குள்ளநரிக்கூட்டம்



”நம்ம ஏற்கனவே எங்கேயாது சந்திச்சிருக்கோமோ சார்? ” என்று கேட்டுகொண்டே அருகில் வந்து உட்கார்ந்தார் அவர்.  எனக்கு அவரை எங்கேயும் சந்திக்காத மாதிரியே இருந்தது.  இல்லை என்கிற மாதிரி ஒரு மாதிரி மத்தியமாய் தலையசைத்து வைத்தேன்.   என் பெண் அமிர்தாவின் ஸ்கூல் பேரண்ட்ஸ் டீச்சர் அசோசியேஷன் மீட்டிங்குக்கு வந்து உட்கார்ந்திருந்தேன்.  வருடம் முடியப் போகிறது. இது வரை ஒரு நாலைந்து முறை நடந்திருக்கும். ஒவ்வொரு முறையும் கூப்பிட்டும் வராமல் ஏதாவது சொல்லி ஒப்பேத்தி கொண்டிருந்தேன். இந்த முறை விடாமல் ஒரு வாரமாக போராடி என்னை வரச்செய்து   விட்டாள் என் பெண்.   நான் திரும்பி ஏதேனும் பேசுவேன் என்று எதிர்பார்த்திருப்பாரோ என்னவோ, நான் எதுவுமே பேசாததால் என்னருகிலிருந்து நகர்ந்து வேறு இடத்தில் போய் உட்கார்ந்தார். 


இதே மாதிரிதான் என் ஆபிஸ் கொலிக் ராமச்சந்திரன் மகன் திருமணத்தில் இதே மாதிரி சொல்லிக்கொண்டு பக்கத்தில் வந்து உட்கார்ந்தார் ஒருவர். வேறு வழியில்லாமல் பேச வேண்டியதாய் போனது. சாப்பாட்டு பந்தியில் கூட பக்கத்தில் வந்து உட்கார்ந்தவர் விடாமல் பேசிக்கொண்டே இருந்தார். முடிவில் வற்புறுத்தி எனது போன் நம்பரை வாங்கிகொண்டார். ஆபிசில் மேனேஜர் ஒரு நாள் வராமல் போனாதால், ரிலாக்ஸாக கிரிக்கெட் ஸ்கோர் பார்த்துக்கொண்டே வேலை பார்த்துக்கொண்டு இருக்கும் போது அந்நோன் நம்பர் ஒன்றில் வந்த ஒரு காலை அட்டண் செய்திருக்க கூடாது. செயத்தது பெரிய வமபாகி போனது. தான் ஒரு மல்டிலெவல் மார்க்கெட்டிங் குழுமத்தில் சேர்ந்து பிசினஸ் செய்வதாகும், நானும் சேர்ந்தால் எனது மகள் திருமணத்திற்கு உபயோகமாய் இருக்கும் என்றும் சொன்னார். எனது மகளிற்கு இப்போதுதான் ஒன்பது வயதாகியிருந்தது. வேண்டாம் சார் இதுக்கெல்லாம் சரி பட்டு வரமோட்டேன் என் சொல்லியும் விடாமல் வீட்டு பாத்ரூமில் இருக்கும்போதும் , மார்க்கெட்டில் கறிகாய் வாங்கிக் கொண்டிருக்கும் போதும், சிக்னலில் கீரின் சிக்னலுக்காக வெயிட் பண்ணிக்கொண்டிருக்கும்போது என நேரம் காலம் பார்க்காமல் கால் வருவது வாடிக்கையாகி போனது. ஒரே நம்பரில் இருந்து பேசினால் கட் பண்ணி விடுவேணோ என வேறு வேறு நம்பரில் கால் செய்து ஒரே ரோதனையாகிப் போனது. வேறு வழியில்லாமல்  ஒரு ஞாயிற்றுக்கிழமையில் அவர் சொன்ன இடத்திக்கு போனேன். கூல்டிரிங்ஸெல்லாம் கொடுத்து வரவேற்றவர் இன்னும் வேறு சிலரோடு என்னை சேர்ந்து உட்கார சொன்னவர் இதோ ஒரு நிமிசம் என்று நகர்ந்து போனார்.


