அடையாளம்

நேரம் அதிகாலை மணி 3.45.

    பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் சென்னை விமான நிலைய தரையைத் தொட்டது.விமானத்தின்நடுவில் இரண்டு சீட்டுகளுக்கு நடுவில் மாட்டிக்கொண்டிருந்தான்.  மூன்று வருடங்கள் கழித்து ஊருக்கு வருகிறான்.  விமானத்திலிருந்து சென்னை எப்படித் தெரிகிறது என்று பார்க்க ஆசையாய் இருந்தது. ஆனால்  இரண்டு பக்கமும் நகர முடியாமல் ஆட்களின் கூட்டம்.அதுவும் இன்னும் விமானம் முழு நிறுத்ததுக்கு வரவில்லை. அதற்குள் எல்லாரும் எழும்பி தலைக்கு மேலாக இருந்த கதவுகளைத் திறந்து அவரவர் பெட்டிகளையும் பைகளையும் எடுக்க ஆரம்பித்திருந்தனர்.   அவனது இடதுபுறம் நின்றிருந்த  அந்த வெள்ளைக்காரர் ஹாய் குட்டி பையா என்னும் இன்னும் உட்கார்ந்திருக்க என்று பார்த்துச் சிரித்தார்.

                                            அவர் மியாமியிலிருந்து அவன் கூட வருகிறார்.  அவன் அமெரிக்காவின் அலபாமா மகாணத்தில் இருந்த பிரிமிங்காம் விமான நிலையத்திலிருந்து யுஎஸ் ஏர்லைனஸ் விமானத்தில் கிளம்பி ஃப்ளோரிடா மகாணத்தில்  இருந்த மியாமி வந்து அங்கிருந்து லண்டன் ஹீத்ரு விமான நிலையம் வந்து அங்கிருந்து சென்னை விமானநிலையம் வந்தடைய சற்றேக்குறைய 20 மணி நேரம் ஆகியிருந்தது.  அதில் பெரும்பாலான நேரம் அவன் தூங்கியிருந்தாலும் மிகவும் அலுப்பாகவே உணர்ந்தான்.    விமானத்தைப் பற்றிய அவனுடைய பெரிய கனவுகள் மூன்று வருடங்களுக்கு முன்னால் அவனது முதல் விமான பயணத்திலியே தகர்ந்திருந்தது.  காலை நீட்டக் கூட முடியாமல் சென்னையிலிருந்து லண்டனுக்கு 10.30 மணி நேரப் பயணம்,  அங்கே இறங்கி சிக்காகோவுக்கு உண்டான விமானத்தைப் பிடிக்க அவனுக்கு இருந்த இரண்டு மணி நேரம்லண்டன்  விமான நிலையத்தில் நடந்த பாதுகாப்பு சோதனைகள்சோதனைகளின் போது நடத்தப்பட்ட விதம் , பின்னர் லண்டனிலிருந்து சிக்காகோவுக்கு ஒரு பத்து மணி நேர விமானப் பயணம் ,  அங்கே இறங்கியவுடனே அங்க குடியுரிமை சோதனைகள் நடந்த இடம் , அங்கே ஆடு மாடுகளைத் துரத்துவது மாதிரி மனிதர்களைத் துரத்தியது;  நல்ல வேலை அமெரிக்காவிலிருந்து  வெளியேறும் போது அவ்வளவு சோதனைகள் இல்லை(ஊருக்குத் திரும்பும் உற்சாகத்தில்எதுவும் அவனைப் பெரிதாகப் பாதித்திருக்கவில்லை.

விமானத்தில் நின்று கொண்டிருந்த கூட்டம் மெதுவாக நகர ஆரம்பித்திருந்தது.  எந்திரித்து நிற்க அவனுக்கும் இடம் கிடைத்தது.  எந்திரித்து நின்றவுடன் அவனது பெட்டியையும் அவைகளை வைத்த இடத்தில் பார்த்தான். இரண்டுமே அவன் வைத்த இடத்தில் இல்லை.  பெட்டி மூன்று இருக்கைகளுக்கு முன்னதாகவும் ,  மடிக்கணினிப் பை  எதிர்புறத்தில் இரண்டு இருக்கைகளுக்குப் பின்னரும் இருந்தது.  அவனது பொருட்களை எடுத்துக்கொண்டு வெளியே வந்தவனின் முகத்தில்  சென்னையின் வெக்கை அடித்தவுடன் அவனுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.   குடியுரிமை சோதனைகளை முடித்து விட்டு கீழே இறங்கி வந்தான்.  அங்கே பெட்டிகளை சோதிக்க ஒரு பெரிய வரிசை நின்றிருந்தது.   அங்கேயிருந்து பக்கத்திலிருந்த கழிப்பறையைப் பார்த்தவுடன் சிறுநீர் கழிக்க யோசனை வந்தது.  அங்கே  இன்னொரு கூட்டம் நின்றுகொண்டிருந்தால் என்ன செய்ய என யோசனை வந்தவுடன் அந்த முயற்சியைக் கைவிட்டுவிட்டு அங்கே வரிசையில் நின்றுவிட்டான்.    மெதுவாக நகர்ந்த வரிசையில் நின்று ஒருவழியாக அந்த சோதனையை முடித்து விட்டு அவனது பெட்டிகளைச் சேகரிக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தான்.  விமானத்திலிருந்து சோதனைகளை முடித்து விட்டு இங்கே வர ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஆகியிருந்தது.  இன்னும் பெட்டிகள் அங்கே வந்து சேர்ந்திருக்கவில்லை

 

