சண்டமாருதம் (எ) ஓல்டு மங்க்

சாத்தூரிலிருந்து சற்றே தள்ளியிருந்த புதுப்பாளையத்தில் ஒரு சந்தின் கடைசியில் இருந்த வீட்டின் முன் நின்றிருந்தான் ராம் பிரசாத்.  ராகவி சொல்லியிருந்த வீட்டின் அடையாளங்களை மனதில் மீண்டும் ஒரு முறை ஓட்டிப்பார்த்துச் சரிபார்த்துக்கொண்டான்.  சாத்தூர் பஸ்ஸடாண்டில் இருந்து அங்கே வர ஆட்டோக்காரன் 60ரூபாய் சொல்வான் என்றிருந்தாள், சரியாக ஆட்டோக்காரனும் 60ரூபாய் என்று சொல்லி இவன் பரசை பாக்கெட்டில் இருந்து எடுக்கும் வரை அமைதியாக இருந்து தலையைச் சொரிய ஆரம்பித்தான்.  ராகவியைப் பார்க்கும் மகிழ்ச்சி மனதில் பொங்கி வழிந்ததால்  அவன் 60க்கு 100 ரூபாயாகத் தந்து ஆட்டோக்காரனை அனுப்பி வைத்தான்.  இரண்டாவதாக ராகவி சொல்லியிருந்த மாதிரி  மெயின்ரோட்டிலிருந்து இடது புறமாக உள்ளே நுழைகையில் ஒரு ஒத்தை பனைமரமும் அதன் கீழ் ஒரு அம்மன் கோயிலும் இருந்தது.   அங்கேயிருந்து ஆற்றங்கரையை நோக்கித் திரும்பிய தெருவில் கடைசி வரை வந்து வலது புறமாகத் திரும்பும் சந்தில் திரும்பி கடைசியாக வந்தால் வீட்டின் வாசலில் ஒரு வேப்ப மரமும், காம்பவுண்டின் உள்ளே இரண்டு தென்னை மரங்களும் இருக்கும்.  எல்லாம் சரியாகத்தான் இருந்தது.  இதற்கெல்லாம் மேலே வீட்டின் மேலே ஒரு வளைவு இருக்கும் , அதில் தொங்கும் பலகையில் ம.சண்டமாருதம், Ex.Military, Prop : அய்யனார் பைனான்ஸ் என்றிருக்கும் இருந்தாள்.  ஆட்டோவில் இருந்து இறங்குகையில் ஒரு முறை வாசித்திருந்தாலும் மீண்டும் ஒரு முறை வாசித்தான்.  சரியாகத்தான் இருந்தது.

 வீட்டின் காலிங் பெல்லைத் தேடினான்.  எங்கேயிருக்கிறது என்றே தெரியவில்லை. எப்படி வீட்டிற்குள் நுழைய என்ற குழப்பத்திலேயே நின்றிருந்தான்.  அப்போது திடீரென்று அங்கே என்ஃபீல்டு பைக்கில் ஒருவன் வந்து வீட்டின் முன் இறங்கினான்.  அவனுக்கு ஒரு 28 வயது இருக்கும்.  ராகவி அவளுக்கு ஒரு அண்ணன் இருக்கிறான் என்று சொல்லியிருந்தால். அவனாக இருக்குமோ என்று யோசித்துக்கொண்டிருக்கையில் பைக்கில் இருந்து இறங்கியவன் “நீங்க யாரு ? “ என்றான். 

“நான் ராம் பிரசாத், ராகவி கூட ஒன்னா வேலை பார்க்கிறேன்.  ராகவிய பார்க்க வந்துருக்கேன்”

“அப்படியா ? எங்க இருந்து வரிங்க ? “

”சென்னை”

இதைக் கேட்ட அவனின் முகம் ஆச்சரியத்தில் விரிந்தது. 

“நான் ராகவியோட அண்ணண் தான். உள்ளே வாங்க “  என்று சொல்லிக்கொண்டே உள்ளே நுழைய இவனை பின் தொடர்ந்து உள்ளே நுழைந்து கொண்டே “உங்க வீட்டுல காலிங் பெல் கிடையாதா “ என்றான் ராம்பிரசாத்.

