16 டிச., 2011

ஆயுள் ரேகை # 2

3தவை யாரோ தட்டுவது போல் இருந்தது.

கையில் இருந்த மருந்து பாட்டிலயும் சிரிஞ்சயும் வெறித்து பார்த்தபடியே இருந்தேன்.

தொடர்ந்து ஒரு நிமிடத்திற்கு கேட்ட கதவை தட்டும் சத்தம் திடிரென்று நின்றுபோனது. கை வலித்திருக்கும் போல. தட்டியது எதிர்த்த நாயர் டீக்கடை பையனாக இருக்கும். நாராயணன் பாக்கியை செட்டில் செய்தானா என தெரியவில்லை.

அந்த பையனை போய் கூப்பிடலாமா என்று தோன்றியது. சாகும் போது கடனாளியாக சாகக்கூடாது எனற ஒரு எண்ணம்தான்.

அம்மா சொல்வாள் அடிக்கடி

“ ரகு நாம சாகறப்போ நம்ம யாரும் கெட்டவனாவோ, கடன்காரனாவோ நினைக்கப்படாதுடா”.

எதற்கும் நாராயணனிடம் ஒரு தடவை கேட்டுடலாம் என அவனை பார்த்தேன். சற்று முன்னர் துடித்த மாதிரி இருந்த அவன் உடல் இப்பொழுது முற்றும் அடங்கியிருந்தது. அவன் வலது கை மணிக்கட்டில் இருந்து வடிந்திருந்த ரத்தம் அவன் உடம்பை சுற்றி படர்ந்திருந்தது. நாளை ஒரு வேளை போலிஸ் வந்து பார்த்தால் அவர்களுக்கு சாக்பீஸ் தேவையில்லாமல் இருக்கலாம்.

நமக்கு நாமே இந்த மாதிரி வரைந்து கொண்டால் என்ன என ஒரு நிமிடம் தோன்றியது. விரைத்து கிடந்த நாரயணன் பக்கம் போய் நானும் படுத்துக் கொண்டேன். அவன் ரத்தத்தை எடுத்து என் உடம்பை சுற்றி நானே வரைந்து கொள்ள ஆரம்பித்தேன். கால் வரை கை எட்ட வில்லை.

ஒரு நிமிடம் கையை மூக்கின் அருகில் கொண்டு வந்தேன். 

*******************

கிளாஸ் ரூமில் செளந்தரபாண்டியன் சார் கிளாஸ் எடுத்துக்கொண்டிருந்தார்.

“உங்களுக்கு இதெல்லாம் சொல்லக் கூடாதுதான். நான் சொல்லாட்டினாலும் இதெல்லாம் நீங்க கத்துக்கத்தான் போறீங்க.. இல்லேன்னாலும் இந்த காலம் உங்களுக்கு கத்து தந்துரும். கரம்பாம்பூச்சி எப்படி இனப்பெருக்கம் பண்றதுன்னு இந்த புத்தகத்துல போட்ருக்கான். கெரகம் பாரு எதெல்லாம் சொல்ல வேண்டிருக்குதுன்னு. எலேய் ராசா நீ சொல்லு.. இனப்பெருக்கம்னா என்ன ? “ .

எந்திரித்து நின்றவன் பதில் தெரியாமல் முளிக்க

எட்டாம் கிளாஸ் வந்துட்ட இதக்கூட தெரிஞ்சுக்காமஎன்று சொல்லிக்கொண்டே “ நீ சொல்லுடே “ என்றார் அடுத்தவனை பார்த்துக்கொண்டு.

கேள்வி ஒவ்வொருவனாக சுற்றி சுற்றி வர  நாரயணன் என்னிடம் கேட்டான் “ உனக்கு தெரியுமாடா பதில் “

பதிலாக நான் உதட்டைக் குவித்தேன்.

“ நீ எப்படிடா வந்த “ என்றான்.

“ உன் கூட சைக்கிள்ள “ என்றபோது கேள்வி என்னிடம் வந்திருந்தது.

“ நீ எந்திரில..என்றார் செளந்தரபாண்டியன் சார்.

“சொல்லு இனப்பெருக்கம்னா “ என்றார்.

