சா.இ.நா. எட்வர்ட் பள்ளிகள்

/ 7 ஜூன், 2010 /


“ கேடில் விழுச்செல்வம் கல்வி  யொருவற்கு
     மாடல்ல மற்றை யவை”

இந்த உலகத்தில் ஒருவனுக்கு உயிர் வாழ உணவு, நீர், காற்று, உடை , உறைவிடம் எல்லாம் எவ்வளவ்வு முக்கியமோ அவ்வளவ்வு முக்கியம் கல்வியும்.  அந்த கல்வியை கற்று தரும் ஆசான்களும், கல்விகற்க நாம் போகும் கல்விசாலைகளும் நம் வாழ்வின் முக்கியமான் அங்கங்கள்.

நான் கல்வி கற்ற பள்ளிக்கூடத்தையும் , கல்வி கற்பித்த ஆசான்களயும் திரும்பி நினைத்துப் பார்க்கும் பதிவு இது.  நான் எனது பள்ளிப் படிப்பை படித்தது எங்கள் ஊர்(சாத்தூரில்) உள்ள சா.இ.நா. எட்வர்ட் பள்ளிகளில். அரை கிளாஸ்(எல்.கே.ஜி,யூ.கே.ஜி)லிருந்து ஐந்து வரை(இரண்டாம் வகுப்பு தவிர) சா.இ.நா.இடைநிலை பள்ளியிலும், ஆறிலிருந்து பன்னிரெண்டு வரை சா.இ.நா. உயர் நிலை பள்ளியிலும் ஆக மொத்தம் 11 ஆண்டுகள் எனது பள்ளிப் பருவம் இங்கேதான் நடந்தது.

முதல் வகுப்பு எனக்கு எடுத்த டீச்சரின் பெயர் ஆனி அம்மா.அவர்களின் பெண்ணின் பெயர் ஆனி, அதனால் எங்களின் மனதில் அந்த பெயரே நிலைத்து விட்டது. அவர்கள் யாரிடமும் கோபப்படவே மாட்டார்கள். இரண்டாவது நான் படித்தது பாலர் கல்வி நிலையம்(ஈரோட்டில் மூலப்பாளயத்தில் இருந்த பள்ளி.) எடுத்த டீச்சரின் பெயர் காந்திமதி டீச்சர். இவர்கள் பெயர் எனது மனதில் நிலைத்தற்கு காரணம் நான் இரண்டாம் வகுப்பில் முதல் மாதத்தில் கணிதப்பரிட்சையில் 100/100 வாங்கிய உடன் என்னை முன்னாடி வரச் செய்து வகுப்பில் இருந்த மற்ற்வர்களயெல்லாம் எழுந்து நிற்க செய்து கைதட்ட சொன்னதுதான்.

திரும்பியும் மூனறாம் வகுப்பு சா.இ.நா. இடை நிலைப்பள்ளியில் தொடர்ந்தது.
மூன்றாம் வகுப்பு எடுத்தது பத்மா டிச்சர். இவர்களின் அக்கா எங்கள் தெருவில் இருந்தார்கள். அதனால் எங்கள் வீட்டில் இருந்த அனைவருக்க்கும் நல்ல பழக்கம் இவர்களுடன். எங்கள் வீட்டில் பெரியம்மா வைக்கு வத்தக்குழம்பின் மேல் அவர்களுக்கு அவ்வளவு பிரியம். நான் நான்காம் வகுப்பு படித்தது பாலசுப்ரமணியம் சார். இவர் என்றால் இன்னும் ஒரு வித பயம் மனதில் இருக்கின்றது. எனது அப்பாவின் வகுப்பு தோழர் இவர். நான் என்றால் இவருக்கு கொள்ளை பிரியம். எப்பவும் அடி வெழுத்து விடுவார்.

ஜந்தாம் வகுப்பு நான் படித்தது ஜோதி டீச்சரிடம். என் தந்தையும் இவரிடம் படித்திருக்கிறார். நன்றாக ஆறடியில் ஆஜானபாகுவான உருவம் அவருக்கு. அவரை மாதிரி ஒரு பெண்மணியை திரும்பி என் வாழ்வில் கண்டதில்லை. அவர் வீட்டிற்கு ட்யுஷன் படிக்க போகயில் அவரது கணவரிடம் (காளைராஜ் சார் அவரும் ஆசிரியர் எனது தந்தைக்கு) நம்ம் கண்ணண்(என் தந்தை) பையன் இவன் என்று முகத்தில் சிரிப்புடன் சொல்லுவார். சரியாக படிக்கவில்லையென்றால் அடி பின்னி பெடலெடுத்து விடுவார்.

ஆறாம் வகுப்பில் இருந்து பண்ணிரெண்டு வரை நான் படித்தது சா.இ.நா. எட்வர்ட் மேல்நிலைப்பள்ளியில். ஆறாம் வகுப்புக்கு எனக்கு வகுப்பாசிரியர் வேலுச்சாமி சார். எப்பொழுதும் புன்னகை பூத்திருக்கும் முகம் இவருடையது. இன்று வரையிலும் நான் இவரோடு தொடர்பிலிருக்கிறேன். எனது திருமண வரவேற்பிற்க்கு வந்து வாழ்த்தினார் என்னை. ஒருமுறை வீட்டில் அம்மாவிடம் கோபித்துக்கொண்டு மத்தியானம் சாப்பிடாமல் பள்ளிக்கு கிழம்பி வந்து கொண்டிருக்கையில் வழியில் என்னை பார்த்த இவர் என் முகத்தை பார்த்து நான் சாப்பிடாததை கண்டு பிடித்து அவர் வீட்டில் சாப்பிட செய்து அவருடன் என்னை பள்ளிக்கு கூட்டிக்கொண்டு போனார். அன்று அவர் சொன்ன விசயம் யார் மேல் கோபம் இருந்தாலும், வருத்தம் இருந்தாலும் சாப்பட்டை மட்டும் பழிக்க கூடாது என்பதை இது வரை தட்டியதில்லை(அதுனால் தான் இன்று 90 கிலோ வெயிட் இருக்கிறேன் என்பது வேறு விசயம்).