அடுத்த அரை மணி நேரம் கழித்து பெட்டிகள் வரும் இடைவார்  மெதுவாகச் சுழல ஆரம்பித்தது.. அவ்வளவு நேரம் அமைதியாக நின்றிருந்த கூட்டம் மொத்தமாக முட்டி மோதி பெல்ட்டை நோக்கி முண்டியடிக்க ஆரம்பித்தது.  அந்த கூட்டத்தில் முண்டியடிக்க அவனுக்குத் தெம்பு இல்லை.  ஒதுங்கி நிற்க , கூட்டத்திலிருந்து ஒவ்வொருவராக அவர்களின் பெட்டிகளை எடுத்துக்கொண்டு வெளியேறும் வழியை நோக்கி வேகவேகமாக  நகர ஆரம்பித்தனர்.   கூட்டம் ஒருவழியாகக் குறைய ஆரம்பித்தவுடன் பெல்ட்டின் அருகில் போய் அவனது பெரிய பெட்டிகள் இரண்டையும் கண்டுபிடித்து  சின்ன தள்ளு வண்டியில் எடுத்து வைத்து வெளியேறும்  வழியை  நோக்கி நடக்க ஆரம்பித்தான்.   வெளியில் வந்தவனை நோக்கி  ஆட்டோகாரர்களும் டாக்சி ஓட்டுநர்களும் மொய்க்க அவர்களிடம் தப்பித்து கொஞ்சம் ஒதுங்கி நின்றான்.  அவனை வரவேற்க அப்பாவும் அம்மாவும் வரமுடியாத நிலை.  பதினைந்து நாட்களுக்கு முன்னரே பேசும்பொழுது ஊரில் பாட்டி சீரியஸாக இருக்கிறார் என்றும் அவன் வரும்போது அவனை வரவேற்க அங்கே இருக்க முடியாது என்றும் வீட்டின் சாவியை கொரியரில் அனுப்பியிருந்தார் அப்பா.

கிளம்பும்போது சாவியை மடிக்கணினிப் பையில் ஒரு இடத்தில் வைத்திருந்தான்.  அந்த சாவியை மடிக்கணினிப் பையில் தேடி எடுத்து அவனது கால்சட்டை பையில் வைத்துக்கொண்டு,  கொஞ்சம் இந்திய ரூபாய் நோட்டுகளையும் எடுத்து கால்சட்டையில் வைத்துக்கொண்டு,   இன்னும் கொஞ்சம் வெளியேறி வந்தான்,  அங்கே கொஞ்சம் வயசான ஒரு ஆட்டோக்காரை அனுகி இடத்தை சொன்னான்,  அவனுடைய எல்லா பெட்டிகளையும் ஒரு மாதிரி அடிக்கி அவனும் உட்கார்ந்து வீட்டை நோக்கிப் போக ஆரம்பிக்கும்போது தூக்கம் முகத்தில் அறைந்தது.

 பம்மலில் இருந்து சற்றே தள்ளி திருநீர்மலைக்கு அருகில் இருந்த ஒரு சின்ன அடுக்குமாடிக்குடியிருப்பு அது.  எட்டே எட்டு வீடுதான்.   நேரம் 5.45 ஆகியும் தெருவில் ஆள்நடமாட்டமில்லை.  அவனது அடுக்குமாடிக்குடியிருப்பை  நெருங்கி அவனது பெட்டிகளை எல்லாம் கீழே இறக்கி ஆட்டோகாரரை அனுப்பி வைத்து விட்டு,   முதல் மாடியிலிருந்த அவனது வீட்டுக் கதவைத் திறந்து  கீழே இருந்து ஒவ்வொரு பெட்டியாகக் கொண்டு வந்து சேர்த்தவுடன் இடுப்பில் வலி பின்னியது,  அப்படியே படுக்கையில்  விழுந்தவுடன் தூங்க ஆரம்பித்து எவ்வளவு நேரம் ஆனது என்று தெரியவில்லை.  யாரோ கதவைப் பலமாகத் தட்டும் ஓசை கேட்டு கதவைத் திறந்தான்.  கண்களைத் திறந்து பார்க்கவே முடியாமல் இருந்தவனைத் தள்ளிக்கொண்டு  தபதபவென்று  நான்கு ஐந்து  பேர் உள்ளே நுழைந்தனர்.  அதில் ஒருவர் தோளைத் தொட்டு உலுக்கி நீ சுந்தர்தான் என்று கேட்க அவர் என்ன கேட்கிறார்  எனப் புரியாமல் , என்ன பதிலளிக்க என்று தெரியாமல் குழம்பிப் போய் நின்றான்இன்னொருவர் , மற்றவன் கிட்ட  ஏமாற்றி வாங்கின காசில் தண்ணியப்போட்டு  மட்டையாகி கிடக்கிறியான்னு இன்னொரு பக்க தோளையும் பிடித்து உலுக்க  என்ன செய்யவேண்டும் என்று புரியாமல் நின்றான்.

இன்னும் இரண்டு பேர் ஒவ்வொரு அறையாக போய் பார்த்துவிட்டு ,ஐயா  இரண்டு ரூமையும் பார்த்தாச்சு பெரிசா ஒன்னும் இல்லைஒரு பெட் ரூம்ல பெரிசா இரண்டு பெட்டி,  அப்புறம் ஒரு சின்ன பெட்டி அதைத்தவிர ஒரு பை என்றார்செரி அதெல்லாம் இருக்கட்டும்,   வீட்ட பூட்டிட்டு வாங்க” என்றவர் அவனை தள்ளிக்கொண்டு கீழே வந்தார்.  அப்பவும் குடியிருப்பில் யாரும் எழுந்திருக்கவில்லை.   ஜீப் நகர ஆரம்பித்த  பிறகுதான் அவனுக்கு ஒருவழியாக தன்னுணர்வு வந்தது,   ஏன் எதற்கு என்று கேட்க நினைத்தவனுக்கு மேலண்ணமும் கீழண்ணமும் ஒட்டிக்கொண்டு வாய் திறக்க முடியாமல்  திருவிழாவில் கூட்டத்தில் தொலைந்து போன குழந்தை மாதிரி திருதிருவென்று முழித்துக்கொண்டு உட்கார்ந்தான்.  ஒரு இரண்டு கிலோமீட்டர் ஓடி ஒரு போலிஸ்ஸ்டேஷன் வாசலில் ஜீப் நின்றது.  சடசடவென்று இறங்கிய  எல்லாரும் அவனையும் தள்ளிக்கொண்டு போலிஸ் நிலையத்தில்  நுழைந்தவரில் ஒருவரைப் பார்த்து என்ன கேசுய்யா என்று ஒருவர்  கேட்க ”அந்த 420,  அதான் ஒரு கூட்டம் வந்து நேத்திக்கு அழுதுவிட்டு போச்சே” என்றார்.   என்னுடன் ஜீப்பில் வந்த ஒருவர் என்னை இன்னொரு அறைக்குத் தள்ளிக்கொண்டு போய் இங்க உட்காரு என்று சொல்லிவிட்டுப் போனார்.  அங்கே ஒரு பெஞ்சு இருந்தது.

