எழுத்தும் வாசிப்பும்

அப்பாவின் கட்சி
அர்த்த ராத்திரியில் ஐம்பது ரூபாய் கேட்ட ஆட்டோகாரனிடம் சண்டை போட்டு முப்பது ரூபாய் கொடுத்து விட்டு வாசலில் படுத்துக் கிடந்த நாயை தாண்டி அப்பாட்மெண்ட் கதவை திறக்கையில்தான் முதல் வீட்டு விளக்கு அணைந்தது. அந்த வீட்டு பெண் +2 படிக்கிறாள். என் ஃப்ளாட்டின் வாசலுக்கு வந்து காலில் அணிந்திருந்த ஷூவை அப்படியே களட்டி பக்க வாட்டில் வீசி விட்டு கதவை திறக்க எத்தனிக்கையில், கதவை அந்த பக்கதிலிருந்து திறந்து அப்பா வெளியே வந்தார்.
”இப்பத்தான் வரியா ? “ என்றபடி வெளியே விரித்திருந்த அவரின் கட்டிலுக்குப் போனார். அப்பொழுதுதான் டீவி அணைந்திருந்தது. தேர்தல் நேரம். அவர் ஒரு கட்சியில் ஆயுள் கால தொண்டர். என் பெட்ரூம் கதவை திறந்து உள்ளே போனால் தூங்கி கொண்டிருந்தாள். டிரஸ் சேஞ்ச் செய்து வெளிவருகையில் அம்மா ரெடியாக இருந்தாள். அப்பா டீவி பார்த்ததால் உள்ளறையில் படுத்திருந்திருப்பாள் போல. ”என்னம்மா தூங்கலையா?” என்றேன். ”நீங்கள்லாம் வந்து சாப்பாடு போடாம என்னிக்கு தூங்கிருக்கேன்” என்றாள். எனக்கு சாப்பாடு போட்டு விட்டு அவளும் சாப்பிட்டு விட்டு பாத்திரங்களை அவள் எடுத்து வைக்க நான் பெட்ரூமிற்குள் நுழைந்தேன்.

பெட்டில் படுக்கையில், தூங்கி கொண்டிருந்தவள் 
“சாப்டீங்களா ? “ என்றாள். 

நான் வருவதற்காக முழித்துக்கொண்டே தூங்கிகொண்டிருந்திருப்பாள் போல. 

“ம்...” என்றவனிடம் 

“அய்யா இன்னிக்கும் பிஸி போல “ என்றாள்.
”அப்படில்லாம் இல்லை “ என்றவனிடம் 

“அப்புறம் மத்தியம் லஞ்ச் முடிஞ்சு வந்த உடனே எப்பவும் கால் வரும்.. இன்னிக்கு வரலை” என்றவளிடம், 

”நான் கால் பண்ணினேன் நீ தூங்கிட்டு இருந்த” என்றேன். 

“அப்படின்னு சொன்னாங்களா ?” என்றாள்.

என்ன பேசுவதென்று தெரியாமல் மெளனம் காத்தவனை நோக்கி

”இந்த வீட்டுல எனக்கு என்னென்ன உரிமைங்க இருக்கு ? “

அடுத்த அம்பு பாய்ந்து வர அந்த நேரத்தில் என்ன செய்ய என்று தெரியாமல் புரண்டு படுத்தேன்.

காலை எழுந்து வருகையில் மறுபடியும் அப்பாவின் கையில் டீவி ரிமோட் இருந்தது. எரிச்சலுடன் அவரை பார்த்துக்கொண்டே பல்லை தேய்த்து விட்டு வாங்கி போய் விட்டு வர அப்பா எங்கேயோ போய் வாங்கி வந்த கீரையை அம்மா ஆய்ந்து கொண்டிருந்தாள். குளித்துவிட்டு ஆபிஸ் கிளம்பும் நேரத்தில் திரும்பியும் டீவி ரிமோட்டை தூக்கிய அப்பாவை பார்த்து கொஞ்ச நேரம் ஏதாச்சும் பாட்டு போடுங்கப்பா என்றேன்.  ஒரு தடவை என்னை நிமிர்ந்து  பார்த்து விட்டு ரிமோட்டை என்னிடம் கொடுத்துவிட்டு எதுவும் சொல்லாமல் குளிக்கப்போய்விட்டவரை 
திரும்பி பார்க்காமல் நான் கிரிக்கெட் சேனலை போட்டு விட்டு உட்கார்ந்துவிட்டேன். சாப்பிட்டு கொண்டே டீவியை பார்த்துகொண்டிருந்தவனிடம் “ம்ம் கிரிக்கெட்டா “ என்றபடி நகர்ந்து போனாள்.

ஆபிஸ் வந்து காலையில் ஆரம்பித்த ஒரு வேலை முடியாமல் இழுத்து அடிக்க லஞ்ச் போய் விட்டு நேற்றைய இரவு நியாபகம் வர மொபலை எடுத்து வீட்டுக்கு அடிக்க அம்மா ஃபோனை எடுக்கையில் வீட்டில் டீவியில் அப்பாவின் கட்சியின் தலைவர் பேசிக்கொண்டிருக்கும் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. எல்லாரிடமும் பேசிக்கொண்டிருந்து விட்டு திரும்பவும் வேலையில் முழ்கினேன்.. சாயங்காலம் ஏழு மணிக்கு ஆபிசில் ஏதோ நெட்வொர்க் பிரச்சினை செய்ய மேனேஜரிடம் சொல்லிவிட்டு வீட்டிற்கு திரும்பினேன். அப்பாட்மெண்ட் உள்நுழைகையில் ஏதோ ஒரு வீட்டிலிருந்து ஹர்ஷா போக்ளே பேசிக்கொண்டிருக்கும் சத்தம் கேட்டுக்கொண்டிருக்க அப்பொழுதான் நடந்து கொண்டிருக்கும் டி20 உலககோப்பையை பற்றி நியாபகம் வந்தது. உள்ளே நுழைந்த உடனே அப்பா கையில் இருந்த டீவி ரிமோட்டை வாங்கி டீவியை கிரிக்கெட்டுக்கு மாற்றினேன். இனிமே நான் டீவியே பார்க்கமாட்டேன் என்று அம்மாவிடம் சொல்லிக்கொண்டே அப்பா வெளியே விரித்திருந்த கட்டிலை நோக்கி போனார்.
கிரிக்கெட் பார்த்துவிட்டு மேட்ச் முடிந்து பெட்ரூமிற்குள் நுழைகையில் மணி பதினொன்றை தொட்டிருந்தது. “உங்களுக்கு கிரிக்கெட்டு,உங்க அப்பாவுக்கு கட்சி அரசியல்,, எனக்குல்லாம் எப்பங்க டீவி கிடைக்கும் ? “ என்றவளிடம் ”இன்னும் ஒரு மாசம் வெயிட் பண்ணு ரெண்டுமே முடிஞ்சிரும்.. அப்புறம் டீவி உனக்குத்தான்” என்றவனை கோபமாக பார்த்தவளை அணைத்துக்கொள்ள அந்த இரவு அப்பொழுதான் தொடங்கியது. 

அடுத்த நாள் காலையில் குளித்துவிட்டு ஆபிசுக்கு கிளம்புகையில் செய்திகளை பார்த்துகொண்டிருந்த அப்பாவிடம் 
“ஒவ்வொருத்தனும் எவ்வளவ்வு கொள்ளை அடிக்கிறான். அவன் பேசறத உக்காந்து பார்த்துட்டு இருக்கிங்களே விடிய விடிய” என்றவனிடம் 

“ எவந்தான் கொள்ளையடிக்கல ? “ என்றார். 

அவரிடம் என்னிக்குமே இப்படியே வாயை பிடிங்கி வாங்கிகட்டிக்கொள்வது எனக்கு பிடித்த விசயம்.

சற்று விவாதம் நீள நான் கொஞ்சம் குரலை உயர்த்திபேச , 

“ இதான் உங்கிட்ட பேச எனக்கு பயமா இருக்கு. நிதானமா விவாதம் பண்ணனும்னா பண்ணலாம்.. நானும் நிறைய பேசுவேன்” என்றவரிடம் 

“அப்படின்னா அவங்க கொள்ளை அடிக்கலைன்னு சொல்ரீங்களா ? “ என்றேன். 

என்னை எரிச்சலுடன் பார்த்தவர் 

“என்னைய பிடிக்கலைன்னா சொல்லு. நான் ஊருக்கு போயிடறேன்” என்றபடி டிவியை நிறுத்தி விட்டு கோபத்துடன் உள்ளே எந்திரித்து போனார். 

அப்பொழுது பார்த்து ஊரிலிருந்து கால் செய்த அத்தையிடம் அப்பாவை பற்றி பேச்சுவர “உங்கண்ணா ரொம்ப பிஸி அத்த. மொதநாள் நைட்டு பார்த்த தலைவரோட பேச்ச, அடுத்த நாள் காலைல எல்லா நியூஸ்லயும் ஒரு தடவ சரியா காமிக்கிறானான்னு பார்க்கிறார். அதோட கட்சி பேப்பர வேற வாங்கி அதுல சரியா போட்ருக்கானான்னு ஒரு தடவ கிராஸ் செக் பண்ணிக்கிறார்” என்றேன். 

சிரித்துக்கொண்டே “அவன் பாவம்டா “ என்றாள் அத்தை.

