18 மே, 2010

இறந்து போனவனின் டைரிகுறிப்புகளிலிருந்து

14

என் உயிர் சிநேகிதன் மாதவன் இறந்து இன்றைக்கு பத்தாம் நாள். பத்து நாட்களுக்கு முன் என் கம்பெனியின் போர்டு மீட்டிங் மற்றும் புது புராடக்ட்ஸின் புரோமசன்களுக்கான ஆட் சூட்டிங்ஸ் சிலவற்றை காணவேண்டி என் கம்பெனி சகாக்களுடன் மலேசியா கோலாலம்பூரில் இருந்த பொழுது என் மனைவியிடம் இருந்து வந்த தகவல் இடியென தாக்கியது என்னை. 

  “ மாதவன்னா போயிட்டார் ” என்றவளிடம் நம்ப முடியாமல் “ ஏய் லூஸு மாதிரி என்னத்தயாது சொல்லாத. அதல்லாம் இருக்க முடியாது. இப்பத்தான் மலேசியா கிளம்பறதுக்கு முன்னாடி கூட அவன் கூட பேசிட்டு வரேன் ” என்று என்னை அறியாமல் நான் இருக்கும் இடத்தை மறந்து கத்தினேன். “ இல்ல இப்பத்தான் கீர்த்தனாக்கா போன் பண்ணினா ” என்றாள் என்னவள். கீர்த்தனா மாதவனின் அக்கா.

போன் பேசி முடித்து சற்று பைத்தியம் பிடித்த மாதிரி ஒன்றும் தெரியாமல் அங்கே அருகினில் இருந்த சேரில் பொத்தென்று சரிந்து உட்கார்ந்தேன். என்ன மாதிரி பழக்கம் அது. நான் பிறந்ததில் இருந்து என் வீட்டாருடன் இருந்தை விட மாதவனுடன் இருந்த பொழுதுகள் அதிகம்.  எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் நாங்கள் இருவரும் பேசாமல் இருந்த நாட்கள் ரொம்ப கம்மி. என்னுடன் கூட பிறந்தவர்கள் யாருமில்லாத போது பக்கத்து வீட்டில் இருந்த கீர்த்தனாக்காவும், மாதவனும் என் துணையாகி போனார்கள். சற்றே வளர்ந்த உடன் நானும் மாதவனும் பேசி தீர்த்த பொழுதுகள் ஏராளம். ஊரில் இருந்தவர்கள் எங்களை தனி தனியாக பார்த்ததில்லை. 

பொன்னியின் செல்வனிலிருந்து , ஜெப்ரி ஆர்ச்சர் வரை அவன் தான் என்னை தேடி தேடி படிக்க வைத்தான்.என் வாழ்க்கையில் ஏராள விசயங்களை கற்று தந்தவன் அவன்தான். திருட்டு தம்மிலிருந்து,  ஜாக் டேனியல்ஸ் விஸ்கி வரை எனக்கு கற்று கொடுத்தவன் அவன் தான். கல்லூரி காலத்தில் நெரைய விசயங்களை கிரகிக்க முடியாமல் நான் தினறிய போது அவன் தான் எனக்கு சொல்லி கொடுத்தது. இதல்லாம் விட நான் காதலித்த போது என் காதலுக்கு தூது போனதில் இருந்து எங்கள் இரு வீட்டாரிடமும் பேசி என் திருமணமும் முடிந்ததில் அவன் எனக்கு செய்த உதவி ! என்ன சொல்ல . நினைக்க நினைக்க கண்ணில் நீர் திரண்டு வந்து முட்டியது.

மலேசிய வேலைகள் முடிந்து திரும்பி வந்தவுடன் இன்றுதான் மாதவனின் வீட்டிற்கு போக முடிந்தது. போனவுடன் என்னை பார்த்து அழுத மாதவனின் அப்பா அம்மாவுக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் எனக்கும் அழுகை கட்டு படுத்த முடியாமல் பொங்கி வந்தது . எல்லாம் முடிந்து கிளம்புகையில் கீர்த்தனா அக்கா ஒரு பெட்டியை கையில் கொடுத்து மாதவன் என்னிடம் கொடுக்க சொன்னதாக கொடுக்க வாங்கி கொண்டு காரில் ஏறினேன்.

காரில் போகும் போது கீர்த்தனாக்கா கொடுத்த பெட்டியை திறந்து பார்த்த போது பெட்டி முழுவதும் வருட வாரியாக டைரியாக அடுக்கி வைக்க பட்டிருந்தது. ஒவ்வொரு டைரியாக எடுத்து புரட்டிய போது எங்களின் நினைவுகளின் பதிவுகளாக ஒவ்வொரு பக்கங்களும் இருக்க மாதவன் என்னுடன் இருப்பது போலவே பட்டது .  டைரிகளை படித்து கொண்டிருந்த போது மனைவியிடம் இருந்து போனில் அழைப்பு வர திரும்பிக்கொண்டிருப்பதாக சொல்லி போனை வைத்தேன். 

அடுத்தாக எடுத்த டைரியின் முகப்பு பக்கத்தில் அழகிய பச்சை நிற எழுத்துகளில் என் காதல் பக்கங்கள் என்றிருக்க ஒரு அதிர்ச்சி தாக்கியது என்னை. அவனின் எல்லாமும் எனக்கு தெரியும் என்று நினைத்திருக்கையில் இந்த விசயம் பெரிய அதிர்ச்சியாக இருந்தது . அந்த டைரி முழுவதும்  பல அற்புதமான காதல் கவிதைகளால் நிரப்ப பட்டிருந்தது . படித்துக்கொண்டே இருக்கையில் வந்த ஒரு கவிதை இப்படி எழுதப்பட்டிருந்தது. 

 “ என் உடம்பின்
உதிரத்தில் கலந்திருக்கும்
நட்பை விட 
என் மனதில் ஒரத்தில்
பூத்திருக்கும் காதல்
பெரிதென படவில்லை 
எனக்கு


அதற்கு பின் அந்த டைரியில் எதுவும் எழுதப்பட்டிருக்க வில்லை. அந்த கவிதை எழுதப்பட்டிருந்த நாள் “ 19-ஏப்ரல்-1999 ”. மாதவனிடம் நான் எனக்கும் என்னவளுக்கும் இடையேயான காதலை சொன்ன நாள். கண்ணில் நீர் கோர்க்க டைரியை மூடிய எனக்கு உலகம் என் காலடியில் மிக வேகமாக உருண்டோடுவது போல் இருந்தது.

14 கருத்துகள்:

கருத்துரையிடுக

உங்கள் கருத்து என்னை உற்சாக படுத்தும்.