பெஞ்சில் உட்கார்ந்தவனுக்குத்  தண்ணீர் தாகமடித்தது.. யாரிடமும் கேட்கவும் பயமாக இருந்தது.   இவனை அவர்கள் கிளப்பிக் கொண்டு வந்த அவசரத்தில் பர்சயும்,மொபலையும் எடுத்துக்கொள்ள முடியவில்லை.  அம்மா அப்பாவிடம் எப்படித் தொடர்புகொள்ள என அவனுக்குத் தெரியவில்லை.   குடியிருப்பில்  யாராவது அல்லது தெருவில் யாராவது பார்த்திருப்பார்களா எனவும் தெரியவில்லை.

 

----

 

தாம்பரம் ரெயில்வே ஸ்டேஷனில் முத்து நகர் விரைவுவண்டி உள்ளே வரும்போது  மணி 8 ஆக மூன்றே நிமிடங்கள்தான் இருந்தது.  மெதுவாக இரைய விழுங்கி அசைபோட்டுக்கொண்டே நகரும் மலைப்பாம்பு மாதிரி  நலுங்கு குலுங்கி ரயில் நின்றவுடன் ஒவ்வொரு பெட்டியிலிருந்தும் ஆட்கள் இறங்க ஆரம்பிக்க ,8 வது பிளார்ட்பார்ம் பிதுங்க ஆரம்பித்ததுசரியாக வண்டி புறப்பட ஆரம்பிக்க சில நொடிகள் இறங்கும் பொழுது ஒரு கட்டை பைஒரு பெட்டியை இறக்கி வைத்து விட்டு சரஸ்வதி எஸ்பெட்டியிலிருந்து இறங்கினார்இறங்கியவுடன் அங்கிருந்து எப்படியும் ஒரு கிலோமீட்டர் தள்ளி கண்ணுக்குத் தெரிந்த நடைமேடையைப் பார்த்து பெட்டியையும் பையையும் தூக்கிக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்.  முந்தின நாள் அவருடன் அவரது கணவர் தயாளனும் வருவதாகத்தான் இருந்தது.  ஆனால் கடைசி நேரத்தில் ஏற்பட்ட ஒரு சிறு பிரச்சனையால் சரஸ்வதி மட்டும் கிளம்பி வந்திருந்தார்.  அவர்களது பையன் அமெரிக்காவிலிருந்து இன்று காலை வந்திருப்பான்.   பாவம் பயணத்தில் ஏதாவது சாப்பிட்டானா என்று தெரியவில்லை.   சீக்கிரம் போய் அவனுக்கு ஏதாவது செய்து தரவேண்டுமே என்ற யோசனையில் என்னதான் வேகமாக நடக்க முயற்சி செய்தாலும் மிகவும் மெதுவாகத்தான் அவரால் நடக்க முடிந்தது.  ஒருவழியாக ரயில் நிலையத்தின் பிரதான வாசலை அடைந்தவருக்கு ஆட்டோகாரர்களை காணாமல் அயற்சியாக இருந்தது.

ஒவ்வொரு முறையும் கணவருடன் வரும்பொழுது பிரதானச்சாலை போய் அங்கேயிருந்துதான்  ஆட்டோ பிடிப்பார்.   சிறிது நேரம் கழித்து  , அதிர்ஷ்டவசமாக இன்னொருவரை இறக்கி விட வந்த ஆட்டோ இவர் நிற்குமிடத்தில் வந்து நிற்க , அதில் வந்தவர் இறங்கி போனதுடன்

அந்த ஆட்டோகாரரிடம் இடத்தை சொல்ல,  அந்த ஆட்டோகாரர்  300ரூபாய் ஆகும் என்று சொன்னாலும்,  பையன் மட்டுமே மனதில் நின்றதால் எதுவும் சொல்லாமல் ஆட்டோவில் ஏறி உட்கார்ந்தார்.

 

நல்ல வேலை ரோட்டில் நிறைய நெரிசல் இல்லாமல் இருந்ததால்  வீட்டிற்கு வர அரை மணி நேரமே பிடித்தது.  அவரது உடைமைகளைத் தூக்கிக் கொண்டு முதல் மாடியில் இருந்த வீட்டிற்கு வந்து தூங்கிக்கொண்டிருக்கும் பையனை எழுப்ப மனதில்லாமல் அவரிடம் இருந்த சாவியைக் கொண்டு கதவைத் திறந்தார்.   வீட்டிற்குள் நுழைந்து விளக்கைப் போட்ட வுடன்  தரை முழுக்க தெரிந்த பூட்ஸ் தடங்கள் சரஸ்வதிக்கு பெரும் குழப்பத்தைத் தந்தது.  திறந்தே கிடந்த படுக்கையறையில் நுழைந்து  விளக்கைப் போட அங்கே பையன் கொண்டு வந்த பெட்டிகள் ஒரு ஓரமாக இருக்க,  அவனது மொபைலும் பர்சும் கட்டில் மேல் கிடந்தன.   பையனை மட்டும் காணாமல்அந்த படுக்கையறையிலிருந்த குளியலறையில் எட்டிப்பார்க்க  அங்கேயும் அவனில்லை.  காலையில் வந்தவன் எங்க போனான் என்ற குழப்பத்துடன் மெயின் ஹாலில் இருந்த இன்னொரு குளியலறையையும் திறந்து பார்க்க அங்கேயும் அவன் இல்லை.  பெரும் குழப்பத்துடன் கணவரை அழைக்க அவரது மொபைலை எடுத்துப் பார்த்தால் அதில் சுத்தமாக சார்ஜே இல்லை.   அறையில் இருந்த பூட்ஸ் தடங்களையும் பையன் காணாததையும் சேர்த்து அவருக்கு மிகவும் பயமாக நெஞ்சு வலிப்பது மாதிரி இருந்தது.  அப்படியே சரிந்து தரையில் உட்கார்ந்தவருக்கு ஒரு ஐந்து நிமிடம் கழித்து அடுக்குமாடிக்குடியிருப்பு உள்ளே நுழைகையில் கீழே ஒரு சைக்கிள் நின்றது ஞாபகம் வர,  சுவரைப் பிடித்துக்கொண்டு மெல்ல எழுந்தார்.