“அங்கதான் இருக்கு.  நீங்க வாங்க “ என்று அவன் பேசி முடிக்கையில் முன் அறை வந்திருந்தது.  அங்கே ஒரு சின்ன அலமாரி மாதிரி இருந்தது.  அதில் சில கணமான கயிறுகள்,  சின்ன சின்ன டப்பாக்களில் ஏதோ மருந்துகள் மாதிரி, ஒரு சின்ன அருவாள், இதோடு செருப்புகளும் ஒவ்வொரு ரேக்குகளில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன.  அதற்கப்புறம் எதிர் எதிராக இரண்டு வயரால் பின்னப்பட்ட சோபாக்கள் இருந்தன.  சுவரில் ஒரு பக்கம் ஒரு பெரிய அம்மன் படம் ஃப்ரேம் செய்து மாட்டப்பட்டிருந்தது.  இன்னொரு பக்கம் சுவரில் ஒரு பெரிய படத்தில் பெரியதாக மீசை வைத்துக்கொண்டு இன்னொருவருக்குச் சால்வை போற்றுவது மாதிரி இருந்தது படம்.  சால்வை தோளில் போற்றப்பட்டவரை டீவி செய்திகளில் பார்த்திருக்கிறான்.  தமிழகத்தின் ஒரு கட்சியின் சார்பில் விவாதங்களில் கலந்து கொள்வார்.  அந்த பெரிய மீசைக்காரர்தான் அவன் பார்க்க வந்திருக்கும் சண்ட மாருதமாக இருப்பார் போல.  ராகவியின் அப்பா, அவனது வருங்கால மாமனார். எப்படியாவது அவரை  சம்மதிக்க வைத்து அதை நிஜமாக்கி விடத்தான் அங்கே வந்திருக்கிறான். 

ஒரு தடவை ஆபிஸ் கேஃபிடேரியாவில் ராகவி அவள் அப்பாவை பற்றிச் சொன்னது ஞாபகம் வந்தது “எங்க தாத்தா சரியான கிறுக்குன்னு நினைக்கிறேன். எப்படி உலகத்துல யாருக்கும் வைக்காத பேரா எங்கப்பாக்கு தேடி இப்படி ஒரு பேர வச்சாரேன்னு தெரியிலை.  எங்கப்பாவும் சரியான கிறுக்கு தெரியுமா.  ஒருதடவ பரிட்சைல பெயில் ஆயிட்ட பயத்துல எங்கண்ணன் ரேங்க் கார்டுல  கடைசி  தேதி வரைக்கும் அப்ப்பாகிட்ட கையெழுத்தே வாஙகல..ஸ்கூல்ல கண்டு பிடித்துக் கூப்பிட்டு விட்டாங்கன்னு போயி,  பையன பத்தி புகார் சொன்னவங்க கிட்ட பரிட்சை பெயில் ஆகறதெல்லாம் விசயமே இல்லை சார்; பையன் எப்படி மத்தவங்கள மதிச்சி நடக்கிறானா, மத்த வங்க கூட சண்டைபோடாம எல்லாத்தயும் அரவணைச்சு போறானா, அமைதியா இருக்கானா இதெல்லாம் பாருங்க. அப்படி இப்படின்னு அவங்களுக்கே அட்வைஸ் பண்ணிட்டு வந்துட்டாருஅன்னிக்கு நைட்டு இவர் செம தண்ணி.  சாப்பிட்டுக் கிட்டு இருந்தவன பரிட்சைல பெயில் ஆனவனுக்குச் சாப்பாடு ஒரு கேடானுட்டு இழுத்துப்போட்டு ஒரே அடி.  இன்னொரு சமயம் இவரிடம் கடன் வாங்கினவன் கொடுக்கலேன்னு கோர்ட்டுல கேஸ் போட்டு ஜப்தி நிலைக்கு கொண்டு போய்ட்டாரு..  இன்னொரு நாள் அவனே கால கெந்தி கெந்தி நடந்துட்டு வந்துட்டு இருக்கான் ரோட்டுல.  இவர் அவன பார்த்த சமயம் அவன் கண்ணுல தூசி விழுந்திருக்கனும்னு நினைக்கிறேன், கண்ண கசக்கிட்டு நின்னவன பார்த்து என்னடா ரோட்டுல கண்ண கசக்கிட்டு நிக்கன்னு கேட்டுருக்காரு,  அவன் சோத்துக்கே வழியில்லை அண்ணாச்சி, பஸ்ஸுல விழுந்து சாவலாம்னு ரோட்டுல நிக்கேன்றுக்கான். உடனே இவருக்குக் குற்ற உணர்ச்சி, பொறுக்காம கைல இருந்த ரூபாய அவன் கிட்டயே கொடுத்துட்டு வந்துட்டாரு,  ஏங்கிட்டயும் பாசமா இருப்பாருன்னுல்லாம் நினைக்க முடியாது, எப்ப பிராண்டுவாரு எப்ப கொஞ்சுவாருனுல்லாம் தெரியாது. இருக்கிறதலயே எங்க அம்மாதான் பாவம்”   