ஆபிஸில் டீ டைமில் பக்கத்தில் வந்து உட்கார்ந்த நண்பனிடம் பேசிக்கொண்டிருக்கையில் பேச்சு அரசியல் பக்கம் சாய்ந்தது. வீட்டில் டீவியில் எப்பொழுதும் ஒடிக்கொண்டிருக்கும் கட்சி சேனல் செய்திகளை சொல்லிக்கொண்டே, அந்த கட்சியின் மீது சிறுவயதில் எனக்கு இருந்த அபிமானங்களையும், தேர்தல் நேரங்களில் தோரணம் கட்டுவதிலிருந்து , பூத் ஏஜெண்டாக இருந்து தேர்தல் வேலைகள் பார்த்த கதைகளை அவனிடம் சொல்லிகொண்டிருந்தேன். பேசி முடித்தவன் “மச்சி சாலரி போட்டுடானுங்க போல” என்றபடி மொபலை பார்த்துக்கொண்டே நகர்ந்து போனான. சீட்டுக்கு வந்து சாலாரி ஸ்லிப்பை பார்க்கையில் இன்கம்டாக்ஸுக்கு வேண்டி பாதி சம்பளம் போயிருப்பது தெரிந்து எரிச்சலாக வந்தது.

இப்படியே வந்த வாரங்களும் தொடர்ந்து அப்பாவுகும் எனக்குமான பனிப்போர் நடந்து கொண்டிருக்க,  அம்மா கூட அப்பாவை பற்றி இடையில் சில தடவை நொந்துகொண்டாள். 

 ”விடும்மா,, வேலை பார்க்கறப்பயே, எலக்‌ஷனுக்கு மட்டுந்தாமா அவர் லீவ் போட்ருக்கார்.. அந்த அளவுக்கு கட்சி வெறி “ 

என்றவனிடம் ம் கொட்டிவிட்டு அம்மா நக்ர்ந்தாள். விடுமுறை நாளானதால் அவளை கூட்டிக்கொண்டு வெளியே கிளம்பிக்கொண்டிருந்தேன். 

ஷூவை மாட்டிக்கொண்டிருக்கையில் அப்பா வந்து டீவியை போட ”என்னப்பா ஒட்டு போட போக டிக்கெட் புக் பண்ணிரட்டுமா  “
 என்றவனிடம்


“எல்லாரும் போனா ஒரு போயிட்டு ஒரு ரெண்டு நாள் தங்கி ஒட்டு போட்டுட்டு வர பத்தாயிரம் ஆகாது. அதெல்லாம் வேண்டாம் இங்கயே இருந்திடலாம்” 

என்றபடி டீவியில் எங்களின் கட்சி தலைவரின் பேச்சை அவர் கேட்க ஆரம்பிக்க நாங்கள் வெளியே நகர்ந்தோம்.

க ரா
Share:
Read More

அப்பா காணாமல் போனார்

காரை டெலிவரி எடுக்க வந்திருந்த கஸ்டமருடன் பேசிக்கொண்டிருந்தபொழுது, டேபிளில் இருந்த டெலிஃபோன் அடிக்க ஆரம்பித்தது.

போனை எடுத்தவுடன் “பிஸியா இருக்கேன். யாருன்னாலும் கனெக்ட் செய்யாதன்னு சொன்னேன்ல” என்றேன் ப்ரியாவிடம்.

ப்ரியா ரிஷப்பனிஸ்ட்.

 “இல்லை சார் உங்கம்மான்னு சொன்னாங்க அதான் “ என்றாள்.

 “அம்மாவா ? “ ஒரு கணம் கேள்விக்குறி மாதிரி புருவங்கள் ரெண்டும் வளைந்து நிமிர்ந்தது.  கஸ்டமருக்கு புரிந்திருக்கவேண்டும். “கிளம்பட்டுமா ? “ என்பது மாதிரி சீட்டை விட்டு எழுந்திருந்தார்.

“சாரி” என்றேன். கைக்குலுக்கி அவர் நகர்ந்தவுடன், “ம்ம்.. கனெக்ட் பண்ணு என்றேன்”.

”அஷோக் “ என்று பதில்குரல் ஒலித்தது. கனெக்ட் செய்திருந்தாள். அம்மாவின் குரல்தானா என்று ஒரு நிமிடம் யோசனை வந்து போனது. அவளிடம் எப்போது கடைசியாக பேசினேன் என்று நினைவில்லை. “சொல்...லு..ம்மா” என்றேன் தயங்கி தயங்கி..
”அஷோக் ... அப்பாவ காணலடா “ என்றாள்..
தூக்கி வாரிப்போட்டது. “எத்தன மணி நேரம் ஆச்சும்மா . பக்கத்துலதான் போயிருப்பார். வந்துருவார்” என்றேன்.
“இல்ல அஷோக் .. மூணு நாளாச்சுடா” என்றாள்.
“என்னம்மா சொல்ற” ஜோதி மாமா வீட்டில் சோபாவில் உட்கார்ந்திருந்தேன்.  காரை எடுத்துக்கொண்டு டிரைவ் பண்ணி இங்கே வருவதற்கு சரியாக 6 மணி நேரம் ஆகியிருந்தது.

“ஆமாம் அஷோக் . அன்னிக்கு  கோவில்பட்டில சீதர் மாமா ஆத்துக்கு போயிட்டு பஸ் ஏறினோம். அவர் முன்னாடி ஏறிட்டார். நான் பின்னாடி ஏறினேன். சரியான கூட்டம் பஸ்ஸுல. அவர் குரல் மட்டும் கேட்டது.. நான் டிக்கெட் எடுத்துடறேன்னார்.  அப்படியே ஒரு கம்பிய பிடிச்சுண்டு நின்னுன்டு இருந்தேன்.  செத்த நேரம் கழிச்சு வண்டி எங்க நின்னதுன்னு தெரியலை ஒரு பொம்மனாட்டி பிள்ளைய கூட்டிண்டு இறங்கினா.. உக்கார இடம் கிடைச்சது .. ஜன்னலோர சீட்..  வந்த காத்துக்கு அப்படியே தூங்கிட்டேன். திடிர்னு கண்டக்டர் சாத்தூர் சாத்தூர்னு கத்தினார்.. அப்பத்தான் முழிச்சேன். அவர் இறங்கிருப்பார்னு நானும் இறங்கிட்டேன்.. இறங்கின உடனே பஸ் கிளம்பிடுத்து. செத்த நேரம் அங்கயே நின்னேன். அவர காணல..  சரி மூத்திரம் பெய்ய போயிருக்கார் போலனுட்டு அங்கயே நின்னுண்டு இருந்தேன். திடிர்னு இவன் வந்து என்ன அத்தை இங்க நிக்கிறேள்னான்” என்றாள் கணேஷனை காட்டி.

கணேஷ் ஜோதி மாமாவின் பையன்.

“நானும் கொஞ்ச நேரம் நின்னுண்டு இருந்தேன் அஷோக்.  அப்பாவ காணல. செரின்னு எல்லாப்பக்கமும் தேடிப்பார்த்துட்டு அம்மாவ வாங்கோ எங்காத்துக்கு போகலாம்னு கூட்டிண்டு வந்தேன். மொதல்ல வரமாட்டேனுட்டா. நாந்தான் ஆத்துக்கு போய் அத்திம்பேருக்கு கால் பண்ணலாம் வாங்கோன்னு கம்பெல் பண்ணி கூட்டிண்டு வந்தேன்.” என்றான்.
“அவர் திட்டுவார்னு நேக்கு பயம்டா.. உனக்கெ தெரியும்லயா” என்றாள் அம்மா. அவள் குரல் 1960ம் வருட ரேடியோ செட் உமிழும் பாட்டின் உலர்ந்த இசையை ஒத்திருந்தது.

“அப்பாவுக்கு கால் பண்ணலையா கணேஷா” என்றேன்.

“அவர் நம்பர் அம்மாட்ட இல்லைனுட்டா.. எங்க யார்க்கிட்டயும் இல்லைடா.. உனக்குத்தான் தெரியும்ல.. உன்னோட விசயத்துக்கு அப்புறம் அவர் எங்க யார்க்கிட்டயும் பேசறதில்லை. அம்மாவயும் பேசக்கூடாதுனுட்டார்” என்றான்.

 “சரி வாம்மா நம்மாத்துக்கு போகலாம்” எழுந்தேன்.

“சாவியில்லையேடா..” என்றாள் அம்மா.

“பூட்டை உடைச்சுக்கலாம்.. வா போலாம்” என்றவாரு அவள் கைகளை பிடித்து தூக்கினேன். அவள் கைகள் நடுங்கிகொண்டிருந்தன.

“நீ போடா அஷோக் நான் சுத்தியலயும் இன்னொரு பூட்டையும் எடுத்துண்டு வரேன்” என்றான் கணேஷ்.