நானும் முளிக்க கேள்வி நாரயணனிடம் போனது. .

எழுந்தவன் அஷ்டகோணலாக ஒரு மாதிரி சிரித்தான்.

“என்னலே சிரிக்க.. வயசுக்கு வந்துட்டியாஎன்றார் அவனைப் பார்த்து. எல்லா பையன்களும் சிரிக்க பெல் அடித்தது. 
*******************

நாராயணனின் ரத்தம் மோர்ந்து பார்க்க நெயில்பாலிஸ் வாடை அடித்தது. 
கால் எட்டாததால் கோடு போட எழுந்திரிக்கவேண்டியிருந்தது. பக்கத்தில் படுத்திருந்த நாராயணனை பார்த்தேன். அவன் முகத்தில் அதே அஷ்டகோணலான சிரிப்பு மீதமிருக்கற மாதிரி தோன்றியது.  
   *******************

 “ நாம எப்பவும் பிரியக்கூடாதுடா ரகுகாட்டுபள்ளி வாசலில் மல்லாக்க படுத்துக்கொண்டு நடசத்திரங்களை எண்ணிக்கொண்டிருந்த என்னிடம் சொன்னான் நாராயணன்.
*******************

நான் என்னை சுற்றி வரைந்த கோடும் நாராயணன் அவனை சுற்றி வரைந்து கொண்டதும் ஒரிடத்தில் ஒன்று சேர்ந்தது. நான் அவனின் தோளை தொட்டு கேட்டேன்....

“ இப்ப நாம பிரிஞ்சுட்டோமாடா ? “.

.
தொடரும்.
 இராமசாமி கண்ணன்.

12 டிச., 2011

ஆயுள் ரேகை

2

”கரிகாலன் காலப் போல” ஒரு சிறு பெண் கதறிக் கொண்டிருந்தது டீவியில்.

வீட்டின் ஜன்னல்கள், கதவை எல்லாம் இறுக்கப்  பூட்டியிருந்தேன். காற்று உள்ளே வராததால் மிக புழுக்கமாயிருந்தது.

நேரத்தை பார்த்தேன் கடிகாரத்தின் பெரிய முள் இரவு ஒன்பதை தொட துடித்துக் கொண்டிருந்தது.

டேபிளின் மேல் ஒரு சிரிஞ்சும், ஒரு மருந்து பாட்டிலும்... அந்த மருந்து என் கதையை நானே முடிக்க சற்றுமுன்தான் வாங்கி வந்தேன்.

“ என்னது ?  ஏன் இப்படி” நீங்கள் பதறலாம் எனக்கு பதற்றமில்லை நான் சாகவேண்டும் அவ்வளவ்வுதான்.

பாட்டிலயும் சிரிஞ்சயும் கையில் எடுத்தேன்.

டீவியில் இப்பொழுது இன்னொரு பையன்

“ மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
  உன்னை விரும்பினேன் உயிரே”

லிசா பாடிக்கொண்டிருந்தாள்.

*******************

லிசா..


லிசா..


லிசா..


எத்தனை தடவை எழுதிப் பார்திருப்பேன் இந்த பெயரை.


+2 ஸ்கூல் பிசிக்க்ஸ் ரெக்கார்டு நோட்டு மூழுவதும் அவளது பெயரேயே எழுதி வைத்திருந்தேன்.


ஸுகூல் ஆனுவல்டே பங்கசனது.


நானும் நாரயணனும் உக்காந்து சரோஜாதேவி புத்தகத்தை மறைத்து வைத்து படித்துக்கொண்டிருந்தோம்.
அப்பொழுது ஹெட்மிஸ்டரஸ் வந்து அடுத்ததாக ஒரு பெண் பாடுவாள் என சொல்லியிறங்க லிசா மேடையேறினாள்.


லிசா பாடி முடிக்கும் வரை நானும் நாரயணனும் வைத்த கண்ணை எடுக்காமல் பார்த்துக் கொண்டே இருந்தோம்.


பாடி முடித்து லிசா இறங்கும் போது எனது கை நாரயணனின் தொடையில் இருந்தது.


திரும்பியும் அதே லிசாவை பார்த்தது பெங்களூருவில் , ஒரு ஜனவரி ஞாயிற்றுக்கிழமையில் லால் பார்க்கில் வைத்து.


