14 ஏப்., 2014

அப்பாவின் கட்சி

1
அர்த்த ராத்திரியில் ஐம்பது ரூபாய் கேட்ட ஆட்டோகாரனிடம் சண்டை போட்டு முப்பது ரூபாய் கொடுத்து விட்டு வாசலில் படுத்துக் கிடந்த நாயை தாண்டி அப்பாட்மெண்ட் கதவை திறக்கையில்தான் முதல் வீட்டு விளக்கு அணைந்தது. அந்த வீட்டு பெண் +2 படிக்கிறாள். என் ஃப்ளாட்டின் வாசலுக்கு வந்து காலில் அணிந்திருந்த ஷூவை அப்படியே களட்டி பக்க வாட்டில் வீசி விட்டு கதவை திறக்க எத்தனிக்கையில், கதவை அந்த பக்கதிலிருந்து திறந்து அப்பா வெளியே வந்தார்.
”இப்பத்தான் வரியா ? “ என்றபடி வெளியே விரித்திருந்த அவரின் கட்டிலுக்குப் போனார். அப்பொழுதுதான் டீவி அணைந்திருந்தது. தேர்தல் நேரம். அவர் ஒரு கட்சியில் ஆயுள் கால தொண்டர். என் பெட்ரூம் கதவை திறந்து உள்ளே போனால் தூங்கி கொண்டிருந்தாள். டிரஸ் சேஞ்ச் செய்து வெளிவருகையில் அம்மா ரெடியாக இருந்தாள். அப்பா டீவி பார்த்ததால் உள்ளறையில் படுத்திருந்திருப்பாள் போல. ”என்னம்மா தூங்கலையா?” என்றேன். ”நீங்கள்லாம் வந்து சாப்பாடு போடாம என்னிக்கு தூங்கிருக்கேன்” என்றாள். எனக்கு சாப்பாடு போட்டு விட்டு அவளும் சாப்பிட்டு விட்டு பாத்திரங்களை அவள் எடுத்து வைக்க நான் பெட்ரூமிற்குள் நுழைந்தேன்.

பெட்டில் படுக்கையில், தூங்கி கொண்டிருந்தவள் 
“சாப்டீங்களா ? “ என்றாள். 

நான் வருவதற்காக முழித்துக்கொண்டே தூங்கிகொண்டிருந்திருப்பாள் போல. 

“ம்...” என்றவனிடம் 

“அய்யா இன்னிக்கும் பிஸி போல “ என்றாள்.
”அப்படில்லாம் இல்லை “ என்றவனிடம் 

“அப்புறம் மத்தியம் லஞ்ச் முடிஞ்சு வந்த உடனே எப்பவும் கால் வரும்.. இன்னிக்கு வரலை” என்றவளிடம், 

”நான் கால் பண்ணினேன் நீ தூங்கிட்டு இருந்த” என்றேன். 

“அப்படின்னு சொன்னாங்களா ?” என்றாள்.

என்ன பேசுவதென்று தெரியாமல் மெளனம் காத்தவனை நோக்கி

”இந்த வீட்டுல எனக்கு என்னென்ன உரிமைங்க இருக்கு ? “

அடுத்த அம்பு பாய்ந்து வர அந்த நேரத்தில் என்ன செய்ய என்று தெரியாமல் புரண்டு படுத்தேன்.

காலை எழுந்து வருகையில் மறுபடியும் அப்பாவின் கையில் டீவி ரிமோட் இருந்தது. எரிச்சலுடன் அவரை பார்த்துக்கொண்டே பல்லை தேய்த்து விட்டு வாங்கி போய் விட்டு வர அப்பா எங்கேயோ போய் வாங்கி வந்த கீரையை அம்மா ஆய்ந்து கொண்டிருந்தாள். குளித்துவிட்டு ஆபிஸ் கிளம்பும் நேரத்தில் திரும்பியும் டீவி ரிமோட்டை தூக்கிய அப்பாவை பார்த்து கொஞ்ச நேரம் ஏதாச்சும் பாட்டு போடுங்கப்பா என்றேன்.  ஒரு தடவை என்னை நிமிர்ந்து  பார்த்து விட்டு ரிமோட்டை என்னிடம் கொடுத்துவிட்டு எதுவும் சொல்லாமல் குளிக்கப்போய்விட்டவரை 
திரும்பி பார்க்காமல் நான் கிரிக்கெட் சேனலை போட்டு விட்டு உட்கார்ந்துவிட்டேன். சாப்பிட்டு கொண்டே டீவியை பார்த்துகொண்டிருந்தவனிடம் “ம்ம் கிரிக்கெட்டா “ என்றபடி நகர்ந்து போனாள்.

