பொறுப்பு

நேரம் இரவு 11.30.

ஆபிஸில் ஆடிட் வேலைகள் போய்கொண்டிருக்கிறது. முடித்து திரும்ப தினமும்  நேரம் ஆகிறது. காலிங் பெல்லை அடித்து ஐந்து நிமிடமாகிறது.இன்னும் கதவு திறக்கபடவில்லை. தூங்கி கொண்டிருக்கிறாள் போல.எரிச்சலாக வந்தது. என்ன தூக்கமோ அதுக்குள்ளே... அப்பா ஆபிஸ் முடிந்து வருவதற்கு பன்னெண்டு , ஒரு மணி ஆனாலும் முழித்து கொண்டு கிடக்கும் அம்மா நியாபகம் வந்தாள். மீண்டும் காலிங் பெல்லை அடிக்கலாம் என்று கையை தூக்கும் போது அவள் நடந்து வரும் சத்தம் கேட்டது.

கதவை திறந்தவள் ஒன்றும் பேசாமல் அப்படியே உள்ளே போனாள்.  பின் தொடர்ந்தவன் பேசாமலே இருந்திருக்கலாம். என்ன ஆச்சு ரொம்ப டல்லா இருக்க என்று கேட்டு தொலைத்தேன். “கொஞ்சமாச்சும் பொறுப்பு இருக்காஎன்று ஆரம்பித்தவள் ஒரு பாடு கொட்டி தீர்த்து விட்டு நவினுக்கு உடம்பு சரியில்லை என்று முடித்தாள். ஒன்றுமே பேசாமல் என்னாச்சு என்பது போல் நெத்தியை ஏத்தி இறக்கினேன்..  ஏழு வயது பிள்ளைக்கு மழை நீரில் விளையாட கூடாதுன்னு சொன்னா புரிய மாட்டேங்கிது.. நீங்களும் அவன கண்டிக்கறதே இல்ல என்றவள் ஒரு நிமிசம் நிப்பாட்டி விட்டு பார்த்தானே கண்டிக்கிறதுக்கு என்று முடித்தாள்.

எரிச்சலாக வந்தது. நானும் கத்தி பேச ஆரம்பித்தால் தூங்கும் குழந்தை எழுந்துவிடுவான் என்று அடக்கி வாசிக்க ஆரம்பித்தேன்.

“குழந்தன்னா அப்படித்தாம்மா இருப்பான். நம்மத்தான் பார்த்துகனும் “ என்றேன்.

அது அவளின் ஆத்திரத்தை இன்னும் தூண்டி விட்டது போலாகிவிட்டது.

குழந்தையா குழந்தை .. ஏழு வயசாயிருச்சு .. இன்னுமா குழந்தை என்று ஆரம்பித்தாள்.

இதுக்குமேலயும் விட்டால் இன்று இரவு தூங்கவிடமாட்டாள் என்று தோன்றியதால் சரணாகதி அடைய முடிவுசெய்து. “ சரி விடும்மா.. ரொம்ப டென்சன் ஆகாத நான் வேணா நாளைக்கு ஆபிசுக்கு லீவு போட்டுட்டு அவன ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போறேன் என்றேன்.


சற்றே தணிந்தவளின் தோளை தொட்டு தலைமுடியை கோதிவிட்டு கொண்டே என் தோளில் சாய்த்து கொண்டேன். பெண்ணாக பட்டவள் ஆணிடம் விரும்புவது இந்த ஆதரவைதான். கொஞ்சம் விசும்பினவள் சற்று விலகி சாப்பிட்டீங்களா என்றாள். இல்லை என்றவனிடம் சரி போய் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வாங்க எடுத்து வைக்கிறேன் என்றவளை விலக்கி நகர்ந்தேன்.

டிரஸ் சேஞ்ச் பண்ணி வருவதற்குள் டைனிங் டேபிளில் எல்லாவற்றையும் எடுத்து அடுக்கியிருந்தாள். சற்று நேரம் எதுவும் பேசாமல் அவள் எடுத்து வைக்க எல்லாவற்றையும் சாப்பிட்டு முடித்தேன். பாத்திரங்களை சிங்கில் எடுத்து போட்டு விட்டு வந்தவள் சோபாவில் உட்கார்ந்து டீவி ரிமோட்டை எடுத்தவனை பார்த்து நேரமாச்சு தூங்க வாங்க என்றவளை அதுக்குள்ள எங்க போற வா கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருக்கலாம் வா என்று அழுத்தி பிடித்து பக்கத்தில் உட்கார வைத்தேன்.

“ ஏன் இவ்வளவ்வு டென்சன் ஆகற. ஒரு மாசமா கொஞ்சம் வேலை ஜாஸ்தி ஆபிஸ்ல.. அதுக்கு முன்னாடி நேரத்துக்கு வீட்டுக்கு வந்து உங்க ரெண்டு பேரயும் வெளில கூப்பிட்டு போகாம இருந்திருக்கேனா சொல்லு. “ என்றேன்.