நானும் நாராயணனும் கடவுளை பற்றிய ஒரு விவாதத்தில் இருந்தோம் அப்பொழுது.


 “ கடவுள்னா யாரு.. எப்படியிருப்பாரு” தெரியுமா என்றான் நாரயணன்.


“ஆணல்லன் பெண்ணல்லன் அல்லா(து) அலியுமல்லன்
காணலுமாகான் உளனல்லன் இல்லையல்லன்
பேணுங்கால் பேணும் உருவாகும் அல்லனுமாம
கோணை பெரிதுடைத்து எம் பெம்மானைக் கூறுதலே ..”


இந்த பாட்டுக்கு அர்த்தம் தெரியுமா என்றான் நாரயணன்.


கையில் வைத்திருந்த கோல்ட் பிளேக் பில்டர் என்னை சுட்டது.


கையில் பட்ட கங்கை நெட்டி தள்ளும்போது, முன்னாடி இருந்த செம்பருத்தி செடி விலகி.. விலகி..


“நாரயணா .. அம்மன்றா “ என்றேன் அவன் தோளை அழுத்தி.


“ அம்மனா” என்று நிமிர்ந்த  நாரயணன் “லிசாடா” என்றான்.


ரோசாப்பூ பூ டிசைன் போட்ட புடவையில் யாருடனோ கையாட்டி பேசிக்கொண்டிருந்தாள்


லிசா... 

*******************

ஒரு சிகரெட் குடிக்கலாம் என்ற எண்ணம் வந்தது.

என்ன அபத்தம் இது , சாகப்போகிறவனுக்கு எதுக்கு சிகரெட்.. எனக்கே சிரிப்பாக வந்தது..

 *******************

 “அம்மன்றா” என்றவனிடம் “லிசாடா” என்றான் நா....ரா...யணன்.

அம்மனை நினைத்தவுடன் அம்மா நியாபகத்துக்கு வந்தாள்.


அரக்கு கலர் பட்டு புடைவையில், மூக்கில் மினு மினுக்கும் மூக்குத்தியுடன், இடுப்பு வரை  தொங்கும் தலைமுடியுடன் , நெற்றி நிறைந்த குங்கும பொட்டுடன் காலையில் வீடு முழுக்க சாம்பிராணி புகை காட்டிக் கொண்டு வரும் அம்மா.


"ஓம் வாக்தேவ்யை நம"
ஓம் ஸ்ரீ மகாஸரஸ்வதி மந்திரம் :
ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் சரஸ்வதியைபுத ஜனன்னியை ஸ்வாஹா
ஸ்ரீ அணுராதாக்ரமண ஸரஸ்வத்யை நம‌


ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என்னம்மை தூய‌
உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே
இருப்பளிங்கு வாராது இடர்.


தினம் காலை விளக்கேற்றிவிட்டு அம்மா சரஸ்வதி ஸ்லோகம் சொல்வாள்.


 “ ஏம்மா இந்த ஸ்லோகம்லா சொல்றே” ..


“ ஏம்புள்ளை நல்லா படிக்கனும்லியா.. அதான்”


“ நான் படிக்கனும்னா.. நாந்தானே சொல்லனும்”....


“ நான் சொன்னா நீ சொன்ன மாதிரிதான்” ...


அம்மாவிற்கு எல்லாமே நேரம் காலம்தான்...


காலையில் எழுந்திருப்பதிலிருந்து , இரவு தூக்கம் வரை எல்லாம் நேரம் காலம்தான்..


அன்று காலேஜ்லிருந்து திரும்பும் போது.. அம்மா படுக்க வைக்க பட்டிருந்தாள்.. தலை மாட்டில் சாம்பிராணி புகை..

*******************

நேரத்தை பார்த்தேன் .. 9.30 ஆகியிருந்தது.

சிரிஞ்சயும்.. மருந்து புட்டியையும் கையில் எடுத்தேன்.

கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது.

கிழே படுக்க வைத்திருந்த நாராயணன் உடலில் ஏதோ துடிப்பு வந்து போன மாதிரி இருந்தது.

... தொடரும்

 இராமசாமி கண்ணன்.