ஒரு பின்வாங்கல்
அது 2006.. 2004ல் அந்த குழுமத்தில் சேர்ந்து 2005லயே ஹெச்1 விசா பெற்று அமெரிக்கா போய் அங்கே இருந்து மெக்சிகோ போய் மறுபடியும் அமெரிக்கா வந்து அங்கேயே வேறு வேலை வாங்கி செட்டில் ஆகி விடலாம் என்று யோசிக்க ஆரம்பித்ததை எப்படியோ மோப்பம் பிடித்த எனது குழுமம் என்னை மறுபடியும் இந்தியாவுக்கே வரவழைத்தது. அன்றைக்கும் இன்றைக்கும் அப்படித் திரும்புபவர்கள் பேப்பர் போடுவார்கள். அதே மாதிரி வந்த சில நாட்களிலேயே நானும் பேப்பர் போட்டேன். நான் ஆஃபர் வாங்கியிருந்த குழுமம் என்னைப் பெங்களூருக்கு வரச் சொன்னது.
அதற்கு முன்னர் என் வாழ்நாளில் என் கல்லூரி சீனியரின் தயவில் அங்கே ஒரு பதினைந்து நாட்கள் இருந்திருக்கிறேன். எம்.எஸ்.சி முடித்த பின்னர் கடைசி செமஸ்டரில் செய்ய வேண்டிய புராஜ்க்டுக்காக பெங்களூரில் ஒவ்வொரு சாஃப்ட்வேர் குழுமமாக ஏறி இறங்க நாங்கள் ஒரு பத்து பேர் அங்கே போயிருந்தோம். அந்த கதைக்குப் பின்னர் வருவோம், எப்பொழுது விடியும் என்று புரிந்து கொள்ளவே முடியாத ஊர் அது. அத்தோடு வேறு சில அக காரணங்களும் ஆட்டிப்படைத்தாலும் அங்கே போவதில் உறுதியாகி என் குழுமத்தில் பேப்பர் போட்டு விட்டேன்.
நாட்கள் நெருங்க எனது மேனேஜர் என்னைக் கூப்பிட்டு பேசக்கானோம். இதற்கு நடுவில் ஆஃபர் வாங்கியிருந்த குழுமத்தில் இருந்து ஹெச்.ஆர் கூப்பிட்டுப் பெங்களூரில் ஜாயின் செய்தவுடன் நீங்கள் கத்தார் செல்ல வேண்டியிருக்கும் என்றார். எனக்கு அள்ளு கழன்று விட்டது. மிடில் ஈஸ்ட்டா மிகவும் சூடாக இருக்குமே என்று யோசிக்க ஆரம்பித்தேன். நாட்கள் போகப்போகக் கடைசியாக எனது மேனேஜர் ஒரு சுப நாள் காலையில் என்னை அவரது அறைக்குக் கூப்பிட்டார்.
அவரது பேச்சு இப்படித்தான் இருந்தது.
“என்ன ராம் நீ பண்ணது உனக்கே நலலாயிருக்கா. நான் நினைத்தேன் ,, நீயும் என்னைய மாதிரியே கிராமப்புறத்தில் இருந்து வந்தவன், என்னைய மாதிரியே நிறைய effort போட்டு நல்லா வேலை பண்றவன். அத்தோட என்னைய மாதிரியே வேலை பார்க்கிற இடத்துக்கு நிறைய loyal அ இருப்பேன்னு நினைச்சேன். நீ என்ன என்ன நினைச்சுட்டு இருக்கியோ எனக்குத் தெரியாது. ஆனால் நான் உன்ன ரொம்ப நம்பினேன். ஆனா நீ என் நெஞ்சிலேயே ஏறி மிதிச்சுட்டப்பா”
கடைசியா அவர் சொன்னதைக் கேட்டவுடன் நியாயமாக எனக்கு அழுகை பொங்கி வந்திருக்க வேண்டும். அல்லது அப்படி நடித்திருக்காவாவது செய்திருக்க வேண்டும் ஆனால் அடக்க முடியாமல் சிரித்து விட்டேன். அதைப் பார்த்த அவர் அவரது பையில் வைத்திருந்த ஒரு பெரிய மாத்திரை பெட்டியைப் பிரித்து மாத்திரைகளை எடுக்க ஆரம்பித்தார். அவரது கைகள் நடுங்கிக்
கொண்டிருந்தன. இத்தனையையும் பார்த்தும் நான் சிரிப்பதை நிப்பாட்டவில்லை. என்னை அந்த இடத்திலிருந்து போகச்சொன்னவர் மறுபடியும் சாயந்தரமாக என்னை அவரது அறைக்கு அழைத்து அந்த குழுமத்தில் உனக்கு என்ன தராங்களோ அதையே நான் தரேன்.. நாளைக்கு காலைல உன் கைக்கு பேப்பர் வரும்.. இப்ப உன் இடத்துக்கு போ என்றார்.