அன்றைக்கு அம்மாவை தேற்றி சாப்பிட வைத்து தூங்கச்செய்வதற்குள் பெரும்பாடாகிவிட்டது.  அப்பா என்றைக்குமே இப்படித்தான்.  அவரின் பேச்சுபடிதான் எல்லாரும் நடக்கவேண்டும். நீ எதுவும் யோசிக்க வேண்டாம்.. உனக்கும் சேர்ந்து நானே யோசிக்கிறேன்.. சொல்றத மட்டும் செய்ங்கிற மாதிரியான டைப்.  பி.எஸ்.சி வரைக்கும் சாத்தூர் காலேஜ்ஜில்தான் படிப்பு எனக்கு. அம்மா என்றைக்கும் அப்பாவை எதிர்த்து பேசியது கிடையாது.  எதிர்த்து என்ன பேசியதே கிடையாது. அவள் குரலை வீட்டில் நான் கேட்டதே கிடையாது. வெளி மனுசர்களிடம் கூட அவள் பேசமாட்டாள். ஜோதி மாமா வீட்டு, இல்லையென்றால் கோவில்பட்டியில் ஸ்ரீதர் மாமா வீடு. இந்த இரண்டு இடங்களை தவிர நாங்கள் அவ்வளவ்வாக புலங்கியது கிடையாது.  இரண்டு மாமாக்களும் அம்மாவின் பெரியப்பா, சித்தப்பா பசங்கள். அப்பாவுக்கு கூடப் பொறந்தவர்கள் யாரும் கிடையாது போலவே அம்மாவுக்கும்.  இந்த இரண்டு மாமாக்களின் வீடுகள்தான்.  அதுவும் எப்போதாவதுதான் போவதும் வருவதும்.

கணேஷ் எனக்கு ஸ்கூலில் ஒரு வருடம் சீனியர்.  +2வில் ஒரு வருடம் இம்ப்ரூவ்மெண்ட் எழுதியும் இஞ்சியரிங் கிடைக்காமல் போனதால் நாங்கள் இருவரும் மூன்று வருடம் சாத்தூரில் ஒன்றாக காலேஜ் போனோம். நான் எம்.எஸ்.சிக்கு திருச்சி செயின் ஜோசப் போனேன். அவன் ஜோதி மாமாவுடன் சாத்தூரில் அவர்களின் ஹோட்டலிலையே ஒன்றாக உட்கார்ந்துவிட்டான். திருச்சியில்தான் மரியா எனக்கு அறிமுகமானாள்.  எம்.எஸ்.சி முடிக்கும்வரைக்கும் நட்பாகத்தான் இருந்தது. வேலை தேட சென்னைக்கு வந்தோம். அவள் அவளது மாமவின் வீட்டில் தங்க நான் நண்பர்களுடன் திருவல்லிக்கேணியில் ரூம் எடுத்தேன். மூன்று மாதம் கழித்து எனக்கு வேலை கிடைக்க அவளுக்கு கூப்பிட்டேன். வீட்டில் தனியாத்தான் இருக்கேன் வாடா என்றாள். அன்றைக்கு பார்த்து மழை பெய்து தொலைத்தது.

வேலை முதல் மாசம் சம்பளம் வாங்கியவுடன் அப்பாவிடம் கொடுக்க ஊருக்குப் போனேன்.  அப்பா என் சம்பள பணத்தை என்னிடமே கொடுத்துவிட்டு “ இது உம்பணம். நீயே வச்சுக்கோ. எனக்கு பென்ஷன் வரது.. போதும்” என்றார்.  ஒரு இரண்டுநாள் இருந்துவிட்டு ஊருக்கு கிளம்புகையில் பஸ் ஏத்தி விட வந்தவர் “பணம் சம்பாதிக்க தெரிஞ்சா போதாது. சம்பாதிச்சத காப்பாத்தவும் தெரிஞ்சுக்கோ” என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.  திரும்பவும் சென்னை வந்து ஒரு இரண்டு மாசம் கழித்தவுடன் மரியா கூப்பிட்டாள். நுங்கம்பாக்கம் காஃபிடேவுக்கு வரச்சொன்னாள் போயிருந்தேன். மிகவும் சோர்வாக இருந்தாள். என்ன என்று கேட்டவனிடம் மூன்று விரலை காண்பித்தாள்.  வேறு வழியில்லாமல் சர்ச்சில் மோதிரம் மாத்தி திருமணம் முடித்துவிட்டு ஊருக்கு கூட்டிப்போனேன். அப்பா வீட்டுக்குள் விட மறுத்துவிட்டார். அம்மா வெளியே வரவேயில்லை.  இடைப்பட்ட காலத்தில் மரியாவின் மாமாவும் இறைவனடி சேர, அவரின் கார் கம்பெனியை நிர்வகிக்க அவருக்கு குழந்தைகள் இல்லாததால் நான் வேலையை விட வேண்டியதாகிவிட்டது.  மரியாவும் வேறொரு வேலையில் சேர்ந்து , மேலே வந்தாகிவிட்டது.  இப்பொழுது அமெரிக்கா போயிருக்கிறாள்.

வந்து மூன்று நாட்கள் ஆகிவிட்டது.  அப்பாவை பற்றிய புதிரை  தொறக்க எதுவும் சாவி கிடைக்கவில்லை. ஊருக்குள் பேசியதில் அவர் யாரிடமும் சமிபத்தில் பேசியது மாதிரி எதுவும் தெரியவில்லை. கோவில்பட்டியில் இருந்து ஸ்ரீதர் மாமா மட்டும் ஒரு முறை வந்து போனார்.  ஒன்றும் துலங்காமல் நாட்கள்தான் போனது. அம்மாவும் திரும்பி திரும்பி சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தாள். வீட்டில் மிக்ஸி, கிரண்டர் கூட அவர்தான் போடுவார் என்றாள். ”வாம்மா ஏங்கூட என்றாள் திட்டுவாரேடா” என்றாள். ஒருநாள் மிக்க எரிச்சல் பட்டு “அப்படின்னா அன்னிக்கு கணேஷ் பார்த்து ஆத்துக்கு கூட்டிண்டு வரலைன்னா இத்தன நாள் அங்கயே நின்னுண்டு இருப்பியா என்ன” என்றதற்கும் “இல்லேன்னா திட்டுவாரேடா” என்றாள். ஒரு வழியாக சமாளித்து அவளை கூப்பிட்டுக்கொண்டு சென்னை வந்தேன்.

இடையில் ஒரு தடவை “ஹவ் எவ்ரிதிங் இஸ் கோயிங் ஹனி” என்று விரிவாக மரியா மெயில் அனுப்பியிருந்தாள். “பிட் பிஸி ஹனி.. எவ்ரி திங் கோயிங் ஃபைன்” என்று ரிப்ளை அனுப்பினேன். அம்மா அப்பா பற்றி ஒன்றும் சொல்லவில்லை.

சென்னை வந்து முதல் இரண்டு நாட்கள் அம்மாவுடன் தங்கிவிட்டு மூன்றாவது நாள் ஆபிசுக்கு போனேன். கிச்சனிலும், வீட்டின் எந்த மூலையில் இருந்த எந்த சாதனத்தையும் அவளுக்கு இயக்க தெரியாமல் இருந்தது. ஆபிசிடமிருந்து திரும்பி வருகையில், வீட்டின் ஹாலில் ஒரு ஒரத்தில் சுருங்கி படுத்துக்கிடந்தாள். மத்தியானம் சாப்பிட்டையா என்றதற்கு சாதம் எஙகயிருக்குன்னு தெரியலைடா என்றாள். சாதத்தை எலெட்ரிக் ரைஸ்குக்கரில் வைத்துவிட்டு போனது நியாபகம் வந்தது. வந்து இரண்டு வாரத்தில் கொஞ்சம் கொஞ்சம் இடத்திற்கு பழகிவிட்டாள்.  அந்த ஞாயிற்றுக்கிழமை மத்தியம் சாப்பிட்டு முடித்தவுடன் மரியாவிடமிருந்து அழைப்பு வந்திருந்தது.  போனில் அழைத்தவள் அவள் என்னை மிஸ் செய்பதாகவும் , நானும் அப்படியே இருப்பேன் என்று நம்புவதாகவும் சொன்னாள்.  வந்தவுடன் எங்கயாது ஒரு லாங் ட்ரிப் போகவேண்டும் என்றாள்.  பேசி முடித்தவுடன்  அம்மா “அஷோக் உனக்கு கோந்தை .... “ என்று கேட்க ஆரம்பித்து அமைதியனாள்.

ஒருபுறம் அவளாகவே என்னிடம் முதலில் ஒரு கேள்வி கேட்டதும், இன்னொரு புறம் என்னை பற்றியும், எங்களை பற்றியும் அவளிடம் ஒன்றும் சொல்லாததை எண்ணி ஒரே சமயத்தில சந்தோசமாகவும் , வருத்தமாகவும் இருந்தது. எனக்கும் மரியாவுக்கு பிறந்த முதல் குழந்தை சிறிது நாட்களிலயே இறந்து போனதையும் , இன்று வரை அடுத்த குழந்தைக்கு நாங்கள் முயலாமல் இருப்பதையும் அவளிடம் சொல்லி முடித்தவுடன், கேவி கேவி அழ ஆரம்பித்தாள். பின்னர் என்னை தேற்றுவதாக நினைத்துக்கொண்டு எனது தோளைத் தொட்டு அவள் மடியில் என்னை படுக்க வைத்து தலையை கோதியபடி இருந்தாள். பின்னர் வந்த இரண்டு நாட்களும் கண்களில் ஒருவித சோகத்துடனையே நடமாடிக்கொண்டிருந்தாள். இங்கே வந்து இரண்டு வாரங்கள் ஆயிருந்தாலும் கூட அப்பாவை பற்றிய தேடலை பற்றி ஒரு வார்த்தை கூட அவள் கேட்கவில்லை. உண்மையிலயே அதை எந்த புள்ளியில் இருந்து ஆரம்பிப்பது என்று எனக்கு புரியாமல் குழம்பிக்கொண்டிருந்தேன்.

