12 ஆக., 2011

பிறவிப்பெருங்கடன்

5


செந்தமிழ் செல்வியிடம்
காதலை சொல்ல
ஏன் யோசித்திருந்தேன்
என்று நினைவில்லை
சொல்ல நினைத்த
அந்த நாளில்
அவள் செல்வியாக இல்லை

அலுவலகத்தில்
பக்கத்து இருக்கை
வளர்மதி வெளியே
கூப்பிடுகையில்
ஏன் என்றே
புரிந்ததில்லை
எதிர் இருக்கை
ஜெயராஜ்
வளர்மதியுடன்
கல்யாணம்
என்று சொல்லும்வரை

முப்பது வயதில்
பெண் பார்க்கவா
என்று அம்மா
கேட்ட போதாது
இசைந்திருக்கலாம்
தலையில் முடியாது
இருந்தது


கடலைக்குடி ஜோசியன்
சொல்லியிருக்கிறான்
கட்டாயம் இரண்டு
திருமணமென்று
ஒன்றாவது நடக்கிறதா
பார்க்கலாம்
வயது நாற்பதாகிறது.

இராமசாமி கண்ணன்.