அப்பா காணாமல் போனார்

காரை டெலிவரி எடுக்க வந்திருந்த கஸ்டமருடன் பேசிக்கொண்டிருந்தபொழுது, டேபிளில் இருந்த டெலிஃபோன் அடிக்க ஆரம்பித்தது.

போனை எடுத்தவுடன் “பிஸியா இருக்கேன். யாருன்னாலும் கனெக்ட் செய்யாதன்னு சொன்னேன்ல” என்றேன் ப்ரியாவிடம்.

ப்ரியா ரிஷப்பனிஸ்ட்.

 “இல்லை சார் உங்கம்மான்னு சொன்னாங்க அதான் “ என்றாள்.

 “அம்மாவா ? “ ஒரு கணம் கேள்விக்குறி மாதிரி புருவங்கள் ரெண்டும் வளைந்து நிமிர்ந்தது.  கஸ்டமருக்கு புரிந்திருக்கவேண்டும். “கிளம்பட்டுமா ? “ என்பது மாதிரி சீட்டை விட்டு எழுந்திருந்தார்.

“சாரி” என்றேன். கைக்குலுக்கி அவர் நகர்ந்தவுடன், “ம்ம்.. கனெக்ட் பண்ணு என்றேன்”.

”அஷோக் “ என்று பதில்குரல் ஒலித்தது. கனெக்ட் செய்திருந்தாள். அம்மாவின் குரல்தானா என்று ஒரு நிமிடம் யோசனை வந்து போனது. அவளிடம் எப்போது கடைசியாக பேசினேன் என்று நினைவில்லை. “சொல்...லு..ம்மா” என்றேன் தயங்கி தயங்கி..
”அஷோக் ... அப்பாவ காணலடா “ என்றாள்..
தூக்கி வாரிப்போட்டது. “எத்தன மணி நேரம் ஆச்சும்மா . பக்கத்துலதான் போயிருப்பார். வந்துருவார்” என்றேன்.
“இல்ல அஷோக் .. மூணு நாளாச்சுடா” என்றாள்.
“என்னம்மா சொல்ற” ஜோதி மாமா வீட்டில் சோபாவில் உட்கார்ந்திருந்தேன்.  காரை எடுத்துக்கொண்டு டிரைவ் பண்ணி இங்கே வருவதற்கு சரியாக 6 மணி நேரம் ஆகியிருந்தது.

“ஆமாம் அஷோக் . அன்னிக்கு  கோவில்பட்டில சீதர் மாமா ஆத்துக்கு போயிட்டு பஸ் ஏறினோம். அவர் முன்னாடி ஏறிட்டார். நான் பின்னாடி ஏறினேன். சரியான கூட்டம் பஸ்ஸுல. அவர் குரல் மட்டும் கேட்டது.. நான் டிக்கெட் எடுத்துடறேன்னார்.  அப்படியே ஒரு கம்பிய பிடிச்சுண்டு நின்னுன்டு இருந்தேன்.  செத்த நேரம் கழிச்சு வண்டி எங்க நின்னதுன்னு தெரியலை ஒரு பொம்மனாட்டி பிள்ளைய கூட்டிண்டு இறங்கினா.. உக்கார இடம் கிடைச்சது .. ஜன்னலோர சீட்..  வந்த காத்துக்கு அப்படியே தூங்கிட்டேன். திடிர்னு கண்டக்டர் சாத்தூர் சாத்தூர்னு கத்தினார்.. அப்பத்தான் முழிச்சேன். அவர் இறங்கிருப்பார்னு நானும் இறங்கிட்டேன்.. இறங்கின உடனே பஸ் கிளம்பிடுத்து. செத்த நேரம் அங்கயே நின்னேன். அவர காணல..  சரி மூத்திரம் பெய்ய போயிருக்கார் போலனுட்டு அங்கயே நின்னுண்டு இருந்தேன். திடிர்னு இவன் வந்து என்ன அத்தை இங்க நிக்கிறேள்னான்” என்றாள் கணேஷனை காட்டி.

கணேஷ் ஜோதி மாமாவின் பையன்.