உள்ளே போனவனின் சத்தத்தையே காணும்.  மேலே மாட்டியிருந்த ஃபோட்டோவயும் அந்த பெரிய மீசையையும் பார்த்துக்கொண்டே இருக்கப் பயமாக இருந்தது.  அதோடு எதிரே மாட்டியிருந்த அம்மனின் படம், பெரிய கண்களுடன் கையில் ஒரு வேலோடு, ஏதோ அரக்கனை வதம் செய்வது மாதிரி,  அதோடு உள்ளே நுழையும் போது பார்த்த அருவாள் எல்லாம் என அவன் மனதை ஏதோ செய்ய வயிறு வேற கலங்கி ஒரு மாதிரியாக உட்கார்ந்திருந்தான். ராகவிக்கு ஒரு டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்பலாம் என்று நினைத்து , வேறு ஏதாவது பிரச்சனை வருமோ என்று பயந்து போய் எடுத்த மொபலை மறுபடியும் பைக்குள்ளேயே வைத்தான்.  வயிறு அதிகமாகக் கலக்கவே வேறுவழியில்லாமல் எழுந்திருக்க முனைகையில் உள்ளே போனவன் வெளியே வந்து ” வாங்க உள்ள, அப்பா கூப்டறாரு ” என்றான்.  சொன்னவனிடம் கேட்கலாமா வேண்டாமா என்று யோசித்து வேறு வழியில்லாமல் வயிற்றைத் தடவிக்கொண்டே “ப்ரோ வீட்டில் கழிப்பறை எங்க இருக்குன்னு சொல்றீங்களா “  என்றான். 

 

கழிப்பறையில் உட்கார்ந்திருந்தவனுக்கு அப்போதுதான் ராகவியின் அண்ணனை ப்ரோ எனச் சொன்னது நினைவுக்கு வந்து தலையில் அடித்துக்கொண்டான்.  இப்போது வயிற்றில் பாரம் நீங்கி , மனது கொஞ்சம் தெளிவான மாதிரி இருந்தது.  கழிப்பறையை விட்டு வெளியே வந்தவனுக்கு எதிர்த்த மாதிரி ஒரு எலுமிச்சை மரம் நின்றிருந்தது. கழிப்பறையை ஒட்டியமாதிரி குளியலறை;  இது எல்லாம் வீட்டின் கடைசியில் இருந்தது.  வீட்டின் அமைப்பே வித்தியாசமாக இருந்தது. உள்ளே நுழைந்த உடனே அவன் உட்கார்ந்திருந்த வரவேற்பறை,  அதை அடுத்து நல்ல விசாலமான ஒரு பெரிய அறை அதன் இடது மூலையிலும், வலது மூலையிலும் இரண்டு அறைகள், வலது மூலையிலிருந்த அறைக்கு எதிராக ஒரு வழி மாதிரி இருந்ததில் நடந்தால் ஒரு சின்ன அறை சாமி படங்கள் மாட்டியிருந்தது, அதை கடந்தால் சமையலறை , அதைக் கடந்து வந்தால் முற்றம் மாதிரி வெட்டவெளியாக ஒரு இடம்,  அதில் அவன் சொன்ன மாதிரி ஒரு எலுமிச்சை மரம், ஒட்டியமாதிரி குளியலறையும், கழிப்பறையும்.  கழிப்பறையில் இருந்து மறுபடியும் வீட்டுக்குள் நுழையும் போதுதான் இந்த அமைப்பை அவன் ஒரு அளவுக்குப் புரிந்து கொண்ட மாதிரியிருந்தது.  சமையலறையில் இரு பெண்கள் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர்.  அதில் ராகவியின் அம்மா யார் எனத் தெரியவில்லை.  அடுத்து சாமியறையை கடந்து அறைக்குள் நுழைந்தான்.

 

அங்கே ஒரு பக்கம் ஒரு பெரிய டீவியும்,  அதற்கு எதிர்த்த மாதிரி ஒரு பெரிய சோபாவும் ,  அதற்கு வலதுபுறமும் இடதுபுறமும் இருவர் உட்கார்வது மாதிரி இரண்டு சோபாக்களும் இருந்தன.  பெரிய சோபாவில் சண்டமாருதம் உட்கார்ந்திருந்தார்.  இனிமேல் அவரை பெயரைச் சொல்லி மனதில் கூட நினைக்கக்கூடாது,  அவனுக்கு அவர் மாமாதான் என்று நினைத்துக்கொண்டே அந்த பெரிய அறையை மறுபடி சுற்றிப்பார்த்துக்கொண்டே நின்றவன் உட்கார்ந்திருந்தவரின் கனைப்பில் அவரை திரும்பிப் பார்த்தான். 

 

“என்ன தம்பி வயிறு சரியில்லையா.  வரப்ப நைட்டு கண்டத சாப்பிடிருப்பீங்க. எதுல வந்திங்க ரயிலா பஸ்ஸா ? “ என்றார்.

”இல்ல சார். எஸ்.ஆர்.எஸ் டிராவல்ஸுல வந்தேன்”

” ஓ அதாம் . பஸ்ஸுன்னா கக்கூஸ் இருந்துருக்காதுல “ என்றார்.