இப்படியாக அடுத்து வந்த சில நாட்கள் போக , சிறிது நாட்கள் கழித்து என்னைக் கூப்பிட்டு டிரினிடாட் போறியா என்றார்.
அப்பொழுது இருந்த மனநிலையில் சரியென்று தலையாட்டி விட்டேன். எல்லா வெளிநாடும் அமெரிக்கா போலத்தான் இருக்கும் என்று மனதில் ஒரு நினைப்பு. ஆனால் ஒரு இருண்ட கானகத்தில் பாம்பு பூரான்களுக்கு நடுவில் தனியாக மாட்டப்போவது எனக்கு அப்பொழுது தெரியாது
Delhi Saha ...
அப்பொழுதான் நீண்ட நாட்களுக்குப் பின்னர் இந்தியாவில் வந்து இறங்கியிருந்தேன்.
முதல் பயணம் டிசம்பர் 2005 சென்னை -> லண்டன் -> சிக்காக்கோ ->புயர்தோட்ரிக்கோ -> சிக்காக்கோ -> மெக்சிகோ -> அமெரிக்கா -> இந்தியா( அக்டோபர் 2006)
இரண்டாவது பயணம் - நவம்பர் 2006 - அமெரிக்கா -> புயர்தோட்ரிக்கோ -> இந்தியா மார்ச் 2007 .
மறுபடியும் மே மாத கடைசியில் பயணம் கிளம்புகிறேன் என்று சொன்னவுடன் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சற்று வருத்தம்தான். இருந்தாலும் எதிர்ப்பாய் எதுவும் சொல்லவில்லை.பயணம் இறுதி முடிவு எடுக்கப்பட்டது. பயண வழி சென்னை -> டெல்லி(உள்நாட்டு முனையம்) -> டெல்லி (வெளிநாட்டு முனையம்) -> லண்டன் ஹீத்ரு -> லண்டன் கேட்விக் -> ஜமைக்கா -> டிரினிடாட் மிக நீண்ட பயணம் அது. சென்னையிலிருந்து சாயங்காலம் 6.10க்கு டெல்லி - டெல்லியிலிருந்து அதிகாலை ஒன்றரை மணிக்கு லண்டனுக்கு என்று நினைவு.
என்னை வழி அனுப்ப அப்பா/அம்மா, அத்தை/மாமா நான்கு பேரும் சென்னை விமான நிலையத்திற்கு வந்திருந்தனர். வெளிநாட்டு விமானங்களுக்குத்தான் மூன்று மணி நேரம் , முதலில் உள்நாட்டு விமானம்தானே என்ற நினைப்பில் சென்னை விமான நிலையத்திற்கு வந்த நேரம் சாயங்காலம் ஐந்து மணி. என்ன நினைப்பில் இருந்தேனென்றால் டிக்கெட்டில் 18.10 என்று அச்சிடப்பட்டிருந்த நேரம் எனது மனதில் 8.10 என்று பதிந்திருந்தது. விமான நிலையம் வந்து இறங்கி நிதானமாகக் காப்பி வாங்கி குடித்து(ஒரு காப்பி ஐம்பது ரூபாய் என்று நினைவு) எல்லோருக்கும் பை சொல்லிவிட்டு உள்ளே லக்கேஜ் செக் பண்ண வந்த நேரத்தில் விமானம் கிளம்பியிருந்தது.
ஒரே பதற்றம்.
1) விமானத்தைத் தவற விட்டது.
