.. பதிவுலக சகாக்கள் மூலம் இன்னும் நிரைய புத்தகங்களை காண கிடைத்திருக்கிறது. ஒவ்வொன்றாக பேசலாம் என்றிருக்கிறேன்.. யாரேனும் சிலர் புதிதாக புத்தகங்களை அறிமுகப்படுத்தினாலும் மகிழ்ச்சியடைவேன். வாசிப்பை விட என்ன இருக்கிறது இந்த வாழ்வில்..  பல பல மனிதர்களை நேரினில் சந்திப்பதை போன்ற அனுபவத்தினை தருவது புத்தகங்கள் தானே..  இந்த தடவை இந்தியாவில் இருந்து திரும்பும் போது டிஸ்கவரி புக் பேலஸ் போய் நிரைய புத்தகங்கள் வாங்கி வந்திருக்கிறேன்..  மேலும் அன்பு நண்பர் மயில்ராவனனும் சில புத்தகங்களை தந்திருக்கிறார்.  ஒவ்வொன்றாக வாசிக்க வேண்டும்.  வாசித்த புத்தகங்களை பற்றி நேரம் கிடைக்கும்போது பேசலாம் மக்காஸ் ! 

இராமசாமி கண்ணன்.