”ஆமான் சார்” என்றவரிடம்  “சாரா !!! அது சரி , ஏன் இன்னும் நின்னுட்டே இருக்க .. உக்காருப்பா “ என்றார். 

உட்கார்ந்தவனைப் பார்த்து “ என்ன சாப்பிடற ? “ என்றார்.

எதற்கு வந்திருக்க எனக் கேட்காமல் என்ன சாப்பிடற எனக் கேட்டவரை பார்த்து நகர்புறத்திலயே வளர்ந்த அவனுக்கு வித்தியாசமாக இருந்தது.  அதோடு வந்து இவ்வளவு நேரம் ஆகியும் ராகவியைப் பார்க்கமுடியவில்லை.  வரும் முன்னர் அவளுக்கு அழைக்க நினைத்து ”இந்த நாளில் இந்த நேரத்துக்கு வா வரதுக்கு முன்னாடி கூப்பிட்டுத் தொலைக்காத. மெட்ராஸ் மாதிரி கிடையாது இங்க” என அவள் சொல்லியிருந்தது நினைவுக்கு வர அவளிடம் சொல்லாமலயே வந்திருந்தான்.  இவனது எண்ண ஒட்டத்தைப் புரிந்து கொண்டவர் மாதிரி

“என்னப்பா யோசிக்கிற. வந்தவன் ஏன் எதுக்குன்னு கேட்காமல் சாப்பிட சொல்றேன்னு பார்க்கறியா… எதிரியே வீட்டுக்கு வந்தாலும் மூதல்ல சாப்பிட சொல்லித்தான் எங்க பழக்கம்” என்றார்.  நிறுத்தாமல் உள்ளே பார்த்து கற்பகம் என்று குரல் கொடுத்தார்.

வரும்போது சமையலறையில் பார்த்த இரண்டு பெண்களில் ஒருவர் வந்து நின்றார்.  வந்து நின்றவரிடம் ”தம்பிக்குக் காப்பியும் அப்படியே சாப்பிட எதுவும் எடுத்துட்டு வா. எனக்கு ஒரு சொம்பில் நீசுத்தண்ணி “ என்றார்.

சிறிது நேரத்தில் காப்பியும் கூடவே சாப்பிடவே ஏதோ திண்பண்டமும் வந்தது. 

வந்த காப்பியைக் குடித்துக்கொண்டே திண்பண்டத்தைக் கொறித்துக்கொண்டிருந்தவனை பார்த்து “என்ன தம்பி திங்குறீங்க.. கை நிறைய அள்ளி வாய்ல போடு” என்றவர் நீசுத்தண்ணியை குடித்துவிட்டு மீசையைத் தடவிக்கொண்டிருந்தார். மறுபடியும் அந்த மீசையைப் பார்க்க அவனுக்கு பயமாக இருந்தது.  அதோடு இப்போதுதான் கவனித்தான்.  அவரின் கழுத்திலிருந்தது ஏதோ புலி நகம் மாதிரி இருக்க அது வேறு இன்னும் பயத்தைக் கிளப்ப , ஒரு வழியாகக் காப்பியைக் குடித்து முடித்தான்.

காப்பியைக் குடித்து முடித்தவனைப் பார்த்தவர் திண்பண்டம் இன்னும் தட்டிலிருப்பதைப் பார்த்து , என்ன தம்பி மிச்சம் வச்சிருக்க சாப்பிடு” என்றார்.  இவன் இல்லை என்பது மாதிரி தலையை ஆட்ட மீண்டும் உள்ளே பார்த்து குரல் கொடுக்க இப்போது உள்ளே இருந்து மற்றொரு பெண் வந்து எல்லாவற்றையும் எடுத்துச் சென்றார்.  அதுவரைக்கும் காத்திருந்தவர்

”ம் சொல்லு தம்பி. என்ன விசயம்” என்றார். 

பேச ஆரம்பிக்கும் முன் சுற்றிப்பார்த்தான். ஒருவரும் இல்லை.  மனதிலிருந்த பயத்தை மறைத்து

“ராகவி “  என்றான்.

”ராகவியா ? ஓ மலரா சொல்லையா ? நான் எம்பொண்ண அப்படித்தான் கூப்பிடுவேன்.  அவ அவிக பெரியம்மாவுக்கு தொனையா படுக்க அவுக வீட்டுக்குப் போயிருக்கா.  இப்ப வந்துருவா. நீ சொல்லுப்பா “ என்றார்.

”ஒன்னும் இல்ல சார்.  ராகவிய பார்த்துட்டு போலாம்னு வந்தேன் “ என்றான்.

அதற்குள்ளாகவே அவனுக்கு மூச்சு ஏறி ஏறி இறங்கியது.