 “ உங்க அம்மாவ இங்க வந்து இருக்க சொல்லலாம்ல. நானும் வேலைக்கு போவேன்ல.. வீட்டுக்குள்ளயே அடஞ்சு கிடக்க வேண்டியிருக்கு. நானும் படிச்சிருக்கேன்.. அந்த படிப்பும் வீணா போவுதில்ல. நானும் வேலைக்கு போனா நாலு காசு கிடைக்கும்.. வீட்டு கடன சீக்கிரம் அடைக்கலாம்ல. உங்கம்மா ஊர்ல இருக்கற வீட்டை வித்துட்டு நம்ம கூடவே வந்திருந்தா கடனயும் அடைச்சிருக்கலாம். நவினயும் பார்த்துகறதுக்கு ஆள் இருந்திருக்கும்.எங்க அம்மா அப்பாவ கூப்பிடலான்னா உங்களுக்கு பிடிக்கல. எனக்கும் அவங்க கூட சேர்ந்திருக்க கொடுப்பினை இல்லை. நான் ஒருத்தியே கிடந்து அல்லாட வேண்டிகிடக்கு இங்க. கேஸ் காலியானலும் நாந்தான் அலையனும். இவனுக்கு உடம்பு சரியில்லேனாலும் நாந்தான் அலையனும்.. என்னன்னு எழுதீருக்கோ என் தலைலஎன்று முடித்தாள்.

“என்ன சண்டைன்னாலும் கடைசியா இதுலயே வந்து நிக்கறியேம்மா.. எப்படி இப்படில்லாம்என்றேன் முகத்தில் வலிந்து திணித்துகொண்ட புன்னகையோடு.
எனது சிரிப்பு அவளின் ஆத்திரத்தை இன்னும் அதிகமாக்கியது.

சிரிப்பை குறைக்காமல் உனக்காது ஒரு குழந்தைய சமாளிக்க வேண்டியிருக்கு. எனக்கு மூணு குழந்தைய சமாளிக்கனும். ஒன்னு நீ , இன்னொன்னு எங்கம்மா இன்னொன்னு எங்க மேனேஜர் என்றேன்.

ஒன்னு பெத்து வச்சிருங்க்கீங்களே அத நான் பார்த்துகிறதால உங்க லிஸ்ட்ல விட்டு போச்சா என்றாள்.

இம்ம்.. நல்லா வக்கனயா பேசறஎன்றவனிடம் “ பேசாம தூங்க போனவள இழுத்து வச்சு வம்பு பன்னிட்டு இருக்கீங்களா.. என்னய விடுங்க நான் தூங்க போறேன்.. ஒன்னே ஒன்னு மட்டும் சொல்றேன் உங்கம்மாவுக்கு போன போட்டு இங்க வர சொல்லுங்க.. இல்லேன்னா நீங்க வீட்டுல இருந்து அவன பார்த்துகோங்க.. என்னால முடியல .. நான் வேலைக்கு போறேன் “ என்றபடியே எழுந்து போனாள்.

யாரை என்ன சொல்ல என்று தெரியாமல் குழம்பி போய் உட்கார்ந்தேன்.
அம்மாவிடமும் பேச முடியவில்லை. அப்பா இருந்த வரைக்கும் செரி, என்னிடமும் செரி அவள் எதையும் கேட்டது இல்லை. அப்பா போன உடனே வீட்டை விற்று விட்டு ஏன் கூடயே கூப்பிட்ட போதுதான் இல்லப்பா நான் இங்கயே இருந்துட்டறேன் என்றவாரு இருந்துவிட்டாள். என் மேல அவளுக்கு பாசம் ஜாஸ்தி. படிப்பை முடித்தவுடன் அப்பா உள்ளூரிலயே வேலை வாங்கி கொடுத்து அங்க்யே இரு என்று சொல்ல இல்ல்ல நீ இங்க இருந்தா உருப்படாம போயிருவ மெட்ராஸ் பார்த்து ஒடு என்று துறத்தி விட்டவள் அவள்தான். கல்யாணம் ஆன பிறகு ஒரு ரெண்டு மூணு வருசத்துக்கு அப்பா அம்மா ரெண்டு பேரும் இங்க வந்து இருந்தாலும் அவர்களுக்கு தீப்பெட்டிகளை அடுக்கி வைத்த மாதிரியிருக்கும் இந்த அடுக்குமாடி குடியிருப்பு பிடித்தமாகவில்லை. ஊருக்கே திரும்பிவிட்டார்கள் . அதற்கு பிறகு நவின் பிறந்த பிறகு கொஞ்ச நாள் இங்கே வந்து இருந்தார்கள். அப்பொழுதான் இவள் அப்பா அம்மாவின் இருப்பை காரணம் காட்டி
வேலைக்கு போகும் பேச்சை ஆரம்பித்தாள். இதை கேட்ட அப்பா அதெப்படிம்மா பொறந்த பச்ச குழந்தைய விட்டுட்டு வேலைக்கு போற என்று ஆரம்பிக்க பெரிய சண்டையானது. அந்த பக்கமும் பேச முடியாமல் இந்த பக்கமும் பேச முடியாமல் போக என்னிடமும் கோபித்துகொண்டு திரும்பியும் ஊருக்கே போய் விட்டார்கள் அதுக்கப்புறம் விடுமுறை தினங்களுக்கோ, விசேஷ தினங்களுக்கோ இங்கே கூப்பிட்டு விட்டால் அப்பா வழுக்கட்டாயமாக வர மறுத்துவிட்டார். நான் இவளைத்தான் சமாதான படுத்தி அழைத்து போகவேண்டியிருந்ததது.