அவர் எங்களிடமிருந்து நகர்ந்து போய் ஒரு பத்து நிமிசம் கழித்து அங்கே மேடை மாதிரி போட்டிருந்த ஒன்றில் ஒரு சேரில் உட்கார்ந்திருந்த ஒருவர் மைக்கை பிடித்து பேச ஆரம்பித்தார். முப்பாதாயிரம் ரூபாய் கட்டி அவர்கள் அமைப்பில் சேர்ந்தால் சில பொருடகள் தருவார்கள் எனவும் , அதை விற்பதுடன் , நம்மை மாதிரியே இன்னும் எத்தனை பேரை முடியுமோ அத்தனை பேரை சேர்த்து விட்டால் பணம் இரட்டிப்பாய் கிடைக்கும் என்று சொன்னார்.   கேட்டதும் கிளம்பும் வழியை பார்த்து திரும்ப ஆரம்பித்தேன். எழும்ப முடியாமல் சுற்றி ஒரே கூட்டம். இதில் என்னை கூப்பிடவர் வேற மைக்கில் பேசியவரிடன் என்னை காட்டி காட்டி என்னமோ சொல்லிக்கொண்டிருந்தார்.  வயிற்றில் கிலி கிளம்பியது. ஒரு வழியாக வழி கிடைத்து எழுந்து ஒட முயன்ற போது , என்னை கூப்பிடவர் ஒடி வந்து என் கையை பிடித்துக் கொண்டார். முப்பாதியிரத்தை கூட அவரே கொடுத்து விடுவாதகாவும் நான் ஒவ்வொரு மாசமும் கொஞ்சம் கொஞ்சமாக திருப்பி கொடுத்தால் போதும் என்றும் சொன்னார். வீட்டில் பேசி சொல்வதாக சொல்லிவிட்டு வண்டியை விரட்டி கிளம்பியவன், வரும் வழியில் கடையில் நின்று மொபைல் நம்பரை மாற்றி விட்டுதான் வேறு வேலை பார்த்தேன்.  வீட்டுக்கு வந்து இவளிடம் சொன்ன போது ஒரு வாரம் விடாமல் என்னை பார்த்துக் கொண்டு சிரித்து கொண்டிருந்தாள்.


அதற்கப்புறம் எந்த கூட்டம் கூடும் இடத்துக்கும் தனியே போகாமல் யாரையாது கூட சேர்த்துகொண்டுதான் போய்வருவது. இந்த பேரண்ட்ஸ் டீச்சர் மீட்டிங்குக்கு வழக்கமாய் என் மனைவிதான் வந்துபோவது. இந்த தடவை கூட நானும் அவளும்தான் வருவதாக இருந்தது , முடிவில் தலைவலி என என்னை மட்டும் அனுப்பிவைத்து விட்டு வீட்டில் டீவி சீரியலில் முழ்கி விட்டாள். வேறு வழியில்லாமல் வந்து உட்கார்ந்திருவனிடம் திரும்பியும் இப்படி இன்னொருவர் வந்து இப்படி ஆரம்பிக்கவும் டரியலாகிப் போனது. ஏதேச்சையாக திரும்பி பார்த்தேன். சற்று தொலைவில் போய் உட்கார்ந்த அவர் அங்கே இருந்தும் என்னையையே பார்ப்பது மாதிரி இருந்தது. பேசாமல் தலையை குனிந்து மொபலை நோண்ட ஆரம்பித்தேன். 




ஒரு வழியாக பத்து மணிக்கு ஆரம்பிப்பதாக சொன்ன மீட்டிங் ஒரு மணி நேரம் களித்து பதினோரு மணிக்கு ஆரம்பித்தது. முதலில் மைக்கை பிடித்த பள்ளி ஹெட்மிஸ்டரஸ் எல்லா பெற்றோரையும் வரவேற்று பேசி விட்டு , வாசித்தலின் அருமைகளை பற்றி பேச ஆரம்பித்தார். முடித்தவுடன் இன்னொருவரை அறிமுகம் செய்துவிட்டு அவர் கையில் மைக்கை ஒப்படைத்துவிட்டு அவர் சேரில் போய் உட்கார்ந்தார். மைக்கை பிடித்தவர், அவரின் தொழில் அறிமுகத்தினை முடித்தபின் தான் ஒரு திட்டம் வைத்திருப்பதாகவும் , அதில் சேர ஒவ்வொரு ஸூடுடண்டும் மூவாயிரம் கட்டினால் போதுமெனவும், அதை கூட மாதம் முண்ணூறு என கட்டினால் போதுமெனவும் சொன்னார். திட்டத்தில் சேரும் ஒவ்வொரு மாணவருக்கும் சில புத்தகங்கள் கொடுக்கப்படும் எனவும் சொல்லி முடித்தார். தொடர்ந்து பேசியவர் ஒரு இருபது நிமிசம் பேசிக்கொன்றுவிட்டு திரும்பி மைக்கை ஹெட்மிஸ்டரஸ்ஸிடம் ஒப்படைத்தார்.  திட்டத்தில் சேர்வது எந்தளவிற்கு உபயோக இருக்கும் என்பதை மீண்டும் ஒரு முறை சொல்லிவிட்டு வந்திருந்த எல்லோருக்கும் நன்றியை சொல்ல கூட்டம் கலைந்தது. 