“நானும் கொஞ்ச நேரம் நின்னுண்டு இருந்தேன் அஷோக்.  அப்பாவ காணல. செரின்னு எல்லாப்பக்கமும் தேடிப்பார்த்துட்டு அம்மாவ வாங்கோ எங்காத்துக்கு போகலாம்னு கூட்டிண்டு வந்தேன். மொதல்ல வரமாட்டேனுட்டா. நாந்தான் ஆத்துக்கு போய் அத்திம்பேருக்கு கால் பண்ணலாம் வாங்கோன்னு கம்பெல் பண்ணி கூட்டிண்டு வந்தேன்.” என்றான்.
“அவர் திட்டுவார்னு நேக்கு பயம்டா.. உனக்கெ தெரியும்லயா” என்றாள் அம்மா. அவள் குரல் 1960ம் வருட ரேடியோ செட் உமிழும் பாட்டின் உலர்ந்த இசையை ஒத்திருந்தது.

“அப்பாவுக்கு கால் பண்ணலையா கணேஷா” என்றேன்.

“அவர் நம்பர் அம்மாட்ட இல்லைனுட்டா.. எங்க யார்க்கிட்டயும் இல்லைடா.. உனக்குத்தான் தெரியும்ல.. உன்னோட விசயத்துக்கு அப்புறம் அவர் எங்க யார்க்கிட்டயும் பேசறதில்லை. அம்மாவயும் பேசக்கூடாதுனுட்டார்” என்றான்.

 “சரி வாம்மா நம்மாத்துக்கு போகலாம்” எழுந்தேன்.

“சாவியில்லையேடா..” என்றாள் அம்மா.

“பூட்டை உடைச்சுக்கலாம்.. வா போலாம்” என்றவாரு அவள் கைகளை பிடித்து தூக்கினேன். அவள் கைகள் நடுங்கிகொண்டிருந்தன.

“நீ போடா அஷோக் நான் சுத்தியலயும் இன்னொரு பூட்டையும் எடுத்துண்டு வரேன்” என்றான் கணேஷ்.

அன்றைக்கு அம்மாவை தேற்றி சாப்பிட வைத்து தூங்கச்செய்வதற்குள் பெரும்பாடாகிவிட்டது.  அப்பா என்றைக்குமே இப்படித்தான்.  அவரின் பேச்சுபடிதான் எல்லாரும் நடக்கவேண்டும். நீ எதுவும் யோசிக்க வேண்டாம்.. உனக்கும் சேர்ந்து நானே யோசிக்கிறேன்.. சொல்றத மட்டும் செய்ங்கிற மாதிரியான டைப்.  பி.எஸ்.சி வரைக்கும் சாத்தூர் காலேஜ்ஜில்தான் படிப்பு எனக்கு. அம்மா என்றைக்கும் அப்பாவை எதிர்த்து பேசியது கிடையாது.  எதிர்த்து என்ன பேசியதே கிடையாது. அவள் குரலை வீட்டில் நான் கேட்டதே கிடையாது. வெளி மனுசர்களிடம் கூட அவள் பேசமாட்டாள். ஜோதி மாமா வீட்டு, இல்லையென்றால் கோவில்பட்டியில் ஸ்ரீதர் மாமா வீடு. இந்த இரண்டு இடங்களை தவிர நாங்கள் அவ்வளவ்வாக புலங்கியது கிடையாது.  இரண்டு மாமாக்களும் அம்மாவின் பெரியப்பா, சித்தப்பா பசங்கள். அப்பாவுக்கு கூடப் பொறந்தவர்கள் யாரும் கிடையாது போலவே அம்மாவுக்கும்.  இந்த இரண்டு மாமாக்களின் வீடுகள்தான்.  அதுவும் எப்போதாவதுதான் போவதும் வருவதும்.

கணேஷ் எனக்கு ஸ்கூலில் ஒரு வருடம் சீனியர்.  +2வில் ஒரு வருடம் இம்ப்ரூவ்மெண்ட் எழுதியும் இஞ்சியரிங் கிடைக்காமல் போனதால் நாங்கள் இருவரும் மூன்று வருடம் சாத்தூரில் ஒன்றாக காலேஜ் போனோம். நான் எம்.எஸ்.சிக்கு திருச்சி செயின் ஜோசப் போனேன். அவன் ஜோதி மாமாவுடன் சாத்தூரில் அவர்களின் ஹோட்டலிலையே ஒன்றாக உட்கார்ந்துவிட்டான். திருச்சியில்தான் மரியா எனக்கு அறிமுகமானாள்.  எம்.எஸ்.சி முடிக்கும்வரைக்கும் நட்பாகத்தான் இருந்தது. வேலை தேட சென்னைக்கு வந்தோம். அவள் அவளது மாமவின் வீட்டில் தங்க நான் நண்பர்களுடன் திருவல்லிக்கேணியில் ரூம் எடுத்தேன். மூன்று மாதம் கழித்து எனக்கு வேலை கிடைக்க அவளுக்கு கூப்பிட்டேன். வீட்டில் தனியாத்தான் இருக்கேன் வாடா என்றாள். அன்றைக்கு பார்த்து மழை பெய்து தொலைத்தது.