மூன்றாவாது நாள் கணேஷ் என்னை அழைத்து அப்பா திரும்பிவிட்டதாகச் சொன்னான். திரும்பியும் அந்த இரவு மீண்டும் அம்மாவை கூட்டிக்கொண்டு ஊருக்கு திரும்பினேன். அங்கே இருந்ததை பற்றியும், மரியாவை பற்றியும், அவளை சந்திக்காததை பற்றியும், பின்னர் என்றாவது தான் அங்கே திரும்புதல் சாத்தியமா என்றும் அவளுக்கு எந்த கேள்விகளும் இல்லை. மறுநாள் காலை ஊருக்கு நுழைந்து வீட்டை நெருங்கியவுடன், அவளை காரிலிருந்து இறக்கினேன். அப்பா வாசலிலையே நின்று கொண்டிருந்தார். வீட்டில் அம்மாவுடன் நுழைந்த என்னை தடுக்கவும் , அழைக்கவும் செய்யாமல் அப்படியே நின்று கொண்டிருந்தார். வீட்டினுள் நுழைந்தவுடன் அம்மா அப்பாவை ஒரு நொடி நிமிர்ந்துபார்த்தாள். வா என்பதுமாதிரி அப்பா தலையசைத்தவுடன் கிடுகிடுவென வீட்டினுள் நடந்தவள் அப்படியே மறைந்துபோனாள். நான் அப்படியே ஹாலில் இருந்த சேரில் உட்கார்ந்தேன்.
எனக்கெதிரே இருந்த சேரில் அப்பாவும் உட்கார்ந்தார். சற்று நேரம் யார் மெளனத்தை கலைப்பது என்று தெரியாமல் உட்கார்ந்திருதோம்.

 அப்பா காணாமல் போனதை பற்றி அவரே சொல்ல ஆரம்பித்தார்.
“அன்னிக்கு கோவில்பட்டிலேந்து கிளம்பின உடனே கொஞ்ச நேரத்துல பஸ் கோவில்பட்டி பைபாசுல நின்னுடுத்து.  வெளிய எட்டிப்பார்த்தா ஒரு பொம்மனாட்டி கைல கோந்தையோட நின்னுண்டு இருந்தா. பக்கத்துல காருல யாரோ அடிப்பட்ட காயத்தோட டிரைவர் சீட்டுல. என்னன்னு தெரிஞ்சுக்கலாம்னு இறங்கினேன். இறங்கி திரும்பி பாக்கறதுக்குள்ள பஸ்ஸ எடுதுட்டா. அந்த பொண்ணு வேற அழுதுண்டே இருந்தா. அவா கூட வேற யாரும் இல்லை. என்ன பண்றதுன்னும் நேக்கு தெரியலை.  அவாள அங்கயே நிக்க சொல்லிட்டு , ஒரு கிலோமீட்டர் நட்ந்து போயி, அங்க் இருந்த பெட்ரோல் பங்குலேந்து , ஆம்புலன்ஸுக்கு கால் பண்ணிச்சொன்னேன். அப்புறம் கொஞ்சம் தண்ணி பாட்டில வாங்கிண்டு அவாகிட்ட ஒடி வந்தேன். செத்த நேரம் கழிச்சு ஆம்புலன்ஸ் வரவும் அவாள கூட்டிண்டு சாத்தூர் கவர்மெண்ட் ஹாஸ்பிட்டலுக்கு வந்தேன். இங்க பார்க்க முடியாதுனுட்டா.. திரும்பி அந்த ஆம்புலென்ஸ்லயே அவாள கூட்டிண்டு மதுரை பெரியாஸ்பத்ரி போயிட்டேன்.   அந்த பொண்ணும் அந்த பையனும் வீட்ட எதிர்த்து, காதலிச்சு கல்யாணம் பண்ணிண்டவாளாம்.  அவ பேரு எதோ சொன்னா.. எனக்கு மண்டைல் நிக்கல.  இப்பத்தான் நேத்திக்கு காலைல அந்த புள்ளையாண்டான் கண்முழிச்சான்.  அப்பா நன்றிப்பான்னா அந்த பொண்ணு. நல்லாயிரும்மான்னு ரெண்டு பேரயும் ஆசிர்வாதம் பண்ணிட்டு வந்தேன்”
என்ன சொல்லவென்று தெரியாமல் அப்படியே அமர்ந்திருந்தேன்.  நெஞ்சடைத்த மாதிரியிருந்தது.

சற்று நேரம் கழித்து “ யாருக்காது கூப்பிட்டு சொல்லியிருக்கலாம்ல ? “ என்றேன்.

“யார் நம்பரும் எங்கிட்ட இல்லைடா. அதோட இவா யாராது உன்னைய கூப்பிட்டு சொல்லியிருப்பா.. நீ வந்து இவள கூப்டுண்டு போயிருப்பன்னு தெரியும். நான் இல்லாட்டியும் அவ் சேஃப்பாதான் இருப்பா. பெருமாள் எப்பவும் அவளோடத்தான் இருப்பர்னு நம்பிக்கை என்றார்”.
ஒரு மணி நேரம் ஒன்னும் பேசாமல் அப்படியே உட்கார்ந்திருந்தேன்.

அப்படியே உட்கார்ந்திருந்தவன் “கிளம்பறேப்பா” என்றேன்.
"நிமிர்ந்தவர் ... கொஞ்சம் யோசித்துவிட்டு .. ம்” என்றார்.

கிளம்பியவனுடன் வாசல் வரைக்கும் வந்தவர் , காரைக் கிளம்பும் போது “ வழிச்செலவுக்கு கைல காசிருக்கா உங்கிட்ட” என்றார். “இருக்குப்பா” என்று தலையசைத்துவிட்டு காரைக் கிளப்பினேன்.

அம்மா அப்போதும் வெளியே வரவேயில்லை.

க ரா
Share:
Read More

சாயாவனம் - ஒரு வனத்தை பற்றிய உரையாடல்


இன்றைக்கு காலையில் ஆபிசில் காஃபி டைமில் ஒரு பேச்சு வந்தது.

ஒருத்தர் என்னவோ புக் ஃபேர் போனேன்னு சொன்னிங்கள ஒரு நாலஞ்சு புத்தகம் வாங்கிருப்பீங்களான்னு ஆரம்பிச்சாரு.

இல்லைங்ணா.. ஒரு முப்பத்தெட்டு ஆகிப்போச்சு இந்த வாட்டி அப்படினதுக்கு  அவர் மூஞ்சில ஈயோடல...

வாங்கறீங்க .. சரி எதுனாச்சும் படிப்பீங்களா அப்படினாப்டி..

உறுதியா, அதுக்குதான வாங்கறது அப்படின்னேன்..

சரி இதுவரைக்கும் படிச்ச எதயாது சொல்லுங்க பார்ப்போம்.. என்ன மாதிரி வாசிப்பிங்கன்னு தெரிஞ்சுக்கலாம் அப்படின்னாரு..
ரொம்ப பின்னாடில்லாம் போகலிங்க.. இப்போதைக்கு இந்த புக் ஃபேர்ல ஒரு வாங்கின புத்தகத்த பத்தி சொல்றேன் கேட்டுக்கோங்க அப்படின்னு சாயாவனத்த பத்தி சொல்ல ஆரம்பிச்சேன்.

“ தன்னோட கனவான ஆலைய நிர்மானிக்க வேண்டி ஒருத்தன் ஒரு வனத்த அழிச்ச கதைங்க இந்த சாயாவனம்”..

அதாவது சந்தர்ப்ப சூழ்நிலைகளால சின்ன வயசுல சொந்த மண்ண விட்டுபோன ஒருத்தன் ,பின்னாடி பல தேசம் சுத்தி சம்பாதிச்ச காச வைச்சுக்கிட்டு தன்னோட பிறந்த மண்ணுக்கே வரான்..  வந்த இடத்துல தன் சொந்த சனங்களுக்கு மத்தியில தான் நினைச்ச கரும்பாலைய அமைக்க  ,அந்த ஊருல இருக்கற ஒரு பெரிய மனுசன் கிட்ட ஒரு தோட்டத்த கிரையம் முடிக்கறான்.