கூட்டம் முடிந்ததும், மகளிடமும் அவள் கிளாஸ் டீச்சரிடமும் பேசிவிட்டு கிளம்பினேன். வாசலில் வந்து வண்டியை எடுக்கும்போதும் கூட அந்த இன்னொருவர் என்னையையே முறைத்துகொண்டிருந்தார்.   சாயங்காலம் வீட்டினுள் நுழைகையில் பெண்ணிற்கு தலை வாரிக்கொண்டு வாசலில் நின்றிருந்தவளின் முகம் வழக்கத்திற்கு மாறாக சற்று இறுக்கமாக இருந்தது.  என்னவென்று யோசித்துகொண்டே டிரஸ் மாற்றி முகம் கழிவிக்கொண்டு திரும்பியவனிடத்தில் காப்பி டம்ளரை நீட்டிக்கொண்டே “ஸ்கூல்ல என்ன சொன்னாங்க” என்றாள். ஸ்கூலில் நடந்ததை சொன்னவுடன் “ என்ன பண்ண போறீங்க “ என்றவளிடம் என்ன சொல்ல என்று யோசிக்கையில் “பேசாம கொடுத்திருங்க” என்று சொல்லிவிட்டு குடித்துவிட்டு நீட்டிய காப்பி டம்ளரை வாங்கி கொண்டு உள்ளே போனால்.  கதவில் சாய்ந்து நின்று கொண்டிருந்த என் மகள் “ தேங்ஸ்பா” என்று சொல்லிவிட்டு சிரித்துக்கொண்டே உள்ளே போனாள்.
க ரா.

க ரா

புத்தகங்களை வாசிப்பதில் விருப்பமுள்ள எளிய மனிதன். சும்மா கிறுக்கி பார்க்கிறேன்.

4 கருத்துகள்

உங்கள் கருத்து என்னை உற்சாக படுத்தும்.

  1. ஒரு இடத்தில் தப்பித்து இன்னொரு இடத்தில் மாட்டிவிட்டீர்கள் போலெ.

    இதே அனுபவம் எனக்கும்

    பதிலளிநீக்கு
  2. இதில் கொடுமை என்ன என்றால் சில சமயம் இந்த பள்ளிகளின் மோட்டோ என்று ஒன்றிருக்கும்... என் மகள் படிக்கும் பள்ளியின் மோட்டோ லவ் இஸ் சர்வீஸ் ஆனால் பணம் தான் சர்வீஸ் செய்கிறது...

    பதிலளிநீக்கு
  3. @மஞ்சூர் ராஜா அண்ணே நன்றி வருகைக்கு.
    @சூர்யஜீவா நன்றி.

    பதிலளிநீக்கு
  4. முதல் மாட்டல் எந்த சம்பந்தமுமில்லாதது. சுலபமாக நழுவ முடிந்தது.

    இரண்டாவது மாட்டலை, மாட்டல் என்று சொல்ல முடியாது. வேண்டாம் வம்பு என்றோ, எதையோ எதிர்பார்த்தோ தான் வலிய வழங்கியது. எல்லாப் பெற்றோரும் செய்வது தான் என்று சமாதானப்படுத்திக் கொள்ள வேண்டியது. அது பின்னால் ஏற்படப்போவதாக நாம் கற்பிதம் கொள்ளும் எண்ணங்களைச் சமனப்படுத்தும்.

    'பேசாம கொடுத்திருங்க..' என்னும் ஒற்றை வரியில் நிகழ்வின் முழுவலியும் பதுங்கியிருக்கிறது.

    பதிலளிநீக்கு
புதியது பழையவை

தொடர்பு படிவம்