வேலை முதல் மாசம் சம்பளம் வாங்கியவுடன் அப்பாவிடம் கொடுக்க ஊருக்குப் போனேன்.  அப்பா என் சம்பள பணத்தை என்னிடமே கொடுத்துவிட்டு “ இது உம்பணம். நீயே வச்சுக்கோ. எனக்கு பென்ஷன் வரது.. போதும்” என்றார்.  ஒரு இரண்டுநாள் இருந்துவிட்டு ஊருக்கு கிளம்புகையில் பஸ் ஏத்தி விட வந்தவர் “பணம் சம்பாதிக்க தெரிஞ்சா போதாது. சம்பாதிச்சத காப்பாத்தவும் தெரிஞ்சுக்கோ” என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.  திரும்பவும் சென்னை வந்து ஒரு இரண்டு மாசம் கழித்தவுடன் மரியா கூப்பிட்டாள். நுங்கம்பாக்கம் காஃபிடேவுக்கு வரச்சொன்னாள் போயிருந்தேன். மிகவும் சோர்வாக இருந்தாள். என்ன என்று கேட்டவனிடம் மூன்று விரலை காண்பித்தாள்.  வேறு வழியில்லாமல் சர்ச்சில் மோதிரம் மாத்தி திருமணம் முடித்துவிட்டு ஊருக்கு கூட்டிப்போனேன். அப்பா வீட்டுக்குள் விட மறுத்துவிட்டார். அம்மா வெளியே வரவேயில்லை.  இடைப்பட்ட காலத்தில் மரியாவின் மாமாவும் இறைவனடி சேர, அவரின் கார் கம்பெனியை நிர்வகிக்க அவருக்கு குழந்தைகள் இல்லாததால் நான் வேலையை விட வேண்டியதாகிவிட்டது.  மரியாவும் வேறொரு வேலையில் சேர்ந்து , மேலே வந்தாகிவிட்டது.  இப்பொழுது அமெரிக்கா போயிருக்கிறாள்.

வந்து மூன்று நாட்கள் ஆகிவிட்டது.  அப்பாவை பற்றிய புதிரை  தொறக்க எதுவும் சாவி கிடைக்கவில்லை. ஊருக்குள் பேசியதில் அவர் யாரிடமும் சமிபத்தில் பேசியது மாதிரி எதுவும் தெரியவில்லை. கோவில்பட்டியில் இருந்து ஸ்ரீதர் மாமா மட்டும் ஒரு முறை வந்து போனார்.  ஒன்றும் துலங்காமல் நாட்கள்தான் போனது. அம்மாவும் திரும்பி திரும்பி சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தாள். வீட்டில் மிக்ஸி, கிரண்டர் கூட அவர்தான் போடுவார் என்றாள். ”வாம்மா ஏங்கூட என்றாள் திட்டுவாரேடா” என்றாள். ஒருநாள் மிக்க எரிச்சல் பட்டு “அப்படின்னா அன்னிக்கு கணேஷ் பார்த்து ஆத்துக்கு கூட்டிண்டு வரலைன்னா இத்தன நாள் அங்கயே நின்னுண்டு இருப்பியா என்ன” என்றதற்கும் “இல்லேன்னா திட்டுவாரேடா” என்றாள். ஒரு வழியாக சமாளித்து அவளை கூப்பிட்டுக்கொண்டு சென்னை வந்தேன்.

இடையில் ஒரு தடவை “ஹவ் எவ்ரிதிங் இஸ் கோயிங் ஹனி” என்று விரிவாக மரியா மெயில் அனுப்பியிருந்தாள். “பிட் பிஸி ஹனி.. எவ்ரி திங் கோயிங் ஃபைன்” என்று ரிப்ளை அனுப்பினேன். அம்மா அப்பா பற்றி ஒன்றும் சொல்லவில்லை.