தோட்டம்னா அது சும்மா ஒரு சின்னத் தோட்டம் இல்லைங்க.. ஒரு வனம்.. வனம்னா பல விலங்கினங்கள் , பட்சிகள் இன்னும் பல பல உயிரினங்கள் ஆன்ந்த கூத்தாடிட்டு இருக்கற பூமி.. அந்த தோட்டத்த வாங்கி அங்க ஆலைய நிர்மானிக்க வேலைக்கு ஆள் கிடைக்காம அவனே அந்த வனத்த அழிக்க ஆரம்பிக்கறான்.  கதையின் பெரும்பகுதி அவனுக்கும் அந்த வனத்துக்கும் நடக்கிற யுத்தத்த பத்திதான். அந்த ஊருல அவனுக்கு எல்லா விதத்திலும் சப்போட்டுன்னா அவனுக்கு இருக்க்கற மாமாதான்.. அப்பப்ப அவரும் துணைக்கு வர  அவனோட யுத்தம் நடக்க ஆரம்பிக்குது.. அந்த யுத்ததின் ஒட்டத்தோட அந்த வனத்துல படர்ந்திருக்கற செடி கொடிகளோட மனுசங்க குணத்த ஒப்பிட்டு வர விவரணைகைகள் சான்ஸே இல்லைங்க..  கதையின் போக்கோட இன்னும் சில விசயங்கள் அழகா சொல்லப்பட்டிருக்கு..  கதை நடக்கற காலம் சுதந்திரத்திற்கு  முற்பட்ட காலகட்டம்..  அப்ப மக்களிடைய பெரும்பாலும் பண்ட மாற்று முறைதான் நடந்துட்டு இருக்கு.. வேலைக்கு சம்பளமும் நெல்தான்..  முதலாளி மார்களுக்கும், வேலையாட்களுக்கும் இருந்த பிணைப்பு அவ்வளவ்வு அழகா சொல்லப்பட்டிருக்கு..

ஒரு கட்டத்துல சிதம்பரம்...

 “யாரது சிதம்பரம்  ?”
ஒ.. சாரி .. உங்ககிட்ட அந்த கதைநாயகனோட பேரைய சொல்லலைல.  அதாங்க அந்த கரும்பாலை வைக்க அந்த வனத்த அழிக்கறவன்.. அவந்தான் சிதம்பரம்... அவன் காட்ட அழிக்கறதுல பொறுமை இழந்து அவனோட மாமாக்கிட்ட மாமா காட்டுக்கு தீ வச்சுறலாமாங்கிறான்.. அவரும் ஒ.கேன்னு சொல்ல.. காட்டுக்கு தீ வைக்கிறான்..

தீ வைக்கிறப்ப ஒரு காட்சி வருது.. தீயோட வெக்கை தாங்க முடியாம அந்த காட்டுல இருக்கற ஒவ்வொரு உயிரினமும் வெகுண்டு ஓடுது.  அப்ப ஒரு காக்கை வந்து சிதம்பரம் மேல விழுது..  அந்த காக்கைய அவன் தீயில திரும்பி தூக்கி போட்டு பொசுக்கற காட்சி...சே என்னடா இவன்லாம் ஒரு மனுசனானு எரிச்சலா வந்துச்சு...

காடு முழுக்க எரிஞ்ச உடனே அத பார்க்க சிதம்பரமும் மாமாவும் வராங்க..  அப்ப காடு முழுக்க இருந்த அழகான புன்னை, புளிய மரங்கள், மூங்கில்கள் எல்லாம் கரி கட்டையாகி கிடக்குது..  அதோட அங்க இருந்த ஆடு, மாடு, முயல் மற்றும்  இன்னபிற விலங்குகள் எல்லாம் செத்து விழுந்துருக்குதுங்க..  அத பார்த்த சிதம்பரத்தோட மாமா ஒரு மாதிரி ஆகிடராரு.. அவ சிதம்ப்ரம் சொல்றான் பாருங்க ஒரு வசனம்..

 “நம்ம வேணும்னு எதுவும் செய்யலீங்க மாமா”.....

கொஞ்சம் கடுப்பா வந்துச்சு இந்த இடம்.. இப்படித்தான் மனுச பய அவனோட தப்பு ஒவ்வொன்னுக்கும் ஏதாச்சும் சாக்கு போக்கு சொல்லி சமாதானம் சொல்லி தப்பிச்சுக்கறான் இல்லிங்களா...

  “இம்ம்”...

எப்படியோ காட்ட அழிச்சு ஒரு வழியா ஆலையா கட்ட ஆரம்பிக்கறான்.. அந்த ஆலைய கட்ட ஒரு பெரும் தச்சர் கூட்டமே வந்து வேலை பாக்குது..  அவங்களுக்கு கூலியா சிதம்பரம் காச கொடுக்க நினைக்க.. அந்த தச்சர் கூட்ட தலைவன் சொல்றான் “ காச திங்கவாங்க முடியும்.. எங்களுக்கு நெல்லுதாங்க வேணும்”... எனக்கு நம்மள நினைச்சு சிரிப்பு வந்தது...

பின்னாடி எப்படியோ சமாளிச்சு அவனோட மாமா, அப்புறம் அந்த ஊரு பெருந்தனக்காரங்க எல்லாத்துகிட்டயும் கெஞ்சி கூத்தாடி நெல்லு வாங்கி அவங்களுக்கு சம்பளமா கொடுக்கான்.. அப்படியே போயிட்டு இருக்கற வாழ்கைல நெல்லுக்கு தட்டுபாடு வர அவன் முழிச்சு கிட்டே வேலையாளுங்களுக்கு காசா கொடுக்க ஆரம்பிக்கறான்..  இதுக்கு பதிலுக்கு வேலையாளுங்க எங்களுக்கு பணம் வேணாம் நெல்லுதான் வேணும்னு ஸ்டரைக்கெல்லாம் பண்ண ஆரம்பிக்கறாங்க..

அத சமாளிக்க இவனே அந்த ஊருல ஒரு பலசரக்கு கடைய ஆரம்பிச்சு அவங்ககிட்ட சொல்றான் நீங்க அந்த கடைல காசு கொடுத்தா உங்களுக்கு தேவையான பொருட்கள் கிடைக்கும்னு.. அப்படியே போராடி ஒரு வழியா ஆலைய கட்டி முடிச்சு உற்பத்தியயும் தொடங்கி தொழில்ல ஜமாய்கிறான்.. அதுலயும் ஒரு சிக்கல்..  என்ன சிக்கல்னா கரும்பு.. ஆலைக்கு கரும்ப எங்கேந்தோ கொண்டு வர வேண்டியிருக்கு.. அதுக்கும் அந்த ஊரு காரங்க கிட்ட போராடி கரும்ப விளைய வைக்கிறான்..

இப்படியே போயிட்டு இருக்கறப்ப இன்னொரு சிக்கல் வருது..
என்ன சிக்கல்னா அந்த ஊருல சமையல் புளிக்கு தட்டுப்பாடு.. இவனும் எப்படியோ நிறைய ஊருக்கு போயி ஒவ்வொரு இடத்திலேந்தும் இனிப்பு புளி, புளிப்பு புளின்னுல்லாம் வாங்கிட்டு வந்து எல்லாத்தயும் ஒன்னா கலந்து  விக்கிறான்..

அந்தப் புளிய வாங்கிட்டு போர ஒரு கிளவி , புளி வாயிலையே வைக்க வெலங்கலன்னு அவன் மூஞ்சில காரி துப்பிட்டு போகுது.. ஏன் ஆட்சின்னு கேக்கறப்ப அதான் நீ எல்லாத்தயும் அழிச்சிட்டியேன்னு போகுது..
என்ன விசயம்னா இவன் எந்த வனத்த அழிச்சானோ அந்த வனத்துல இருந்த ஒவ்வொரு புளிய மரமும் ஒவ்வொரு வீட்டுக்கு புளி சப்ளை பண்ணிட்டு இருந்திருக்கு..

“ நல்லாத்தான் இருங்குங்க கதை.. புத்தகம் எங்க கிடைக்கும் ? என்ன விலைன்னாரு கூட வேலை பாக்கறவரு..

புத்தகம் : சாயாவனம்
ஆசிரியர் : சா.கந்தசாமி
பதிப்பகம் : காலச்சுவடு
விலை : 150 ரூபாய்

இத சொல்லிருக்கேன் .. அவரு வாங்கறாருன்னு தெரியலை.. உங்களுக்கு தோணுச்சுன்னா நீங்க வாங்குங்க..  அருமையான புத்தகம்.. உங்க கலக்‌ஷன்ல கண்டிப்பா இருக்க வேண்டியது.. வாங்கி வச்சா போதாது.. கட்டாயமா படிக்கனும்...
க ரா
Share:
Read More
,

புத்தரின் குடிசை

நீண்ட நாட்கள் ஆயிற்று இந்த பக்கம் வந்து.வீட்டினில் என்னை தவிர யாரும் இல்லாமல் தனிமையில் உழன்று கொண்டிருந்தேன். அங்கே போகலாமா, அதை செய்து விடலாமா ஒன்று விதமான ஒடிக்கொண்டிருந்த மனதை கட்டுப்படுத்தி வீட்டில் தச்சு மம்மு சாப்பிட்டு விட்டு தூங்கி விடலாம் என சாதத்தை மைக்ரோ வேவ் அவனில் வைத்தேன். வரும் தச்சு மம்மு மட்டும் சாப்பிட்டால் நல்லாயிருக்காது என யோசித்த மனம் ரசம் வைக்கச் சொல்லியது. ரசத்தை வைத்து இறக்கியவுடன் , இருக்கும் ஊறுகாயை வைத்து சாப்பிடலாம் என்று நினைத்து எல்லாத்தயும் எடுத்து வைத்தேன்.  இவ்வளவ்வு பண்ணியாச்சு இன்னும் ஒரு காய் செய்ய முடியாத என்று எண்ணி வீட்டில் கிடந்த நான்கைந்து உருளைக் கிழங்குகளை எடுத்து வேக வைத்து சற்றே மசித்து ஒரு விதமான் பொடிமாசை பண்ணி இறக்கினேன்.