 அடுக்குமாடிக்குடியிருப்பில் தரை தளம் வண்டிகளை நிறுத்தஅதோடு ஒரு ஒரு பெரிய வீடு.  அந்த வீட்டில் இருந்தவர்கள் யாரும் இப்பொழுது இங்கே இல்லைஅமெரிக்காவில் வேலை கிடைத்து அங்கே போயாயிற்றுஇவர்களது தளத்தில் இவர்களது வீட்டையும் சேர்த்து மூன்று வீடுகள் எஃப்1, எஃப்2, எஃப்3 . இவர்களது எஃப்2, எஃப்1ல் ஒரு பையன்இன்னொரு வீட்டிற்கும் இன்னும் ஆள் வரவில்லை.  இரண்டாவது தளத்தில் ஒரு வீடு மட்டுமே லிலைபோயிருக்கிறது.  அவர்களும் இன்னும் குடியேறவில்லை.  மூன்றாவது தளத்தில் ஒரு ஆஸ்பெட்டாஸ் கொட்டகை.  வீடு கட்டும்பொழுது இங்கே செக்யூரிட்டியாக இருந்தவர் இன்னும் அங்கேதான் இருக்கிறார்.  அடுக்குமாடிக்குடியிருப்பு கட்டியவருக்கு அவர் ஏதோ முறையில் சொந்தக்காரர்அவரது சைக்கிள்தான் கீழே நின்றது.. ஒரு வேலை அவர் எதையாவது பார்த்திருக்கலாம் என்ற நம்பிக்கையில் சரஸ்வதி மெதுவாகப் படியேற ஆரம்பித்தார்.

 

மூன்றாவது மாடியேறி வந்தவர் மூடியிருந்த ஆஸ்பெட்டாஸ் அரையின் கதவை மெதுவாகத் தட்ட எதுவும் நடக்கவில்லைஒரு நிமிடம் ஒன்றும் செய்யாமல் நின்றவர் , வேறு வழியில்லாமல் சற்றே பலமாக மறுபடியும் கதவைத் தட்டினார்.

இந்த தடவை உள்ளே விளக்கைப் போடும் சத்தமும்,   பின்னர் நடை சத்தமும் கேட்டவுடன் , கதவு திறப்பதற்காகச் சற்றே பின் தள்ளி நின்றார்.   கதவைத் திறந்தவர் சரஸ்வதியைப் பார்த்து “என்னம்மா இப்பதான் வந்திங்களாதம்பி வந்துட்டாரா “ என்றார்அவரிடம் கீழே கண்ட பூட்ஸ் தடங்களையும் ,  பையன் காணததையும் சொல்லிவிட்டு “ நீங்க யாரயாது பார்த்தீங்களா “ என்றார் சரஸ்வதி.  “இல்லையேம்மா,  ஐயா அஸ்தினாபுரத்துல கட்டிட்டு இருக்கிற அப்பார்ட்மெண்டுல இரவு வேலை நடந்ததென்று அங்க போய்விட்டு விடியக்காலைலதான் வந்தேன்,  நீங்க கீழ போங்கம்மாமுகத்தை கழுவிட்டு வரேன் பார்க்கலாம்.” என்றவாறு தண்ணீர் டாங்கின் அடியில் இருந்த குளியலறையைப் பார்த்து நடந்தார்.  ஒரு நிமிடம் அங்கேயே நின்றிருந்த சரஸ்வதி மெதுவாகக் கீழே இறங்கி நடக்க ஆரம்பித்தார்.

 

மாடியிலிருந்து வீட்டிற்குள் வரவும்,  வேலைக்காரி பவானி வரவும் சரியாக இருந்தது.  வந்ததும் வராததுமாக “ அம்மா வாங்கம்மாதம்பி வந்துட்டாரா,  சாக்லெட்டுல்லாம் வாங்கிட்டு வந்துருக்காரா ? புள்ளைக கேட்டுட்டே இருக்குதுக “ என்று பேசிக்கொண்டே போனவள்குழப்பத்திலும் அதிர்ச்சியிலும் நின்ற சரஸ்வதியைப் பார்த்து ஏதோ ஞாபகம் வந்தவளாக “ சாரிம்மாதம்பி தூங்கிட்டு இருக்கும்” என்றாள்.  ஒரு நிமிடம் எதுவும் பேசாமல் நின்றிருந்தவள் கீழே குனிந்து பார்த்தவள் தரையில் கிடந்த மூடுகாலணி தடங்களைப் பார்த்து குழப்பமாக “ தம்பி பூட்ஸ் காலோடயா உள்ள வந்துச்சு” என்று சொல்லி முடிக்கவும் சரஸ்வதி அழ ஆரம்பிக்கவும் சரியாக இருந்தது.   சரஸ்வதி அழுவதைப் பார்த்து பவானியையும் அதிர்ச்சி தொற்ற என்னவென்று தெரியாமலே பவானியையும் அழுகை தொற்றியது.  சரியாக அந்த நேரம் பார்த்து உள்நுழைந்த ஆஸ்பெட்டாஸ் கூரை காரர் திகைத்துப் போய் நின்றார்.