சென்னை வந்து முதல் இரண்டு நாட்கள் அம்மாவுடன் தங்கிவிட்டு மூன்றாவது நாள் ஆபிசுக்கு போனேன். கிச்சனிலும், வீட்டின் எந்த மூலையில் இருந்த எந்த சாதனத்தையும் அவளுக்கு இயக்க தெரியாமல் இருந்தது. ஆபிசிடமிருந்து திரும்பி வருகையில், வீட்டின் ஹாலில் ஒரு ஒரத்தில் சுருங்கி படுத்துக்கிடந்தாள். மத்தியானம் சாப்பிட்டையா என்றதற்கு சாதம் எஙகயிருக்குன்னு தெரியலைடா என்றாள். சாதத்தை எலெட்ரிக் ரைஸ்குக்கரில் வைத்துவிட்டு போனது நியாபகம் வந்தது. வந்து இரண்டு வாரத்தில் கொஞ்சம் கொஞ்சம் இடத்திற்கு பழகிவிட்டாள்.  அந்த ஞாயிற்றுக்கிழமை மத்தியம் சாப்பிட்டு முடித்தவுடன் மரியாவிடமிருந்து அழைப்பு வந்திருந்தது.  போனில் அழைத்தவள் அவள் என்னை மிஸ் செய்பதாகவும் , நானும் அப்படியே இருப்பேன் என்று நம்புவதாகவும் சொன்னாள்.  வந்தவுடன் எங்கயாது ஒரு லாங் ட்ரிப் போகவேண்டும் என்றாள்.  பேசி முடித்தவுடன்  அம்மா “அஷோக் உனக்கு கோந்தை .... “ என்று கேட்க ஆரம்பித்து அமைதியனாள்.

ஒருபுறம் அவளாகவே என்னிடம் முதலில் ஒரு கேள்வி கேட்டதும், இன்னொரு புறம் என்னை பற்றியும், எங்களை பற்றியும் அவளிடம் ஒன்றும் சொல்லாததை எண்ணி ஒரே சமயத்தில சந்தோசமாகவும் , வருத்தமாகவும் இருந்தது. எனக்கும் மரியாவுக்கு பிறந்த முதல் குழந்தை சிறிது நாட்களிலயே இறந்து போனதையும் , இன்று வரை அடுத்த குழந்தைக்கு நாங்கள் முயலாமல் இருப்பதையும் அவளிடம் சொல்லி முடித்தவுடன், கேவி கேவி அழ ஆரம்பித்தாள். பின்னர் என்னை தேற்றுவதாக நினைத்துக்கொண்டு எனது தோளைத் தொட்டு அவள் மடியில் என்னை படுக்க வைத்து தலையை கோதியபடி இருந்தாள். பின்னர் வந்த இரண்டு நாட்களும் கண்களில் ஒருவித சோகத்துடனையே நடமாடிக்கொண்டிருந்தாள். இங்கே வந்து இரண்டு வாரங்கள் ஆயிருந்தாலும் கூட அப்பாவை பற்றிய தேடலை பற்றி ஒரு வார்த்தை கூட அவள் கேட்கவில்லை. உண்மையிலயே அதை எந்த புள்ளியில் இருந்து ஆரம்பிப்பது என்று எனக்கு புரியாமல் குழம்பிக்கொண்டிருந்தேன்.

மூன்றாவாது நாள் கணேஷ் என்னை அழைத்து அப்பா திரும்பிவிட்டதாகச் சொன்னான். திரும்பியும் அந்த இரவு மீண்டும் அம்மாவை கூட்டிக்கொண்டு ஊருக்கு திரும்பினேன். அங்கே இருந்ததை பற்றியும், மரியாவை பற்றியும், அவளை சந்திக்காததை பற்றியும், பின்னர் என்றாவது தான் அங்கே திரும்புதல் சாத்தியமா என்றும் அவளுக்கு எந்த கேள்விகளும் இல்லை. மறுநாள் காலை ஊருக்கு நுழைந்து வீட்டை நெருங்கியவுடன், அவளை காரிலிருந்து இறக்கினேன். அப்பா வாசலிலையே நின்று கொண்டிருந்தார். வீட்டில் அம்மாவுடன் நுழைந்த என்னை தடுக்கவும் , அழைக்கவும் செய்யாமல் அப்படியே நின்று கொண்டிருந்தார். வீட்டினுள் நுழைந்தவுடன் அம்மா அப்பாவை ஒரு நொடி நிமிர்ந்துபார்த்தாள். வா என்பதுமாதிரி அப்பா தலையசைத்தவுடன் கிடுகிடுவென வீட்டினுள் நடந்தவள் அப்படியே மறைந்துபோனாள். நான் அப்படியே ஹாலில் இருந்த சேரில் உட்கார்ந்தேன்.
எனக்கெதிரே இருந்த சேரில் அப்பாவும் உட்கார்ந்தார். சற்று நேரம் யார் மெளனத்தை கலைப்பது என்று தெரியாமல் உட்கார்ந்திருதோம்.