சாப்பிட்டு முடித்தவுடன் தனிமையை விரட்ட வந்த ஆபத்தாந்தவனாக பேரிலக்கியவாதி, கவிதாமணி, இலக்கிய செம்மல் மயில்ராவணன் எழுந்தருளினார்.  வந்தவர் ஒரு பெரிய சூட்கேசை திறந்து ஒரு விதமான பொட்டியை வெளியே எடுத்தார்.. திகைத்து போர் பார்தேன். படம் பார்க்கலமா என்றார் ? தலையசைத்து வைத்தேன். என்ன படம் பார்க்கலாம் என்று அடுத்த கேள்வி வந்து விழுந்தது. ஒரு படத்தின் பேரை சொல்லி அந்த படம் இருக்கா என்றவனிடம் தூ இதெல்லாம் ஒரு பொழப்பா என்றார். செரி செரி விடும் நீரே ஒரு படத்த போடும் என்றேன். அதற்கு அவர் உடனே கருந்தேள் ராஜேசிடம் போன் அடித்து ஏதாவது படம் பேரை சொல்ல சொல்லி கேட்டார். கருந்தேள் துப்பினாரா தெரியாது, உடனை போனை கட் செயதவர் The Proposal என்ற ஆங்கில படத்தை ஒட்ட ஆரம்பித்தார். படம் ஒட ஆரம்பித்த பத்தாவது நொடியில் பக்கத்திலிருந்து குறட்டை சத்தம் காதை கிளிக்க ஆரம்பித்தது. பதறி போய் எழுப்பியவனிடத்தில் சாரி மாப்பிள உண்ட மயக்கம் என்றார். உடனே ஒரு அருமையான பில்டர் காஃபியுடன் அவரை எழுப்பினேன்.

குடித்து முடித்தவுடன் நான் இந்த படம் வேணாம்னு சொன்னேன். உடனே ஒரு நான் கவிதை சொல்லவா என்றார். நான் விக்கி விக்கி அழ ஆரம்பித்த உடனே , என்னை சமாதான படுத்த The Broken Arrow என்ற படத்தை ஒட்ட ஆரம்பித்தார். படம் ஒடி முடிந்தவுடன் என்ன மாம்ஸ் இந்த படத்துலயும் ஒன்னுமே இல்லை என்றேன். அதை லாஸ்ட் சீன்ல கிஸ் அடிச்சாங்கள்ல மாப்பிள அம்புட்டுதான் என்றார்.

இன்னும் சிறிது நேரம் தமிழ் இலக்கிய சூழலை பற்றி அலசி ஆராய்ந்தோம். சிறிது நேரம் களித்து இன்னொரு உலகப் பதிவரான திரு.கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் அவரது வீட்டிற்கு அழைத்தார். உடனே நான் மயில் மீதேறி அவரது வீட்டை அடைந்தோம்.  அவரது வீட்டினில் சுண்ட காய்ச்சிய பாலில் காஃபி கலந்து ஆளுக்கு ஒரு படி கொடுத்தார் அவரது மனைவி. அதை குடித்து முடித்துவிட்டு சிறிது நேரம் உலகப் படங்களின் இன்றைய போக்கை அலசி ஆராய்ந்தோம். என்ன இருந்தாலும் இந்த நோலன் இபப்டி படத்தை ஒச்சிருக்க கூடாது பாஸ் என்றார் மயில் மாம்ஸ். அதற்கப்புறம் அவர் பேச நாங்க கேட்க, நாங்க கேட்க அவர் பேச என மயில் மாம்ஸ் ஒரு ஒரு மணி நேரத்தை எடுத்துக்கொண்டார்.

பின்னர் கார்த்திகேயன் வீட்டில் இருந்து கிளம்பி, இந்த இடத்திற்கு வந்து சேர்ந்தோம்.


இந்த இடம் ஒரு ரெஸ்டாரண்ட்.. அருமையான சான்விட்ச்களை செய்து தருகிறார்கள். பம்மலுக்கும் பல்லாவரத்திற்கும் நடுவில் நல்லதம்பி ரோட்டிற்கு அருகில் உள்ளது.  இது நணபர் கார்த்திகேயனின் நண்பர் ராஜகோபால் அவர்களால் நடத்தப்படும் ரெஸ்டாரண்ட்.  அருமையான உணவு மக்கா... அதை விட அந்த இடம் .. பல விதமான புராதான பொருட்களால் அருமையாக அலங்கரித்து நல்ல ஒரு விதமான இயற்கை சூழலில் மிக அருமையாக இருக்கிறது இடம்.. நல்ல மெல்லிசை ஒடிக்கொண்டிருக்கிறது உடம்பை தளுவும் மென்காற்றைப் போல..

நேரம் கிடைத்தால் ஒரு முறை சென்று பாருங்கள்.

மேலும் சில படங்கள்.
க ரா
Share:
Read More

ஆயுள் ரேகை # 2தவை யாரோ தட்டுவது போல் இருந்தது.

கையில் இருந்த மருந்து பாட்டிலயும் சிரிஞ்சயும் வெறித்து பார்த்தபடியே இருந்தேன்.

தொடர்ந்து ஒரு நிமிடத்திற்கு கேட்ட கதவை தட்டும் சத்தம் திடிரென்று நின்றுபோனது. கை வலித்திருக்கும் போல. தட்டியது எதிர்த்த நாயர் டீக்கடை பையனாக இருக்கும். நாராயணன் பாக்கியை செட்டில் செய்தானா என தெரியவில்லை.

அந்த பையனை போய் கூப்பிடலாமா என்று தோன்றியது. சாகும் போது கடனாளியாக சாகக்கூடாது எனற ஒரு எண்ணம்தான்.

அம்மா சொல்வாள் அடிக்கடி

“ ரகு நாம சாகறப்போ நம்ம யாரும் கெட்டவனாவோ, கடன்காரனாவோ நினைக்கப்படாதுடா”.

எதற்கும் நாராயணனிடம் ஒரு தடவை கேட்டுடலாம் என அவனை பார்த்தேன். சற்று முன்னர் துடித்த மாதிரி இருந்த அவன் உடல் இப்பொழுது முற்றும் அடங்கியிருந்தது. அவன் வலது கை மணிக்கட்டில் இருந்து வடிந்திருந்த ரத்தம் அவன் உடம்பை சுற்றி படர்ந்திருந்தது. நாளை ஒரு வேளை போலிஸ் வந்து பார்த்தால் அவர்களுக்கு சாக்பீஸ் தேவையில்லாமல் இருக்கலாம்.

நமக்கு நாமே இந்த மாதிரி வரைந்து கொண்டால் என்ன என ஒரு நிமிடம் தோன்றியது. விரைத்து கிடந்த நாரயணன் பக்கம் போய் நானும் படுத்துக் கொண்டேன். அவன் ரத்தத்தை எடுத்து என் உடம்பை சுற்றி நானே வரைந்து கொள்ள ஆரம்பித்தேன். கால் வரை கை எட்ட வில்லை.

ஒரு நிமிடம் கையை மூக்கின் அருகில் கொண்டு வந்தேன். 

*******************

கிளாஸ் ரூமில் செளந்தரபாண்டியன் சார் கிளாஸ் எடுத்துக்கொண்டிருந்தார்.

“உங்களுக்கு இதெல்லாம் சொல்லக் கூடாதுதான். நான் சொல்லாட்டினாலும் இதெல்லாம் நீங்க கத்துக்கத்தான் போறீங்க.. இல்லேன்னாலும் இந்த காலம் உங்களுக்கு கத்து தந்துரும். கரம்பாம்பூச்சி எப்படி இனப்பெருக்கம் பண்றதுன்னு இந்த புத்தகத்துல போட்ருக்கான். கெரகம் பாரு எதெல்லாம் சொல்ல வேண்டிருக்குதுன்னு. எலேய் ராசா நீ சொல்லு.. இனப்பெருக்கம்னா என்ன ? “ .

எந்திரித்து நின்றவன் பதில் தெரியாமல் முளிக்க

எட்டாம் கிளாஸ் வந்துட்ட இதக்கூட தெரிஞ்சுக்காமஎன்று சொல்லிக்கொண்டே “ நீ சொல்லுடே “ என்றார் அடுத்தவனை பார்த்துக்கொண்டு.

கேள்வி ஒவ்வொருவனாக சுற்றி சுற்றி வர  நாரயணன் என்னிடம் கேட்டான் “ உனக்கு தெரியுமாடா பதில் “

பதிலாக நான் உதட்டைக் குவித்தேன்.

“ நீ எப்படிடா வந்த “ என்றான்.

“ உன் கூட சைக்கிள்ள “ என்றபோது கேள்வி என்னிடம் வந்திருந்தது.

“ நீ எந்திரில..என்றார் செளந்தரபாண்டியன் சார்.

“சொல்லு இனப்பெருக்கம்னா “ என்றார்.

நானும் முளிக்க கேள்வி நாரயணனிடம் போனது. .

எழுந்தவன் அஷ்டகோணலாக ஒரு மாதிரி சிரித்தான்.