2) அடுத்த விமானம் இரவு 8 மணிக்குத்தான்.
3) இடைப்பட்ட நேரத்தில் விமான நிறுவன ஊழியர் சொன்னது , அங்கேயிருந்து மும்பைக்குப் போய் அங்கே போய் டெல்லி செல்வது.
4) ஒரு வேளை விமானத்தை பிடிக்கவில்லையென்றால் அலுவலகத்தில் டிக்கெட் காச கேட்ருவாங்களோ !!!!
நான் இரவு 8 மணி விமானத்தையே தேர்ந்தெடுத்தேன்.
அடுத்த பிரச்சனை , பெட்டிகளை செக் இன செய்வதில். முதல் பெட்டி பெல்ட்டில் போனவுடன் இரண்டாவது பெட்டியைத் தூக்கி வைக்கும் போது
” Sir only one Check in Baggage allowed " .
"No i am a international Traveller. In BA flights two check in baggage's are allowed for economic Class"
"No sir you are first travelling up to Delhi na"
நான் பதிலுக்கு ஒரு பெரிய “ No "
பின்னர் அவர் எங்கெங்கோ பேசி ஒரு வழியாகப் பெட்டிகளை செக் இன் செய்து , போடிங் பாஸ்களை பெற்றுக் கொண்டு டெல்லி விமானத்தை பிடித்தேன்.
கிட்டதட்ட ஒரு இரண்டு இரண்டரை மணி நேரம் பயணம் செய்து டெல்லி வந்து இறங்கினேன். டெல்லியில் உள்நாட்டு விமான முனையம் ஒரு இடம் , வெளிநாட்டு முனையம் அங்கே இருந்து ஒரு பத்திருபது கிலோ மீட்டர் தள்ளி. ஆயிற்றா பெட்டிகளை எடுத்துக்கொண்டு வெளியே வந்தால் இரண்டு முனையங்களுக்கும் இடையே ஓடும் இலவச பேருந்து 11 மணி வரைக்கும்தான் என்று சொன்னார்கள்.
வேறு வழியே இல்லாமல் ஒரு டாக்சியை பிடித்து டெல்லி வெளிநாட்டு முனையத்தை வந்தடைய நடு இரவு ஆகியிருந்தது. இதில் சென்னலையே மிஸ் பண்ணியிருக்கலாம் , வீட்டுக்கு போயாவது தூங்கியிருக்கலாம், என்று நினைப்பு வந்தாலும் பெட்டிகளைத் தள்ளிக் கொண்டு ஓடினேன். அப்பொழுது வைத்திருந்த பெட்டிகளில் ஒரு பெட்டி விஐபி பெரிய்து , தூக்கினால அத்தனை கனம் . இறங்கிய உடன் அங்கே முதலில் ஸ்கேனிங் பெல்ட்டில் பெட்டியைப் போட்டு பின்னர் எடுத்துக்கொண்டு செக் இன கவுண்டர் நோக்கி ஓடும் போது பெரிய பெட்டி சரியாகக் காலில் விழுந்து வலது கால் கட்டை விரலை ரத்தக் களரியாக்கியது. ஒரு வழியாக வலியைத் தாங்கிக் கொண்டு பெட்டிகளை செக் இன செய்து விட்டு பாதுகாப்பு சோதனை வரிசைக்குப் போய் நின்றிருந்த கடைசி மனிதரிடம் ”My flight going to start in 30 mins. Could you please allow me to move in front of you" என்று கேட்டதற்கு "Please check with all the peoples standing before me" என்றார். அங்கே வரிசையில் எப்படியும் ஒரு ஆயிரம் பேராவது நின்றிருப்பர்.
சே இவ்வளவு கஷ்டப்பட்டது விமானத்தைத் தவற விடத்தானா என்று என்னையே நானே நொந்து கொண்டிருக்கையில் வந்த அறிவிப்பு எனது பெயரைச் சொன்னது. முன்பாக நின்றிருந்தவரிடம் அந்த இராமசாமி நான் தான் அப்பா என்று சொல்ல சிரித்துக்கொண்டே வழி விட்டார். அப்படியாக டெல்லியை விட்டுக் கிளம்பினேன்