 ---

 பல்லாவரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர். பேரனுக்கு குரோம்பேட்டையில் ஒரு ஸ்டார் ஹோட்டலில் அன்றைக்குப் பிறந்தநாள் கொண்டாட்டம்  ஏற்பாடு ஆகியிருந்தது.   அந்த கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள முதல்வரின் குடும்பத்தினரும் வருவதாகச் செய்தி வந்திருந்ததால்பம்மல் ஸ்டேசன் இன்ஸ்பெக்டர் அமலனும் அவரது மேலதிகாரிகளுடன் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனிக்கப் போயிருந்ததால் ஸ்டேஷன் பக்கம் வந்து இரண்டு நாள் ஆகியிருந்தது.   சப இன்ஸ்பெக்டர் ஷாகிர் மட்டுமே இப்பொழுது நிலையத்தில்.   காலையில் தீருநீர்மலை குப்தா நகர் ராஜிவன் அடுக்குமாடிக்குடியிருப்பில் ஒருவனைஅழைத்து வந்தவுடன் தலைமைக் காவலர் வேணுவிற்கு ஷாகிரிடமிருந்து அழைப்பு வந்திருந்தது.  அவர் பம்மல் சங்கர் நகரில் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு அடுக்குமாடிக்குடியிருப்பில் இருப்பதாகவும் கூடவே நான்கு காவலர்களைக் கூப்பிட்டுக்கொண்டு அங்கே வரவும் அழைப்பு.  அந்த பையனை இறக்கி விட்டு விட்டுஉடனே காவலர்களைக் கூட்டிக்கொண்டு அங்கே வந்தார்.  

இன்னும் ஓய்வு பெறுவதற்கு அவருக்கு நான்கு மாதங்களே இருந்தன.  ஒவ்வொரு நாளும் துளி கூட ஓய்வு கொடுக்காமல் இப்படியே அலைய வைத்துக்கொண்டிருந்தது அவருக்கு எரிச்சலாக இருந்தது.   மேலதிகாரிகளின்  எதிர்ப்பை சம்பாதித்தால் ஓய்வு பெறுவதில் சிக்கல் வருமோ என்று பேசாமல் இருந்தார்.  முந்தின நாள் இரவு பாரா போனதுஅதிகாலையில் அமலன் அழைத்துச் சொல்லி அந்த பையனைத் தூக்கி வந்து நிலையத்தில் வைத்ததுஉடனே இங்கே வந்தது என ஓய்வே இல்லாமல் சுற்றிக்கொண்டு இருந்தார்.   இங்கே வண்டி வந்து நிற்கவும்,  ஷாகிர் மறுபடி அழைக்கவும் சரியாக இருந்தது

 ஆட்களைக் கூட்டிக்கொண்டு நான்காவது தளத்திற்கு வரச்சொன்னார்.   புதிதாகக் கட்டிக்கொண்டிருக்கும் கட்டிடத்தில் ஏறுவதுக்குச் சிரமமாக இருக்கும் என மற்றவர்களை அனுப்பிவிட்டு அவர் கீழேயே நின்று விட்டார்.   ஒரு டீ குடிக்கலாம் என்று நினைக்கப் பக்கத்தில் பில்டிங்கை விட்டு வெளியே வந்து தெருமுனைக்கு வரை வந்து பார்த்தார்தேநீர்க்கடை எதுவும் இருக்கிற மாதிரி தெரியவில்லைஒன்றும் செய்யாமல் திரும்பிக் கட்டிடத்தை நோக்கி நடந்து வருகையில் மொபைலில்அழைப்பு வர யார் என்ன என்று பார்க்காமல் அழைப்பை எடுத்தார்அண்ணே எங்கயிருக்கீங்க இங்க கட்டிடத்தில் ஒரே ரத்தக் கறையா இருக்கு.  நீங்க மேல வந்திங்கன்னா நலலாயிருக்கும்.  இன்ஸ்பெக்டர் ஐயா என்ன கூப்புடறாங்க” என்றார் ஷாகிர்.

சரி ஐயா” இதோ மேல வரேன் என்ற படி நடக்க ஆரம்பித்தார்.  அமலனாகட்டும்ஷாகிராகட்டும் வேணுவை அண்ணன் என்றே கூப்பிட்டாலும் இவர் அவர்களை ஐயா என்றுதான் கூப்பிடுவார்.  40 வருட பழக்கம் உடம்பை வளைத்தே வைத்திருந்தது. .

 ----

 ஸ்டேஷனில் அவன் உட்கார்ந்திருந்த இடத்தில் ஒரே புழுக்கமாக இருந்ததுஅங்கே ஒரு ஃபேன் இருந்ததுஅது ஓடுமா , அதை அவன் போடலாமா என்று தெரியவில்லை.   நேரம் என்ன ஆனதென்றும் தெரியவில்லை

அப்பா அம்மா வந்திருப்பார்களா ?  அங்கே நடந்தது அவர்களுக்குத் தெரிந்திருக்குமாயாராவது பார்த்திருக்க மாட்டார்களா ! அவனுக்கு ஒரே குழப்பமாக இருந்தது.   இவன் உட்கார்ந்திருந்த இடத்தில் சில காவலர்கள் இன்னும் சில பேரைக் கொண்டு வந்து உட்கார்  வைத்து விட்டுச் சென்றனர்.  வந்தவர்கள் இவனைப் பார்த்து விட்டுப் பேசாமல் சென்றனர்.  அவர்களிடம் எதுவும் கேட்கவும் பயமாக இருந்தது.  இவனுக்கு அடுத்து அங்கே வந்தவர்கள் அத்தனை பேரும் தரையில்தான் உட்கார்ந்திருந்தனர்.   இவனொருவன் மட்டுமே பெஞ்சில் உட்கார்ந்திருந்தான்.  மற்றவர்களைக் கூட்டிக்கொண்டு வந்த காவலர்களும் அதைப் பார்த்து ஒன்றும் சொல்லவில்லை

இவனுக்கு மிகவும் பசித்தது.   யாரும் எதுவும் கொண்டு வந்து தரவுமில்லை.  இதற்கிடையில்  அந்த இடத்தை கூட்டிப்பெருக்க வந்த பெண்மணியும்  தரையில் உட்கார்ந்திருந்தவர்களிடம் சகஜமாகப் பேசிவிட்டு இவனைத் திரும்பிக் கூடப்பார்க்காமல் போனார்.  நேரம் ஆக ஆகப் பயமும் பசியும் அதிகமானது,  என்ன செய்ய என்றும் தெரியவில்லைசிறிது நேரம் கழித்து கையில் டீ கிளாசுகளுடன் ஒரு பையனும் காவலரும் வந்தனர்.  எல்லாருக்கும் டீ கொடுக்கச் சொன்ன காவலர் இவனைப் பார்த்து நீயும் குடி என்று சொல்லிவிட்டுப் போனார்.  டீ பையனிடம் ஒருவன் பீடி இருக்கா எனக் கேட்க அவன் இல்லை எனத் தலை ஆட்டி விட்டு இவனிடமும் ஒரு டீயை கொடுத்து விட்டு நகர்ந்தான்.