”என்னது,  ராகவிய பார்த்துட்டு போலாம்னு வந்தியா . அது சரி” என்றவர்

சொல்லிவிட்டு பெரியதாகச் சிரித்தார். சிரிப்பு அடங்கவே சில நிமிடங்கள் ஆனது.  அவர் சிரிக்கும் போது அவனுக்கு வீட்டினுள் நுழைந்த போது அருவாள், பின்னால் அந்த கணமான கயிறு வீட்டுக்குள் நுழையும் போது பார்த்த பெரிய மரம்,  அந்த பெரிய மீசை எல்லாம் மாறி மாறி வந்து மிகவும் பயமுறுத்தியது. மிகவும் பெரியதாக மூச்சு வாங்கிக் கொண்டு மேலே ஓடிக்கொண்டிருந்த மின்விசிறியையும் தாண்டி இன்னும் பயங்கரமாக வேர்க்க ஆரம்பித்தது.  எழுந்து ஓடி விடலாமா என்று யோசித்துக்கொண்டிருந்த பொழுது இன்னும் சிரித்துக்கொண்டே எழுந்தவர் உள்ளே பார்த்து “இவளே” என்றவர் “இவன் எங்க போனான் “ என்றபடி “டேய் எங்கடா இருக்க வாடா இங்க முதல்ல” என்றார்.

பக்கத்து அறையிலிருந்து வெளிய வந்த ராகவி அண்ணனையும் சமையலறையிலிருந்து வந்த ராகவி அம்மாவயும் பார்த்த உடனே “ சாரு. அவ்வளவு தூரத்துல இருந்து மலர சும்மா பார்த்துட்டு போகலாம்னு வந்தாராம் !!!” எனத் திரும்பித் திரும்பி சொல்லிக்கொண்டே அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டே இருங்க சார் வரேன் என்று சொல்லிவிட்டு சடாரென ராகவி அண்ணன் வந்த அறையில் உள்ளே போனார்.  

ராகவி அண்ணனும் அம்மாவும் அவனைக் குழப்பத்துடன் பார்க்க பிரசாத்துக்கு ரஜினி முருகன் படத்தில் சத்தியராஜின் துப்பாக்கி ஞாபகம் வந்தது.  இன்னும் பயம் கூட எழுந்து ஓட எத்தனிக்கும் போது அந்த அறையை விட்டு வெளியே வந்தவரின் கையில் ஒரு ஓல்டு மங் பாட்டிலிருந்தது.  கையில் பாட்டிலுடன் வெளியே வந்து உட்கார்ந்தவரின் முகத்தில் இன்னும் சிரிப்பு அகழவில்லை.

ஒன்றுமே புரியாமல் அவரை துருதுருவென முழித்தவனைப் பார்த்தவர் மறுபடியும் ராகவியின் அண்ணனைப் பார்த்து “கொமாரு சார் மலர சும்மாதான் பார்க்க வந்தாராம்” என்றார் சிரித்துக்கொண்டே. 

சிறிது நேரம் சிரித்து அடங்கியவர் “என்ன தம்பி பயந்துட்டியா ? “ என்றார்

கொமாரு இங்க வாடா” என ராகவியின் அண்ணனை அழைத்து பக்கத்தில் உட்கார்ந்து வைத்துக்கொண்டவர், ராகவியின் அம்மாவைப் பார்த்து மூன்று கிளாசுகளை கொண்டு வரச்சொன்னார்.  வேண்டாம் என முகத்தைச் சுழித்தவாறு எழுந்திருக்கப் போன ராகவியின் அண்ணனை அழுத்தி உக்கார வைத்தவர், “சார் குடிப்பீங்கள்ள” என்றார் பிரசாத்தைப் பார்த்து.

அடுத்து வந்த நிமிடங்களில் பழைய பாரதிராஜாவின் படத்தில் வரும் வெள்ளை உடை தேவதைகள் அவனைச் சுற்றி நடனமாடினர். முப்பத்து முக்கோடு தேவர்களும் அவனது அம்மா அப்பா, ராகவியின் அம்மா அப்பா சூழ்ந்து ஆசிர்வதிக்க அவனது திருமணம் முடிந்தது.  அடுத்த கனவு வருவதற்குள்

“தம்பி,  ம்ம்.. இன்னும் என்ன தம்பி .. மாப்ள உங்களுக்கு சைடுக்கு என்ன கொண்டு வரச்சொல்லட்டும்.  கவிச்சி உண்டா “ என்றவரிடம் வேகமாகத் தலையசைத்தான்.  “பின்ன” என்றவரைப் பார்த்து முட்டை மட்டும் சாப்பிடுவேன் என்றான். 

“ஓ அப்படி ஒரு இனம் இப்ப இருக்கீங்களோ” என்றார்

” செரி நீங்க என்ன ஆளுங்க. அப்பா , அம்மா என்ன பண்றாங்க” என்றார்.