 அப்பா காணாமல் போனதை பற்றி அவரே சொல்ல ஆரம்பித்தார்.
“அன்னிக்கு கோவில்பட்டிலேந்து கிளம்பின உடனே கொஞ்ச நேரத்துல பஸ் கோவில்பட்டி பைபாசுல நின்னுடுத்து.  வெளிய எட்டிப்பார்த்தா ஒரு பொம்மனாட்டி கைல கோந்தையோட நின்னுண்டு இருந்தா. பக்கத்துல காருல யாரோ அடிப்பட்ட காயத்தோட டிரைவர் சீட்டுல. என்னன்னு தெரிஞ்சுக்கலாம்னு இறங்கினேன். இறங்கி திரும்பி பாக்கறதுக்குள்ள பஸ்ஸ எடுதுட்டா. அந்த பொண்ணு வேற அழுதுண்டே இருந்தா. அவா கூட வேற யாரும் இல்லை. என்ன பண்றதுன்னும் நேக்கு தெரியலை.  அவாள அங்கயே நிக்க சொல்லிட்டு , ஒரு கிலோமீட்டர் நட்ந்து போயி, அங்க் இருந்த பெட்ரோல் பங்குலேந்து , ஆம்புலன்ஸுக்கு கால் பண்ணிச்சொன்னேன். அப்புறம் கொஞ்சம் தண்ணி பாட்டில வாங்கிண்டு அவாகிட்ட ஒடி வந்தேன். செத்த நேரம் கழிச்சு ஆம்புலன்ஸ் வரவும் அவாள கூட்டிண்டு சாத்தூர் கவர்மெண்ட் ஹாஸ்பிட்டலுக்கு வந்தேன். இங்க பார்க்க முடியாதுனுட்டா.. திரும்பி அந்த ஆம்புலென்ஸ்லயே அவாள கூட்டிண்டு மதுரை பெரியாஸ்பத்ரி போயிட்டேன்.   அந்த பொண்ணும் அந்த பையனும் வீட்ட எதிர்த்து, காதலிச்சு கல்யாணம் பண்ணிண்டவாளாம்.  அவ பேரு எதோ சொன்னா.. எனக்கு மண்டைல் நிக்கல.  இப்பத்தான் நேத்திக்கு காலைல அந்த புள்ளையாண்டான் கண்முழிச்சான்.  அப்பா நன்றிப்பான்னா அந்த பொண்ணு. நல்லாயிரும்மான்னு ரெண்டு பேரயும் ஆசிர்வாதம் பண்ணிட்டு வந்தேன்”
என்ன சொல்லவென்று தெரியாமல் அப்படியே அமர்ந்திருந்தேன்.  நெஞ்சடைத்த மாதிரியிருந்தது.

சற்று நேரம் கழித்து “ யாருக்காது கூப்பிட்டு சொல்லியிருக்கலாம்ல ? “ என்றேன்.

“யார் நம்பரும் எங்கிட்ட இல்லைடா. அதோட இவா யாராது உன்னைய கூப்பிட்டு சொல்லியிருப்பா.. நீ வந்து இவள கூப்டுண்டு போயிருப்பன்னு தெரியும். நான் இல்லாட்டியும் அவ் சேஃப்பாதான் இருப்பா. பெருமாள் எப்பவும் அவளோடத்தான் இருப்பர்னு நம்பிக்கை என்றார்”.
ஒரு மணி நேரம் ஒன்னும் பேசாமல் அப்படியே உட்கார்ந்திருந்தேன்.

அப்படியே உட்கார்ந்திருந்தவன் “கிளம்பறேப்பா” என்றேன்.
"நிமிர்ந்தவர் ... கொஞ்சம் யோசித்துவிட்டு .. ம்” என்றார்.

கிளம்பியவனுடன் வாசல் வரைக்கும் வந்தவர் , காரைக் கிளம்பும் போது “ வழிச்செலவுக்கு கைல காசிருக்கா உங்கிட்ட” என்றார். “இருக்குப்பா” என்று தலையசைத்துவிட்டு காரைக் கிளப்பினேன்.

அம்மா அப்போதும் வெளியே வரவேயில்லை.

க ரா

க ரா

புத்தகங்களை வாசிப்பதில் விருப்பமுள்ள எளிய மனிதன். சும்மா கிறுக்கி பார்க்கிறேன்.

உங்கள் கருத்து என்னை உற்சாக படுத்தும்.

புதியது பழையவை

தொடர்பு படிவம்