“என்னலே சிரிக்க.. வயசுக்கு வந்துட்டியாஎன்றார் அவனைப் பார்த்து. எல்லா பையன்களும் சிரிக்க பெல் அடித்தது. 
*******************

நாராயணனின் ரத்தம் மோர்ந்து பார்க்க நெயில்பாலிஸ் வாடை அடித்தது. 
கால் எட்டாததால் கோடு போட எழுந்திரிக்கவேண்டியிருந்தது. பக்கத்தில் படுத்திருந்த நாராயணனை பார்த்தேன். அவன் முகத்தில் அதே அஷ்டகோணலான சிரிப்பு மீதமிருக்கற மாதிரி தோன்றியது.  
   *******************

 “ நாம எப்பவும் பிரியக்கூடாதுடா ரகுகாட்டுபள்ளி வாசலில் மல்லாக்க படுத்துக்கொண்டு நடசத்திரங்களை எண்ணிக்கொண்டிருந்த என்னிடம் சொன்னான் நாராயணன்.
*******************

நான் என்னை சுற்றி வரைந்த கோடும் நாராயணன் அவனை சுற்றி வரைந்து கொண்டதும் ஒரிடத்தில் ஒன்று சேர்ந்தது. நான் அவனின் தோளை தொட்டு கேட்டேன்....

“ இப்ப நாம பிரிஞ்சுட்டோமாடா ? “.

.
தொடரும்.
 இராமசாமி கண்ணன்.
Share:
Read More

ஆயுள் ரேகை

”கரிகாலன் காலப் போல” ஒரு சிறு பெண் கதறிக் கொண்டிருந்தது டீவியில்.

வீட்டின் ஜன்னல்கள், கதவை எல்லாம் இறுக்கப்  பூட்டியிருந்தேன். காற்று உள்ளே வராததால் மிக புழுக்கமாயிருந்தது.

நேரத்தை பார்த்தேன் கடிகாரத்தின் பெரிய முள் இரவு ஒன்பதை தொட துடித்துக் கொண்டிருந்தது.

டேபிளின் மேல் ஒரு சிரிஞ்சும், ஒரு மருந்து பாட்டிலும்... அந்த மருந்து என் கதையை நானே முடிக்க சற்றுமுன்தான் வாங்கி வந்தேன்.

“ என்னது ?  ஏன் இப்படி” நீங்கள் பதறலாம் எனக்கு பதற்றமில்லை நான் சாகவேண்டும் அவ்வளவ்வுதான்.

பாட்டிலயும் சிரிஞ்சயும் கையில் எடுத்தேன்.

டீவியில் இப்பொழுது இன்னொரு பையன்

“ மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
  உன்னை விரும்பினேன் உயிரே”

லிசா பாடிக்கொண்டிருந்தாள்.

*******************

லிசா..


லிசா..


லிசா..


எத்தனை தடவை எழுதிப் பார்திருப்பேன் இந்த பெயரை.


+2 ஸ்கூல் பிசிக்க்ஸ் ரெக்கார்டு நோட்டு மூழுவதும் அவளது பெயரேயே எழுதி வைத்திருந்தேன்.


ஸுகூல் ஆனுவல்டே பங்கசனது.


நானும் நாரயணனும் உக்காந்து சரோஜாதேவி புத்தகத்தை மறைத்து வைத்து படித்துக்கொண்டிருந்தோம்.
அப்பொழுது ஹெட்மிஸ்டரஸ் வந்து அடுத்ததாக ஒரு பெண் பாடுவாள் என சொல்லியிறங்க லிசா மேடையேறினாள்.


லிசா பாடி முடிக்கும் வரை நானும் நாரயணனும் வைத்த கண்ணை எடுக்காமல் பார்த்துக் கொண்டே இருந்தோம்.


பாடி முடித்து லிசா இறங்கும் போது எனது கை நாரயணனின் தொடையில் இருந்தது.


திரும்பியும் அதே லிசாவை பார்த்தது பெங்களூருவில் , ஒரு ஜனவரி ஞாயிற்றுக்கிழமையில் லால் பார்க்கில் வைத்து.


நானும் நாராயணனும் கடவுளை பற்றிய ஒரு விவாதத்தில் இருந்தோம் அப்பொழுது.


 “ கடவுள்னா யாரு.. எப்படியிருப்பாரு” தெரியுமா என்றான் நாரயணன்.


“ஆணல்லன் பெண்ணல்லன் அல்லா(து) அலியுமல்லன்
காணலுமாகான் உளனல்லன் இல்லையல்லன்
பேணுங்கால் பேணும் உருவாகும் அல்லனுமாம
கோணை பெரிதுடைத்து எம் பெம்மானைக் கூறுதலே ..”


இந்த பாட்டுக்கு அர்த்தம் தெரியுமா என்றான் நாரயணன்.


கையில் வைத்திருந்த கோல்ட் பிளேக் பில்டர் என்னை சுட்டது.


கையில் பட்ட கங்கை நெட்டி தள்ளும்போது, முன்னாடி இருந்த செம்பருத்தி செடி விலகி.. விலகி..


“நாரயணா .. அம்மன்றா “ என்றேன் அவன் தோளை அழுத்தி.


“ அம்மனா” என்று நிமிர்ந்த  நாரயணன் “லிசாடா” என்றான்.


ரோசாப்பூ பூ டிசைன் போட்ட புடவையில் யாருடனோ கையாட்டி பேசிக்கொண்டிருந்தாள்


லிசா... 

*******************

ஒரு சிகரெட் குடிக்கலாம் என்ற எண்ணம் வந்தது.

என்ன அபத்தம் இது , சாகப்போகிறவனுக்கு எதுக்கு சிகரெட்.. எனக்கே சிரிப்பாக வந்தது..

 *******************

 “அம்மன்றா” என்றவனிடம் “லிசாடா” என்றான் நா....ரா...யணன்.

அம்மனை நினைத்தவுடன் அம்மா நியாபகத்துக்கு வந்தாள்.


அரக்கு கலர் பட்டு புடைவையில், மூக்கில் மினு மினுக்கும் மூக்குத்தியுடன், இடுப்பு வரை  தொங்கும் தலைமுடியுடன் , நெற்றி நிறைந்த குங்கும பொட்டுடன் காலையில் வீடு முழுக்க சாம்பிராணி புகை காட்டிக் கொண்டு வரும் அம்மா.


"ஓம் வாக்தேவ்யை நம"
ஓம் ஸ்ரீ மகாஸரஸ்வதி மந்திரம் :
ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் சரஸ்வதியைபுத ஜனன்னியை ஸ்வாஹா
ஸ்ரீ அணுராதாக்ரமண ஸரஸ்வத்யை நம‌


ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என்னம்மை தூய‌
உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே
இருப்பளிங்கு வாராது இடர்.


தினம் காலை விளக்கேற்றிவிட்டு அம்மா சரஸ்வதி ஸ்லோகம் சொல்வாள்.


 “ ஏம்மா இந்த ஸ்லோகம்லா சொல்றே” ..


“ ஏம்புள்ளை நல்லா படிக்கனும்லியா.. அதான்”


“ நான் படிக்கனும்னா.. நாந்தானே சொல்லனும்”....


“ நான் சொன்னா நீ சொன்ன மாதிரிதான்” ...


அம்மாவிற்கு எல்லாமே நேரம் காலம்தான்...


காலையில் எழுந்திருப்பதிலிருந்து , இரவு தூக்கம் வரை எல்லாம் நேரம் காலம்தான்..


அன்று காலேஜ்லிருந்து திரும்பும் போது.. அம்மா படுக்க வைக்க பட்டிருந்தாள்.. தலை மாட்டில் சாம்பிராணி புகை..

*******************

நேரத்தை பார்த்தேன் .. 9.30 ஆகியிருந்தது.

சிரிஞ்சயும்.. மருந்து புட்டியையும் கையில் எடுத்தேன்.

கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது.

கிழே படுக்க வைத்திருந்த நாராயணன் உடலில் ஏதோ துடிப்பு வந்து போன மாதிரி இருந்தது.

... தொடரும்

 இராமசாமி கண்ணன்.
Share:
Read More

குள்ளநரிக்கூட்டம்”நம்ம ஏற்கனவே எங்கேயாது சந்திச்சிருக்கோமோ சார்? ” என்று கேட்டுகொண்டே அருகில் வந்து உட்கார்ந்தார் அவர்.  எனக்கு அவரை எங்கேயும் சந்திக்காத மாதிரியே இருந்தது.  இல்லை என்கிற மாதிரி ஒரு மாதிரி மத்தியமாய் தலையசைத்து வைத்தேன்.   என் பெண் அமிர்தாவின் ஸ்கூல் பேரண்ட்ஸ் டீச்சர் அசோசியேஷன் மீட்டிங்குக்கு வந்து உட்கார்ந்திருந்தேன்.  வருடம் முடியப் போகிறது. இது வரை ஒரு நாலைந்து முறை நடந்திருக்கும். ஒவ்வொரு முறையும் கூப்பிட்டும் வராமல் ஏதாவது சொல்லி ஒப்பேத்தி கொண்டிருந்தேன். இந்த முறை விடாமல் ஒரு வாரமாக போராடி என்னை வரச்செய்து   விட்டாள் என் பெண்.   நான் திரும்பி ஏதேனும் பேசுவேன் என்று எதிர்பார்த்திருப்பாரோ என்னவோ, நான் எதுவுமே பேசாததால் என்னருகிலிருந்து நகர்ந்து வேறு இடத்தில் போய் உட்கார்ந்தார். 