நீங்க என்ன ஆளுங்க என்ற கேள்வியை ஒரு நிமிடம் எதிர் கொள்ள முடியாமல் தயக்கத்துனடயே அவனது அப்பாவை , அம்மாவைப் பற்றியும் சொந்தக் காரர்களைப் பற்றியும், பூர்விகம் பற்றியும், அவர்கள் கூட்டு குடும்பமாய் சென்னையில் வாழ்ந்து வருவதைப் பற்றியும் சொன்னான்.

” அது சரி அப்ப நீங்க மாமிசம் சாப்பிடாதவுக. அங்க எப்படி எம்பொண்ணு இருக்க முடியும்.  அவளுக்கு நெத்தமும் ஏதாச்சும் வேணுமே “ என்றார்.

“இல்ல மாமா.  எனக்கு யு.எஸ்ல ஒரு புரோஜ்க்ட் கிடைச்சிருக்கு. கல்யாணம் ஆன வுடனே ராகவிய கூப்டுகிட்டு அங்க போயிருவோம்” என்றான்.

அதுக்கப்புறம் போக்குவரத்து உண்டா. ஏம்பொண்ண இங்க கூட்டிட்டு வருவீரா. இல்லேன்னா எல்லாமே அங்கதானா ?” என்றார்.

இதற்கிடையில் ராகவியின் அம்மா தொடுகைகளையும் கிளாசுகளையும் கொண்டு வர,  மூன்று பேருக்கும் அவரே அளந்து ஊற்ற , அவரவர் கிளாசுகளை கையில் ஏந்தி சியர்ஸ் சொல்லும்போது சரியாக ராகவி உள்ளே வந்தாள்.

உள்ளே வந்தவளுக்கு அங்கே கண்ட காட்சியை நம்ப முடியாமல் வந்தது.  வந்த மகளைப் பார்த்தவருக்கு மறுபடியும் அடக்க முடியாத சிரிப்பு வந்தது. கிளாசை டேபிளில் வைத்து விட்டு எழுந்தவர் அப்படியே ராகவியைக் கட்டி அணைத்தார். 

 “ஏம்மா அப்பா அம்மா மேல நம்பிக்கையில்லையாக்கும்.. நீங்களா தேடீக்கிட்டிங்களாக்கும்” என்று சொன்னபடியே நெற்றியில் முத்தமிடப்போனவரிடமிருந்து விலகியவள் கையில் கிளாசை வைத்துக்கொண்டிருந்தவனை முறைத்தபடியே சமையலறையைப் பார்த்துப்போனாள்.

உடனே கையிலிருந்த கிளாசை கீழே வைக்கப்போனவனைப் பார்த்து “எய்யா குமாரு பாருய்யா மாப்பிள்ளையை, கட்டிக்கப்போறவ முறைத்த உடனே கிளாச கீழ வைக்கப்போறாரு” என்றார்.

”ஏம மாப்ள எம் பொண்ணு இப்ப குடிக்க கூடாதுன்னு சொன்னா அப்படியே கேப்பிங்களோ ? எய்யா குமாரு நீயும் இப்படி இருக்கனுமய்யா.  எம் மவ மவராசி கொடுத்து வச்சவ” என்றவர்

பிராசத்தைத் திரும்பிப் பார்த்து “என்ன மாப்ள என்னையும் எம் மீசையையும் பார்த்து பயந்துட்டிங்களா ?  எம் மவ எனக்கு ரொம்ப முக்கியம்.  அவ ஆசப்படற நீங்களும் எனக்கு முக்கியம்தான். அதோட நானும் காதல் கல்யாணம்தான்” என்றார்.

கிளாசையும் கீழே வைக்காமல் குடிக்கவும் செய்யாமல் உள்ளே போன ராகவி வெளியே வருவாளா எனப் பார்த்தபடியே உட்கார்ந்திருந்தான்.  அதற்குள் அடுத்து இரண்டு கிளாசையும் காலி செய்திருந்தவர் என்னையும் என்னை மாதிரியே உட்கார்ந்திருந்த ராகவியின் அண்ணனையும் திரும்பிப் பார்த்து “சின்னப் பசங்களா” என்றபடி அவரது கிளாசில் அடுத்த ரவுண்டை ஊற்றினார்.

”எம் பொண்ண படத்துக்கெல்லாம் கூட்டிட்டு போயிருக்கிங்களா “ என்றார்.

பதிலை எதிர்பாராத மாதிரி “அந்த நிலாவத்தான் கையில் பிடிச்சேன். என் இராசாத்திக்காக” என்று பாட ஆரம்பித்தார்.

”முதல் மரியாதை படம் பாத்திருக்கீங்களா ? நானும் எம் பொண்டாட்டியும் பார்த்த முத படம்,  அப்பல்லாம் கட்டின புதுசு, இந்த பாட்ட பாடினா எம் பொண்டாட்டிக்கு அப்படி ஒரு சந்தோசம்” என்றார்.