 டீயை குடித்துக் கொண்டே எதிரில் இருந்தவர்களைப் பார்த்தான்.  அவர்கள் இவனைக் கண்டுகொள்ளவே இல்லைஇதில் சற்று முன் பீடி கேட்டவன் அவனுக்கு அருகில் இருந்தவனின் ரகசிய இடங்களில் கையை விட்டுத் தடவ ஆரம்பித்தான்.. அந்த இன்னொருவன்  உடனே கெட்ட கெட்ட வார்த்தையில்  முதலாமவனை பார்த்துக் கத்த ஆரம்பிக்க,  டீ பையனுடன் வந்த காவலர் எட்டிப் பார்த்து இருவரையும் சத்தம் போட்டு விட்டு அகன்றார்.  அவர் அகன்றவுடன்  இவன் அந்த இருவரையும் பார்க்க இருவரும் இவனைப் பார்த்துச் சிரித்த  சிரிப்பு விகாரமாகப் பட்டது இவனுக்குஉடனே தலையைத் திருப்பிக் கொண்டவனுக்கு அங்கே உட்காரவே ஒரு மாதிரி இருந்தது

-----

அழுது கொண்டிருந்த சரஸ்வதியையும்  பவானியையும் பார்த்த ஆஸ்பெட்டாஸ் கூரை காரர் , கீழே கிடந்த பூட்ஸ் தடங்களைப் பார்த்தார்.  சிறிது நேரம் கழித்து  அம்மா அழுகாதிங்க.. யாரோ நிறையப் பேர் வந்துட்டு போயிருக்கிற மாதிரி இருக்கு.  அப்படியே கொஞ்ச நேரம் இருங்க.. நான் தெருல போய் சுத்தி பார்த்து கேட்டுட்டு வரேன்தம்பிக்கு ஒன்னும் ஆயிருக்காது என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.  அவர் நகர்ந்த சிறிது நேரத்தில் இருவரின்  அழுகையும் விசும்பல் ஆகியிருந்தது..  பவானியைப் பார்த்து சரஸ்வதி சைகையில் தண்ணீர் கேட்க,  கொடுத்த் தண்ணீரைக் குடித்து விட்டு சரஸ்வதி “ உன் மொபைல தாஎன் மொபைல்ல சார்ஜ் இல்லநான் அவருக்குக் கால் பண்ணனும்” என்றார்,

 

தயாளனை அழைத்து சரஸ்வதி ஒன்று விடாமல் சொல்லி முடிக்கையில் , தயாளனும் அதிர்ந்து போயிருந்தார்சிறிது நேரம் அவருக்கும்  என்ன செய்ய என்று தெரியாமல் ,  சரஸ்வதியிடமும் நான் இப்போதே கிளம்பறேன்கிடைக்கிற பஸ்ஸ பிடித்து மாறி மாறி வந்தாலும் அங்க வர நடு ராத்திரி ஆகிடும்.  நான் கேசவன்\ பிடிச்சு வீட்டுக்கு வர சொல்றேன் என்றார்

கேசவன் அவர்கள் ஊர்க்காரர்தயாளனின் மிக நெருங்கிய நண்பருக்குத் தம்பி முறை.  இங்கே ஒரு வக்கிலிடம் ஜூனியராக இருக்கிறார்.   பல வருடங்களாக இங்கே இருப்பதாலும் , வக்கிலாக இருப்பதால் எப்படியும் காவலர்களிடமும் அறிமுகம் இருக்கும்என்பதால் சரஸ்வதிக்கு நம்பிக்கை வந்தது.  சற்றே ஆசுவாசமான சரஸ்வதியிடம் ”அம்மா எப்படியும் தம்பியை கண்டுபிடிச்சிடலாம்மா ,  நீங்களும் பயணம் செஞ்சு வந்திருக்கிங்க , ஏதாவது சாப்பிடுங்க,  நான் தோசை மாவு வாங்கியாந்திருக்கேன்தோசை சுடவா ? “ என்றாள்.  சரஸ்வதிக்கும் பசிப்பது மாதிரி இருந்தது

-----

நேரம் ஆக ஆக அவனுக்கு அங்கே உட்காரவே முடியவில்லை.. ஒரு மாதிரியாக அந்த காவலர் இருக்கும் இன்னொரு அறையை நோக்கி நடந்தான்.  அந்த இன்னொரு அறை ஒருக்களித்துச் சாத்தியிருக்க,  கதவை நெருங்கி தட்ட போகையில் அங்கே அந்த காவலர் இன்னொருவரிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.   “ சிட்டியில் இந்த கூட்டத்துல நாப்பது அம்பது பேர் இருந்திருப்பானுங்க போல.  ஒவ்வொரு ஏரியாலயும் ஒரு ரூமெடுத்து ஒரு போட போட்டுட்டு உக்காந்திருக்கானுங்க அப்படியே கொஞ்சக் கொஞ்சமா ஏரியாக்கு உள்ள இறங்கி மக்கள் கிட்ட பேசியிருக்கானுங்க.  முதலில் கடை தெருல இருக்கிற டீக்கடைல வச்சு பேசறது.  அப்புறம் ஒவ்வொருதங் கிட்டயும் வாங்கண்ணே சாப்பிட போலாம்னு கூப்பிடறது.  இந்த மாதிரி  பணம் கொடுத்தா,  ஒவ்வொரு மாசமும் உங்ககிட்ட தங்கம்  தருவோம்.  மார்கெட் ரேட்ட விட நிறையக் கம்மியா.  கொஞ்சப் பணம்நிறையத் தங்கம்.. எல்லா படிச்சவிங்க.. எப்படித்தான் ஏமாந்தாய்ங்கன்னு தெரியலை.  இதுல  நம்ம  .சி திருமூர்த்தி இருக்கார்ல,  அவரோட பணமாஅவரோட சொந்த காரய்ங்க பணமான்னு தெரில,, சீ கணக்கில் மாட்டியிருக்காம்.  அதுல ஒருத்தனத்தான் வேணு அண்ணன் போய் காலையில் தூக்கி வந்தார்.  பின்னாடித்தான்  உக்காத்தி வச்சிருக்கோம்  பேசிக்கொண்டே இருந்தவருக்குக் கதவின் அருகில் நிழலாடுவது மாதிரி  தெரியச் சட்டென வெளியே வந்தார்.  வெளியே வந்தவர் இவனைப் பார்த்துத் திகைப்பானார்