இதே மாதிரிதான் என் ஆபிஸ் கொலிக் ராமச்சந்திரன் மகன் திருமணத்தில் இதே மாதிரி சொல்லிக்கொண்டு பக்கத்தில் வந்து உட்கார்ந்தார் ஒருவர். வேறு வழியில்லாமல் பேச வேண்டியதாய் போனது. சாப்பாட்டு பந்தியில் கூட பக்கத்தில் வந்து உட்கார்ந்தவர் விடாமல் பேசிக்கொண்டே இருந்தார். முடிவில் வற்புறுத்தி எனது போன் நம்பரை வாங்கிகொண்டார். ஆபிசில் மேனேஜர் ஒரு நாள் வராமல் போனாதால், ரிலாக்ஸாக கிரிக்கெட் ஸ்கோர் பார்த்துக்கொண்டே வேலை பார்த்துக்கொண்டு இருக்கும் போது அந்நோன் நம்பர் ஒன்றில் வந்த ஒரு காலை அட்டண் செய்திருக்க கூடாது. செயத்தது பெரிய வமபாகி போனது. தான் ஒரு மல்டிலெவல் மார்க்கெட்டிங் குழுமத்தில் சேர்ந்து பிசினஸ் செய்வதாகும், நானும் சேர்ந்தால் எனது மகள் திருமணத்திற்கு உபயோகமாய் இருக்கும் என்றும் சொன்னார். எனது மகளிற்கு இப்போதுதான் ஒன்பது வயதாகியிருந்தது. வேண்டாம் சார் இதுக்கெல்லாம் சரி பட்டு வரமோட்டேன் என் சொல்லியும் விடாமல் வீட்டு பாத்ரூமில் இருக்கும்போதும் , மார்க்கெட்டில் கறிகாய் வாங்கிக் கொண்டிருக்கும் போதும், சிக்னலில் கீரின் சிக்னலுக்காக வெயிட் பண்ணிக்கொண்டிருக்கும்போது என நேரம் காலம் பார்க்காமல் கால் வருவது வாடிக்கையாகி போனது. ஒரே நம்பரில் இருந்து பேசினால் கட் பண்ணி விடுவேணோ என வேறு வேறு நம்பரில் கால் செய்து ஒரே ரோதனையாகிப் போனது. வேறு வழியில்லாமல்  ஒரு ஞாயிற்றுக்கிழமையில் அவர் சொன்ன இடத்திக்கு போனேன். கூல்டிரிங்ஸெல்லாம் கொடுத்து வரவேற்றவர் இன்னும் வேறு சிலரோடு என்னை சேர்ந்து உட்கார சொன்னவர் இதோ ஒரு நிமிசம் என்று நகர்ந்து போனார்.


அவர் எங்களிடமிருந்து நகர்ந்து போய் ஒரு பத்து நிமிசம் கழித்து அங்கே மேடை மாதிரி போட்டிருந்த ஒன்றில் ஒரு சேரில் உட்கார்ந்திருந்த ஒருவர் மைக்கை பிடித்து பேச ஆரம்பித்தார். முப்பாதாயிரம் ரூபாய் கட்டி அவர்கள் அமைப்பில் சேர்ந்தால் சில பொருடகள் தருவார்கள் எனவும் , அதை விற்பதுடன் , நம்மை மாதிரியே இன்னும் எத்தனை பேரை முடியுமோ அத்தனை பேரை சேர்த்து விட்டால் பணம் இரட்டிப்பாய் கிடைக்கும் என்று சொன்னார்.   கேட்டதும் கிளம்பும் வழியை பார்த்து திரும்ப ஆரம்பித்தேன். எழும்ப முடியாமல் சுற்றி ஒரே கூட்டம். இதில் என்னை கூப்பிடவர் வேற மைக்கில் பேசியவரிடன் என்னை காட்டி காட்டி என்னமோ சொல்லிக்கொண்டிருந்தார்.  வயிற்றில் கிலி கிளம்பியது. ஒரு வழியாக வழி கிடைத்து எழுந்து ஒட முயன்ற போது , என்னை கூப்பிடவர் ஒடி வந்து என் கையை பிடித்துக் கொண்டார். முப்பாதியிரத்தை கூட அவரே கொடுத்து விடுவாதகாவும் நான் ஒவ்வொரு மாசமும் கொஞ்சம் கொஞ்சமாக திருப்பி கொடுத்தால் போதும் என்றும் சொன்னார். வீட்டில் பேசி சொல்வதாக சொல்லிவிட்டு வண்டியை விரட்டி கிளம்பியவன், வரும் வழியில் கடையில் நின்று மொபைல் நம்பரை மாற்றி விட்டுதான் வேறு வேலை பார்த்தேன்.  வீட்டுக்கு வந்து இவளிடம் சொன்ன போது ஒரு வாரம் விடாமல் என்னை பார்த்துக் கொண்டு சிரித்து கொண்டிருந்தாள்.


அதற்கப்புறம் எந்த கூட்டம் கூடும் இடத்துக்கும் தனியே போகாமல் யாரையாது கூட சேர்த்துகொண்டுதான் போய்வருவது. இந்த பேரண்ட்ஸ் டீச்சர் மீட்டிங்குக்கு வழக்கமாய் என் மனைவிதான் வந்துபோவது. இந்த தடவை கூட நானும் அவளும்தான் வருவதாக இருந்தது , முடிவில் தலைவலி என என்னை மட்டும் அனுப்பிவைத்து விட்டு வீட்டில் டீவி சீரியலில் முழ்கி விட்டாள். வேறு வழியில்லாமல் வந்து உட்கார்ந்திருவனிடம் திரும்பியும் இப்படி இன்னொருவர் வந்து இப்படி ஆரம்பிக்கவும் டரியலாகிப் போனது. ஏதேச்சையாக திரும்பி பார்த்தேன். சற்று தொலைவில் போய் உட்கார்ந்த அவர் அங்கே இருந்தும் என்னையையே பார்ப்பது மாதிரி இருந்தது. பேசாமல் தலையை குனிந்து மொபலை நோண்ட ஆரம்பித்தேன். 
ஒரு வழியாக பத்து மணிக்கு ஆரம்பிப்பதாக சொன்ன மீட்டிங் ஒரு மணி நேரம் களித்து பதினோரு மணிக்கு ஆரம்பித்தது. முதலில் மைக்கை பிடித்த பள்ளி ஹெட்மிஸ்டரஸ் எல்லா பெற்றோரையும் வரவேற்று பேசி விட்டு , வாசித்தலின் அருமைகளை பற்றி பேச ஆரம்பித்தார். முடித்தவுடன் இன்னொருவரை அறிமுகம் செய்துவிட்டு அவர் கையில் மைக்கை ஒப்படைத்துவிட்டு அவர் சேரில் போய் உட்கார்ந்தார். மைக்கை பிடித்தவர், அவரின் தொழில் அறிமுகத்தினை முடித்தபின் தான் ஒரு திட்டம் வைத்திருப்பதாகவும் , அதில் சேர ஒவ்வொரு ஸூடுடண்டும் மூவாயிரம் கட்டினால் போதுமெனவும், அதை கூட மாதம் முண்ணூறு என கட்டினால் போதுமெனவும் சொன்னார். திட்டத்தில் சேரும் ஒவ்வொரு மாணவருக்கும் சில புத்தகங்கள் கொடுக்கப்படும் எனவும் சொல்லி முடித்தார். தொடர்ந்து பேசியவர் ஒரு இருபது நிமிசம் பேசிக்கொன்றுவிட்டு திரும்பி மைக்கை ஹெட்மிஸ்டரஸ்ஸிடம் ஒப்படைத்தார்.  திட்டத்தில் சேர்வது எந்தளவிற்கு உபயோக இருக்கும் என்பதை மீண்டும் ஒரு முறை சொல்லிவிட்டு வந்திருந்த எல்லோருக்கும் நன்றியை சொல்ல கூட்டம் கலைந்தது. 


கூட்டம் முடிந்ததும், மகளிடமும் அவள் கிளாஸ் டீச்சரிடமும் பேசிவிட்டு கிளம்பினேன். வாசலில் வந்து வண்டியை எடுக்கும்போதும் கூட அந்த இன்னொருவர் என்னையையே முறைத்துகொண்டிருந்தார்.   சாயங்காலம் வீட்டினுள் நுழைகையில் பெண்ணிற்கு தலை வாரிக்கொண்டு வாசலில் நின்றிருந்தவளின் முகம் வழக்கத்திற்கு மாறாக சற்று இறுக்கமாக இருந்தது.  என்னவென்று யோசித்துகொண்டே டிரஸ் மாற்றி முகம் கழிவிக்கொண்டு திரும்பியவனிடத்தில் காப்பி டம்ளரை நீட்டிக்கொண்டே “ஸ்கூல்ல என்ன சொன்னாங்க” என்றாள். ஸ்கூலில் நடந்ததை சொன்னவுடன் “ என்ன பண்ண போறீங்க “ என்றவளிடம் என்ன சொல்ல என்று யோசிக்கையில் “பேசாம கொடுத்திருங்க” என்று சொல்லிவிட்டு குடித்துவிட்டு நீட்டிய காப்பி டம்ளரை வாங்கி கொண்டு உள்ளே போனால்.  கதவில் சாய்ந்து நின்று கொண்டிருந்த என் மகள் “ தேங்ஸ்பா” என்று சொல்லிவிட்டு சிரித்துக்கொண்டே உள்ளே போனாள்.
க ரா.
Share:
Read More