பின்னர் அப்பா போனபின்பு அம்மாவை அழைத்த போதும் கூட வீட்டை விற்க சொன்னதால் அதற்கு சம்மதிக்காமல் அவளும் அங்கயே இருந்து விட்டாள். பின்னர் அவளை மாதிரியே இருந்த நாலு வயதான பெண்களை சேர்த்துகொண்டு அதை முதியோர் இல்லம் மாதிரி ஆக்கிகொள்ளட்டுமா என்றவளிடம் ஒன்றும் சொல்ல முடியவில்லை. இதெல்லாம் இவளுக்கு ஆத்திரத்தையும் ஆதங்கத்தயும் கூட்டிகொண்டே போனது. ஆரம்பத்தில் அவளது அப்பா அம்மாவை கூட்டிகொண்டு கூட வைத்துகொள்ள வேண்டும் என்று சொன்னபோது அதை நான் மறுத்ததும் இவளுக்கு பெரிய கோபம்.
இதையெல்லாம் யோசித்து கொண்டிருந்தபோது நேரம் போவதே தெரியாமல் போனது. திரும்பி நேரத்தை பார்த்த போது மணி ஒன்றை நெருங்கியிருந்தது.

கண்களை தூக்கம் அழுத்த படுக்கைக்கு போனால் அங்கே இவள் தூங்காமல் புரண்டு கொண்டிருந்தாள். சத்தம் போடாமல் அவளின் கையை தூக்கி என் நெஞ்சில் வைத்து கொண்டவன் என்னம்மா கோபமா சாரி என்றேன். திரும்பியவளின் கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்த கரை இருந்தது. ஹேய் லூசு இதுக்கெல்லாம அழுகறது இங்க வா என்று அவள் முகத்தை தூக்கி என் மார்போடு வைத்தழுத்திகொண்டு


 “சின்னஞ்சிறு கண்மலர்
செம்பவள வாய்மலர்
சிந்திடும் மலரே ஆராரோ!
வண்ணத்தமிழ்ச் சோலை
மாணிக்க மாலை ஆரிரோ,
அன்பே ஆராரோ!
” 



என்று மெலிய குரலில் பாட ஆரம்பித்தேன். இது சிறுவயதில் அம்மா என்னை தூங்க வைக்க அடிக்கடி பாடிய தாலாட்டு பாட்டு. நானும் இவளுக்காக அவ்வப்போது பாட வேண்டியிருக்கிறது. அப்படியே இருவரும் தூங்கி போனோம்.

அடுத்த நாள் காலை எழுந்திருந்த போது ஹாலில் இவன் அழும் சத்தமும் அவள் ஏதோ இவனை அதற்றிகொண்டிருக்கற சத்தமும் கேட்டது. கணகளை முழித்து நேரத்தை பார்த்தால் காலை எட்டாகியிருந்தது. இன்னிக்கு லிவெடுக்கவில்லையென்றால் இவளின் கோபம் இன்னும் கூடுமென்றபடியால் பல் தேய்த்துவிட்டு மேனேஜருக்கு டயல் செய்தேன். அவர் “ என்ன சார் பொறுப்பில்லாம இருக்கீங்கஎன்று ஆரம்பித்தார். பொறுப்பென்றால் என்னவென்று தெரியாமல் கோபம் வந்தது.


இராமசாமி கண்ணன்.

க ரா

புத்தகங்களை வாசிப்பதில் விருப்பமுள்ள எளிய மனிதன். சும்மா கிறுக்கி பார்க்கிறேன்.

2 கருத்துகள்

உங்கள் கருத்து என்னை உற்சாக படுத்தும்.

  1. ரொம்ப அருமையா இருக்குங்ணா. ஒரே முச்சுல பெருமூச்சு வாங்க வச்சிட்டீங்க.. தாலாட்டு பாட்ட ஆரம்பிச்சவுடனே எனக்கு கண்கள் பனித்தது.. என்னியல்பை மீறி மனம் தவித்தது.. நல்ல படைப்பு..

    பதிலளிநீக்கு
புதியது பழையவை

தொடர்பு படிவம்