 ஏய் என்ன இங்க வந்து நிக்கிற,  உன்னைய அங்க இருந்து எழுந்திருக்க கூடாதுன்னு சொன்னேன்ல,  என்ன வந்து ஒட்டு கேக்கறயா.  தொலைச்சிருவேன்” என்று எகிற ஆரம்பித்தார்.  அவர் பேசுவதைக் கேட்டவுடன் தான் அவனுக்கு ஆள் மாறி அவனை அழைத்து வந்திருப்பதே புரிந்தது.   அதை அவரிடம் சொல்ல அவர் காது கொடுத்து கேட்காமலேயே அவனைப் பார்த்துக் கத்த ஆரம்பித்தார்சிறிது நேரம் அங்கயே நின்று அவரிடம் மீண்டும் மீண்டும் சொல்லச் சொல்லஒரு கட்டத்திற்கு மேல் பொறுமையிழந்தவர் இவனைப் பார்த்து கையை ஓங்க,  பயந்துபின் வாங்கி மறுபடியும் பெஞ்சுக்கே திரும்பினான்.

 ---

நேரம் மத்தியம் ஒன்றாகி இருந்தது.  தயாளன்  ஊரிலிருந்து கிளம்பியிருந்தார்.   அவரிடம் கேசவன் தான் நீதிமன்றத்தில் ஒரு கேஸ் ஹியரிங்கில் இருப்பதாகவும் மத்தியம் வீட்டுக்கு வந்துவிடுவேன் எனச் சொல்லியிருக்கிறான் என சரஸ்வதியிடம்  சொன்னார்.    தெருவில் அலைந்து ஒன்றும் தகவல் பெயராமல் திரும்பி வந்த ஆஸ்பெட்டாஸ் கூரை காரரும் சிறிது நேரம் இருந்து விட்டுப் போய் விட்டார்.  காலையிலிருந்து பவானி மட்டும் சரஸ்வதி உடனிருந்தாள்.  அவளுக்கு அடங்காத வாய்எப்பொழுதும் எதையாவது பேசிக்கொண்டே இருப்பாள்.  அப்படியிருப்பவள் கூட  நெடுநேரம் ஒன்றுமே பேசாமலிருந்தாள்.   நடுவில் ஒரு தடவை மட்டும்  தரை மிக அழுக்காக இருப்பதாகவும் அதைத் துடைக்கவா என்றவளிடம் சரஸ்வதி எதுவும் சொல்லாமல் போகவே வேறுவழியின்றி அவளும் பேசாமல் உட்கார்ந்து விட்டாள்.

 

அவளுக்கு அவள் குழந்தைகளும் பள்ளி முடிந்து திரும்பி  வரம் ஆகி விட்டது.. சரஸ்வதியை இந்த நிலையில் இப்படியே விட்டு விட்டு எப்படிப் போவது எனத் தெரியாமல் காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டு கதவைத் திறக்கப் போனாள்.

மகனாக இருக்குமோ என்று சரஸ்வதியும் கதவைத் திரும்பிப் பார்க்க,  அங்கே நின்றிருந்தது கேசவன்.   மற்ற நாட்களாக இருந்திருந்தால் கேசவன் உள்ளே நுழையும் போதே முகத்தில் சிரிப்புடன் வரவேற்கும் சரஸ்வதி ஒன்றும் பேசாமல் உட்கார்ந்திருந்தாள்

பலவருடத்துப் பழக்கமாதலால் கேசவனும் ” என்ன மைனி பையனுக்கு பொண்ணு பார்த்தீங்களாஎப்ப கல்யாண சாப்பாடு” என்றோ இல்லையென்றான் “ என்ன மைனி தம்பி அங்க ஒரு வெள்ளைக்காரியை கட்டிட்டானம்ல” என்றோ நக்கலடித்து கொண்டேதான் உள்ளே வருவான்.   இன்றைய சூழ்நிலையில் எதுவும் பேசாமல் உள்ளே நுழைந்தவன் பவானியிடம் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வரச் சொல்லிவிட்டு தரையைப் பார்த்தவன் அப்படியே ஒரு தடவை படுக்கையறை வரைக்கும்  போய் பார்த்து விட்டு வந்து பவானி தந்த தண்ணீரைக் குடித்தான்.

மைனி இங்க என்ன நடந்திருக்குன்னே புரியலை.. எனக்கு இந்த ஏரியா போலிஸ் ஸ்டேஷன் எஸ். தெரிந்தவர்தான்எங்க சீனியரோட பிரண்டு.  நீங்க வீட்லயே இருங்க,  நான் ஸ்டேஷனுக்கு போய்விட்டு ஒரு மணி நேரத்தில் வரேன் என்று சொல்லிவிட்டு , தான் வரும்வரை பவானியை இருக்கச் சொல்லி விட்டு நகர்ந்தான்.

-----

மணி மூன்றாயிருக்குமா, ?  அப்பா அம்மா வந்திருப்பாங்களா தெருவில யாருமேவா பார்த்திருக்க மாட்டாங்க ? அப்பாவுக்கு யாரையுமே தெரியாதா ? அவரோட நண்பர்கள் நிறையப் பேர் இருக்காங்களே ?