குடித்துக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருந்தவர் திடீரென

” தம்பி  ஒரு சந்தேகம்.  இப்ப நீங்க வந்திருக்கிற மாதிரி எம் பொண்ணு உங்க வீட்டுக்கு வந்திருந்தால். என்ன நடந்திருக்கும் ? “ என்றார் பிரசாத்தை பார்த்து.

என்ன பதில் சொல்ல என்று தெரியாமல் அவரையே பார்க்க தொடர்ச்சியாக

” ஆமாம் நீங்க இங்க வந்தது உங்கள் தோப்பனாருக்குத் தெரியுமோ.. தோப்பனார்.. தோப்பனார்” என்றார் நக்கலாக.

அந்த நக்கலைக் கேட்ட அவன் பொறுக்கமாட்டாமல் எழுந்தான். 

“அய்யோ தம்பிக்குக் கோபம் வந்துருச்சுடா” என்றபடியே நக்கலாக எழுந்தவர்

”இப்ப கல்யாணமே நடந்துருச்சுன்னு வையேன், உங்க வீட்டுக்கு நாங்க வந்தா உன் தோப்பனார் என்ன உள்ள கூப்பிடுவாரா ?  எங்க உக்காத்தி வச்சு சாப்பாடு போடுவீங்க, மேசைலயா, தரைலயா” என்றார்.

நேரமாக ஆக அவரது நக்கலும் கோபமும் ஒரு சேரக் கூடுவதைப் பார்த்தவன் அங்கே இருந்து கிளம்ப எழுந்தவனின் சட்டையை திடீரென பற்றியவர் “தம்பிக்குக் கோபம் வந்துருச்சோ” என்றபடி அவனைத் தள்ளக் காலையில் ராகவியின் அண்ணன் இருந்த அறையில் போய் குப்புற விழுந்தான் பிரசாத்.

இதைப் பார்த்த ராகவியின் அண்ணன் , அப்பாவைப் பிடித்து இழுக்க அவன் கையை உதறியவர் சோபாவில் முட்டி பெரும் சத்தம் எழுப்பிய படியே விழுந்தார்.  சத்தம் கேட்டு ராகவியும் அவளது அம்மாவும் அங்கே கலவரக் காடாகிக் கிடந்த அறையைப் பார்த்துத் திகைத்து நின்றனர்.  கீழே கிடந்த அப்பாவைப் பார்த்த ராகவி பாய்ந்து வந்து அவரை தூக்கப் பார்த்தாள். தூக்கியவளை அப்படியே அணைத்த அவர் “வாடி எம் மவளே, மாரியப்பன் சண்ட மாருதம் யாரு.. எங்கப்பன பார்த்து ஊரே மிரளும்.  நான் ஒரு இராணுவத்துக்காரன்.. இந்த ஊரல் என்ன பேர் இருக்கு. எங் குடும்பத்துக்கு , உனக்கு இப்படி பட்டவன்தான் கிடைத்தானா” என்றபடி அவளது கன்னத்தைக் கட்டி அறைய அவளும் பிரசாத் விழுந்து கிடந்த அதே அறையில் போய் விழுந்தாள். அதே வேகத்தில் அந்த அறையை இழுத்து மூடியவர் எங்கேயோ வேகமாய் போனார்.  அதற்குள் மூடியிருந்த அறையின் கதவைத் திறக்கப் போன ராகவியின் அம்மாவும், அண்ணனும்.

“ஏய் கொன்னு போட்ருவேன்” என்று உருமியவரின் குரலைக் கேட்டு திரும்ப அவரின் கையில் அருவாள் முளைத்திருந்தது  அதைப் பார்த்து அழுதுகொண்டே நின்ற ராகவியின் அம்மாவைப் பார்த்தவர் “சொன்னாய்ஙக்ளே சீக்கா கிடக்கறவ சொல்ல கேட்காமல் இன்னொருத்தியைக் கட்டாத, பொம்பளை பாவம் சும்மா விடாதுன்னு. வேற ஒருத்தியை கூட்டுட்டு வந்தாதான் பிரச்சனைன்னு அவளோட தங்கையத்தான கட்டினேன்” என்று சம்பந்தம் சம்பந்தமில்லாமல் பிதற்ற ஆரம்பித்தவர், ஒரு நிலையில் ராகவியின் அம்மாவைத் தலைமுடியை பிடித்துத் தர தரவென்று இழுத்து இன்னொரு அறையில் தள்ளினார். தடுக்கப் போன ராகவியின் அண்ணனையும் அதே தறையில் தள்ளியவர் அந்த அறையின் கதவையும் தள்ளிப் பூட்டினார்.