ஆபிஸ் வந்து காலையில் ஆரம்பித்த ஒரு வேலை முடியாமல் இழுத்து அடிக்க லஞ்ச் போய் விட்டு நேற்றைய இரவு நியாபகம் வர மொபலை எடுத்து வீட்டுக்கு அடிக்க அம்மா ஃபோனை எடுக்கையில் வீட்டில் டீவியில் அப்பாவின் கட்சியின் தலைவர் பேசிக்கொண்டிருக்கும் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. எல்லாரிடமும் பேசிக்கொண்டிருந்து விட்டு திரும்பவும் வேலையில் முழ்கினேன்.. சாயங்காலம் ஏழு மணிக்கு ஆபிசில் ஏதோ நெட்வொர்க் பிரச்சினை செய்ய மேனேஜரிடம் சொல்லிவிட்டு வீட்டிற்கு திரும்பினேன். அப்பாட்மெண்ட் உள்நுழைகையில் ஏதோ ஒரு வீட்டிலிருந்து ஹர்ஷா போக்ளே பேசிக்கொண்டிருக்கும் சத்தம் கேட்டுக்கொண்டிருக்க அப்பொழுதான் நடந்து கொண்டிருக்கும் டி20 உலககோப்பையை பற்றி நியாபகம் வந்தது. உள்ளே நுழைந்த உடனே அப்பா கையில் இருந்த டீவி ரிமோட்டை வாங்கி டீவியை கிரிக்கெட்டுக்கு மாற்றினேன். இனிமே நான் டீவியே பார்க்கமாட்டேன் என்று அம்மாவிடம் சொல்லிக்கொண்டே அப்பா வெளியே விரித்திருந்த கட்டிலை நோக்கி போனார்.
கிரிக்கெட் பார்த்துவிட்டு மேட்ச் முடிந்து பெட்ரூமிற்குள் நுழைகையில் மணி பதினொன்றை தொட்டிருந்தது. “உங்களுக்கு கிரிக்கெட்டு,உங்க அப்பாவுக்கு கட்சி அரசியல்,, எனக்குல்லாம் எப்பங்க டீவி கிடைக்கும் ? “ என்றவளிடம் ”இன்னும் ஒரு மாசம் வெயிட் பண்ணு ரெண்டுமே முடிஞ்சிரும்.. அப்புறம் டீவி உனக்குத்தான்” என்றவனை கோபமாக பார்த்தவளை அணைத்துக்கொள்ள அந்த இரவு அப்பொழுதான் தொடங்கியது. 

அடுத்த நாள் காலையில் குளித்துவிட்டு ஆபிசுக்கு கிளம்புகையில் செய்திகளை பார்த்துகொண்டிருந்த அப்பாவிடம் 
“ஒவ்வொருத்தனும் எவ்வளவ்வு கொள்ளை அடிக்கிறான். அவன் பேசறத உக்காந்து பார்த்துட்டு இருக்கிங்களே விடிய விடிய” என்றவனிடம் 

“ எவந்தான் கொள்ளையடிக்கல ? “ என்றார். 

அவரிடம் என்னிக்குமே இப்படியே வாயை பிடிங்கி வாங்கிகட்டிக்கொள்வது எனக்கு பிடித்த விசயம்.

சற்று விவாதம் நீள நான் கொஞ்சம் குரலை உயர்த்திபேச , 

“ இதான் உங்கிட்ட பேச எனக்கு பயமா இருக்கு. நிதானமா விவாதம் பண்ணனும்னா பண்ணலாம்.. நானும் நிறைய பேசுவேன்” என்றவரிடம் 

“அப்படின்னா அவங்க கொள்ளை அடிக்கலைன்னு சொல்ரீங்களா ? “ என்றேன். 