நிறையக் கேள்விகள் நெஞ்சில் அலை மோத  அவன் பெயரில் தப்பு இல்லையென்றாலும்,  அவர்கள் நினைக்கும் ஆள் நான் இல்லை என்று சொல்லமுடியாமலும் அவன் உட்கார்ந்திருந்தான்.  சிறிது நேரம் கழித்து ஸ்டேஷனில் நிறைய பேச்சுக்குரல் கேட்டது.  காலையில் அவனைத் தள்ளிக்கொண்டு வந்த காவலர்களின் குரல் மாதிரி கூட இருந்தது

யாரோ ஒரு காவலர் “ பெரிய அய்யாவும் வர்லஅவர் கூப்பிட்டாரென்று போன சின்னவரும் வரல்” என யாரிடமோ சொல்லிக்கொண்டிருந்தார்

 வாழ்க்கையே சூன்யமாகிவிட்டது என்று நினைவுக்குள் போனவன் “ இனிமேல் அப்பா அம்மாவை எப்ப பார்ப்போம் ?  வேலை என்னவாகும் “ என்று குழப்பங்கள் எழ எழக் கண்களில் அழுகை வருவது மாதிரி இருந்தது.

அமெரிக்காவில் இருந்து 20 மணி நேர பயணம்விமானநிலையத்தில் ஒரு மூன்று மணி நேரம்அப்புறம் தூங்காமலேயே எவ்வளவு நேரம் இங்கே ஸ்டேஷனில் எதுவுமே அவனுக்குப் புரியவில்லை.  திடீரென்று ஸ்டேஷனே பரபரப்பாவது தெரிந்தது. “ பெரிய புடுங்கிகெல்லாம் வந்துட்டானுங்க போல” என்றான் காலையில் தடவியவன்.  

” வேணுன்னே இங்க வாங்க” ஒரு குரல் கணீரென்று ஒளித்தது

” இந்தோ வரேன்யா “ குரலும் ,  ஓடும் கால் ஓசையும் கேட்டது.

“ என்னாச்சு “  என்றது முதல் குரல்.

“ ஐயா அந்த மோசடி கேஸ் .. இன்னிக்கு ஆள புடிச்சுட்டோம்.  பின்னாலதான் உட்கார்த்தி வச்சிருக்கோம்.  அப்புறம் அந்த சங்கர் நகர் எக்ஸ்டென்ஷன் பாரதி நகரில் புதுசா கட்டிட்டு இருக்கிற அடுக்குமாடிக்குடியிருப்பில் ஒரே ரத்த கறைஷாகிர் அய்யா பார்த்துக்கொள்ளச் சொல்லியிருந்தார்.  அங்க வாட்ச்மேனயும் காணலை.”

“ டாக் ஸ்குவாட கூப்டிங்களா “

“ ஆச்சுங்கய்யா.  ஆனால்  அதுவும்  அங்க இருந்து  அதுவும்  கொஞ்ச தூரம்  ஓடிட்டு அப்படியே நின்றுச்சு.  ரத்தக் கறையை கலக்ட் பண்ணி   பரிசோதனைக்கு அனுப்பிருக்கோம்யா

 

இந்த கேள்வி பதில் நேரம் முடிந்திருக்கும் போல,  ஒரு கதவு திறக்கும் ஓசை கேட்டது

 

சிறிது நேரம் கழித்து யாரோ ஒருவர் பேசுவது கேட்டது

“ ஐயா ,  நான் கேசவன்.  வக்கில்  ராகவனோட ஜூனியர்.  இங்க தீருநீர்மலை பக்கம் ராஜிவன் அப்பார்ட்மெண்டுன்னு ஒரு சின்ன அடுக்குமாடிக்குடியிருப்பு.   எங்கண்ணன் பையன் ஒருத்தன் அங்க வீடு வாங்கியிருக்கான்.  இன்னிக்கு காலையில் அவன் அமெரிக்கால  இருந்து வந்திருக்கான்அவனோட லக்கெஜ் எல்லாம் வீட்டில் இருக்கு.  ஆள் மட்டும் மிஸ்ஸிங்.  அவனோட அம்மா மட்டும் ஊர்லேந்து வந்திருக்காங்கஅவங்களுக்கு என்ன செய்யறதுன்னு தெரியலை.. முறைப்படி வேணா அவ்ங்களையே இப்ப கூட்டிட்டு வந்து ஒரு கம்ப்ளையெண்ட் வேணும்னாலும் கொடுத்துடறேன்ஏதாச்சும் பண்ணுங்க சார் “

“ என்ன சொன்னிங்க.. என்ன அப்பார்ட்மெண்ட் ? “

ராஜிவன் அப்பார்ட்மெண்ட் சார் “

வேணுன்னே அந்த பையன கூப்பிட்டு வாங்க.  “  எனச் சொல்ல , இவன் வேணு வரும்முன்னரே எழுந்து நடக்கத் திரும்பி இருவரும் முட்டி கொல்வது மாதிரி நின்றனர்.  அப்போது கூட வேணுவின் பார்வையில் அவர் செய்த தப்பை உணர்ந்த மாதிரியான பாவமே இல்லை. 

எல்லா விசாரணையும் முடிந்து அவனைக் கூப்பிட்டுக் கொண்டு  கேசவன் சித்தப்பா  கிளம்பும் போது  அவனைப் பார்த்த  இன்ஸ்பெக்டர் அவனிடம் பெயரைக் கேட்க , அவன் கேசவனைப் பார்க்க, ஒரு நொடி இருவரும்   ஒன்றுமே சொல்லாமல் நின்றார்கள்.  பின்னர் ஒன்றுமே சொல்லாமல் இருவரும் வெளியே வந்தனர்.   

க ரா

புத்தகங்களை வாசிப்பதில் விருப்பமுள்ள எளிய மனிதன். சும்மா கிறுக்கி பார்க்கிறேன்.

உங்கள் கருத்து என்னை உற்சாக படுத்தும்.

புதியது பழையவை

தொடர்பு படிவம்