சிறிது நேரம் ஏதேதோ கத்திக்கொண்டு அந்த அறை முழுக்க அலைந்தவர் பின்னர் ஏதோ நினைத்தபடி ராகவியும் பிரசாத்தும் இருந்த அறையை திறக்க வந்தவர் அப்படியே முன்னால் சரிந்து தூங்கிப் போனார். 

பூட்டி இருந்த அறையில் பயந்து போய் ஒரு ஓரமாக ஒடுங்கி கிடந்தான் பிரசாத்.

இன்னொரு மூலையில் ஒன்றுமே நடக்காத மாதிரி மொபலை நோண்டி கொண்டிருந்தாள் ராகவி.

சிறிது நேரம் கழித்து வெளியில் எதுவும் சத்தம் வராமல் போகவே மெதுவாக எழுந்தவன் ராகவியின் பக்கத்தில் போய் உட்கார்ந்தான்.  பக்கத்தில் நிழாடவே மொபைலில் இருந்து பார்வையை எடுத்தவள் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவனைப் பார்த்து “கொன்றுவேன் எந்திரிச்சு போயிடு “ என்றாள்.

“என்ன இது கொலைகார குடும்பமா இருப்பிங்க போலவே. ஏற்கனவே வெளியில் ஒருத்தர் கொலை பண்ண வந்தாரு, இங்க என்னன்னா நீ !! அம்மா தாயே என்னைய காப்பாத்தி வெளியில் கொண்டு போய் விட்ரு. நான் ஓடிப்போயிருவேன்” என்றான். 

”இவ்வளவு பயந்தாகொல்லியவா நான் காதலிச்சேன். ஆக்சுவலா நீதான் இப்ப இங்கேயிருந்து என்னைய இழுத்துட்டு போகனும்.  தைரியம் இல்லேன்னா செத்து போ.. ஐ ஹேட் யூ” என்றாள்.

“பட ஐ ஆல்வேஸ் லவ் யூ ராகவி” என்றவனின் மனதும் உடம்பும் சற்றே லேசாகி இருந்தது. அப்படியே நெருங்கியவனைப் பார்த்து “ பட் ஐ ஸ்டில் ஹேட் யூ “ என்றாள்.

”ஏம்மா “

”ஏம்மாவாம். குடிகார நாயே குடிச்சிட்டு கேள்வியை பாரு”

“உங்கப்பா குடிக்கிறார்..  அவர் கேக்கமாட்ட..  நான் அவருக்காக குடிக்காமல் கிளாச கைல வச்சுட்டுதான் உக்காந்திருந்தேன் தெரியுமா” என்றபடி ராகவியை இன்னும் நெருங்கி உட்கார்ந்தான்.

“என்னது குடிக்கலையா ? டோண்ட் லை பிரசாத்”

“இல்லம்மா உம் மேல் சத்தியமா நான் குடிக்கலை. பிலிவ் மீ”

“ஊதுடா பார்ப்போம்” என்றவளை நெருங்கி அவளின் உதட்டில் அருகினில் போய் ஊதினான். 

இன்னொரு அறையில் அடைந்து கிடந்த குமாரைப் பார்த்து கற்பகம் புலம்பிக்கொண்டிருந்தார்.

“கூறுகெட்ட கிறுக்கனே.. வந்து கதவ தொரய்யா,  இதுல நம்ம பிள்ளையையும் அந்த பையனையும் வேற ஒரே அறையில் போட்டு பூட்டிருக்கான்.. எலேய் தம்பி நீயாவது கதவ திறக்க முடியுமான்னு பாருடா” என்றவளை முறைத்துப் பார்த்த குமார் “ சும்மா கிட சித்தி.  கூறுகெட்டவனுக்குப் பையனா பிறந்தது ஏன் தப்புதான். கூறுகெட்டவனுக்குப் பையனா பிறந்து நானும் கூறுகெட்டவனா ஆயிட்டேன் பாரு.. நேதிக்கு இங்க வந்தவன் என் லேப்டாப்ப இங்கேயே விட்டுவிட்டு போய்டேன்.. செரி காலையில் இங்க வந்தவன் லேப்டாப்ப தூக்கிட்டு அந்த வீட்டுக்கு போயிருந்தேனா என் மேனேஜர் கேட்ட மெயிலவாது அனுப்பி இருப்பேன்.. இப்ப எல்லாம் போச்சு:” என்று புலம்பித் தள்ளினான்.

இரண்டு அறையிலும் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் வெளியே தூங்கி கொண்டிருந்தார் சண்ட மாருதம். 


க ரா

புத்தகங்களை வாசிப்பதில் விருப்பமுள்ள எளிய மனிதன். சும்மா கிறுக்கி பார்க்கிறேன்.

உங்கள் கருத்து என்னை உற்சாக படுத்தும்.

புதியது பழையவை

தொடர்பு படிவம்