என்னை எரிச்சலுடன் பார்த்தவர் 

“என்னைய பிடிக்கலைன்னா சொல்லு. நான் ஊருக்கு போயிடறேன்” என்றபடி டிவியை நிறுத்தி விட்டு கோபத்துடன் உள்ளே எந்திரித்து போனார். 

அப்பொழுது பார்த்து ஊரிலிருந்து கால் செய்த அத்தையிடம் அப்பாவை பற்றி பேச்சுவர “உங்கண்ணா ரொம்ப பிஸி அத்த. மொதநாள் நைட்டு பார்த்த தலைவரோட பேச்ச, அடுத்த நாள் காலைல எல்லா நியூஸ்லயும் ஒரு தடவ சரியா காமிக்கிறானான்னு பார்க்கிறார். அதோட கட்சி பேப்பர வேற வாங்கி அதுல சரியா போட்ருக்கானான்னு ஒரு தடவ கிராஸ் செக் பண்ணிக்கிறார்” என்றேன். 

சிரித்துக்கொண்டே “அவன் பாவம்டா “ என்றாள் அத்தை.

ஆபிஸில் டீ டைமில் பக்கத்தில் வந்து உட்கார்ந்த நண்பனிடம் பேசிக்கொண்டிருக்கையில் பேச்சு அரசியல் பக்கம் சாய்ந்தது. வீட்டில் டீவியில் எப்பொழுதும் ஒடிக்கொண்டிருக்கும் கட்சி சேனல் செய்திகளை சொல்லிக்கொண்டே, அந்த கட்சியின் மீது சிறுவயதில் எனக்கு இருந்த அபிமானங்களையும், தேர்தல் நேரங்களில் தோரணம் கட்டுவதிலிருந்து , பூத் ஏஜெண்டாக இருந்து தேர்தல் வேலைகள் பார்த்த கதைகளை அவனிடம் சொல்லிகொண்டிருந்தேன். பேசி முடித்தவன் “மச்சி சாலரி போட்டுடானுங்க போல” என்றபடி மொபலை பார்த்துக்கொண்டே நகர்ந்து போனான. சீட்டுக்கு வந்து சாலாரி ஸ்லிப்பை பார்க்கையில் இன்கம்டாக்ஸுக்கு வேண்டி பாதி சம்பளம் போயிருப்பது தெரிந்து எரிச்சலாக வந்தது.

இப்படியே வந்த வாரங்களும் தொடர்ந்து அப்பாவுகும் எனக்குமான பனிப்போர் நடந்து கொண்டிருக்க,  அம்மா கூட அப்பாவை பற்றி இடையில் சில தடவை நொந்துகொண்டாள். 

 ”விடும்மா,, வேலை பார்க்கறப்பயே, எலக்‌ஷனுக்கு மட்டுந்தாமா அவர் லீவ் போட்ருக்கார்.. அந்த அளவுக்கு கட்சி வெறி “ 

என்றவனிடம் ம் கொட்டிவிட்டு அம்மா நக்ர்ந்தாள். விடுமுறை நாளானதால் அவளை கூட்டிக்கொண்டு வெளியே கிளம்பிக்கொண்டிருந்தேன். 

ஷூவை மாட்டிக்கொண்டிருக்கையில் அப்பா வந்து டீவியை போட ”என்னப்பா ஒட்டு போட போக டிக்கெட் புக் பண்ணிரட்டுமா  “
 என்றவனிடம்


“எல்லாரும் போனா ஒரு போயிட்டு ஒரு ரெண்டு நாள் தங்கி ஒட்டு போட்டுட்டு வர பத்தாயிரம் ஆகாது. அதெல்லாம் வேண்டாம் இங்கயே இருந்திடலாம்” 

என்றபடி டீவியில் எங்களின் கட்சி தலைவரின் பேச்சை அவர் கேட்க ஆரம்பிக்க நாங்கள் வெளியே நகர்ந்தோம்.

க ரா