ஏழாம் வகுப்புக்கு எனது ஆசிரியர் திரு பிரான்சிஸ் செல்வராஜ் சார் அவர்கள்.  நாங்கள் ஏழாம் வகுப்பு படித்த போதுதான் அவருக்கு திருமணம் நடந்தது. அவர் திருமணத்துக்காக 15 நாள் விடுப்பில் இருந்தார். அந்த 15 நாட்களும் எங்களின் பொழுது பள்ளி மைதானத்தில் தான் கழிந்தது. அவரின் திருமணத்திற்கு எங்கள் வகுப்பில் படித்த எல்லாரும் சென்றிருந்தது வாழவில் மறக்கு முடியாத தருணம். இவரும் என் திருமண வரவேற்பிற்கு வந்து வாழ்த்திச்சென்றார்.

எட்டாம் வகுப்பு எனக்கு எடுத்தது டி.எஸ்.பி என்றழைக்பட்ட திரு டி.எஸ். சவுந்திரபாண்டியன் சார் அவர்கள். இவர்தான் எனக்கு ஆங்கிலம், சயின்ஸ் மற்றும் மேத்ஸ் எடுத்தார். சயின்ஸ் கிளாஸ் எடுக்கறப்ப அதாவ்து காக்ரோச் குட்டி போடறதல்லாம் பத்தி சொல்றப்ப. இதல்லாம் நான் உங்களுக்கு சொல்ல கூடாது. நான் சொல்லைன்னாலும் எப்படியும் நீங்களே தெரிஞ்சுக்கத்தான் போறீங்க. அதனால சொல்றேன் அப்படின்னு செம் பில்டப் கொடுப்பார். இவர பத்தி இன்னொரு விசயம். இவர் கிளாஸ் பசங்கள பத்தி மத்த வாத்தியாருங்க எதுவும் குறை சொன்னா இவருக்கு அது துளி கூட பிடிக்காது. சண்டைக்கு போயிருவார்.

ஒன்பதாவது வகுப்புக்கு எனக்கு சொல்லி கொடுத்தது தேவசகாயம் சார். இவரிடம் பள்ளிப்பருவம் முடியும் வரைக்கும் அடி வாங்கியிருக்கிறேன். இவரின் ஆங்கில வகுப்புகள் அலாதியானது. ஆங்கில இலக்கணத்துக்கு பார்முலா எழுதி இவர் சொல்லிக்கொடுத்தை வைத்துதான் இன்று வரைக்கும் பொழப்பு நடக்குது எனக்கு. சதா சர்வ காலமும் பள்ளியும் மாணவர்களும் தான் இவரின் எண்ணம் முழுக்க.  இவரின் இரண்டாவது மகன் ஸ்டிபன் என் கிளாஸ்மெட்.

பத்தாவது எனக்கு எடுத்தது சிங்கராஜ் சார். இவர் சொல்லும் கதைகள் அலாதியானது. பத்தாவது படிக்கும் போது எனக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தது திரு சி.சுப்ரமணியம் சார் அவர்கள். “ ஏந்நாய். பேநா(ய்) கொண்டு வரவில்லை. போநாய் வெளியே” என்ற இவரின் வச(வு)னம் மிகவும் பேமஸ். இவர் உரைநடை வகுப்பெடுக்க தமிழ இலக்கணம் எடுத்தது மா.பா(மா. பாலகிருஷ்னன்) சார் அவர்கள். நகைச்சுவை உணர்வு மிக்கவர்.

+1 ல் எனக்கு வகுப்பாசிரியர் திரு காமராஜ் சார் அவர்கள். இவர்தான் மேத்ஸ் டீச்சரும் கூட. +1,+2 இரண்டுக்கும் இவர்தான் மேத்ஸ். இவருக்கு கோபமே வரதாது. இவர் வைக்கும் பரிட்சைகளுக்கு வர மாணவர்களுக்கு பரோட்டாவல்லாம் வாங்கி குடுப்பார்.  +1 ல் தமிழ் சொல்லிக்கொடுத்தது திரு ஆனந்தராஜ் சார். ஒரு முறை மாதப்பரிட்சைக்கு புக்கில் உள்ள திருக்குறள் எல்லாவற்றையும் எழுத சொன்னார்(பார்க்காமல்தான்). நான் எடுத்தது நூற்றிற்கு சற்று குறைச்சல் ‘0’.
+2 வில் எனக்கு வகுப்பாசிரியர் திரு . கருனாகரன் சார் அவர்கள். மிஸ்டர் ஸ்டிரிக்ட்.  கெமிஸ்ட்ரி டீச்சர் இவர்தான். பெயில் ஆனால் தொலைந்தோம். 100 தடவை, 200 தடவையெல்லாம் இம்போஸிஸன் கொடுத்து மாணவர்களை அழ வைத்து விடுவார். இதுக்கு பயந்தே பாஸ் செய்வ்வோர் அதிகம். ஆனால் நான் பயந்த்தே கிடையாது.

இந்த வருடம் சா.இ.நா. எட்வர்ட் பள்ளிகளின் நூற்றாண்டு வருடம். நூற்றாண்டு வருட கொண்டாடங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. விரைவில் பாரதரத்னா டாக்டர்.எ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களது தலைமையில் பள்ளியின் நூறவது ஆண்டு விழா நடக்க இருக்கிறது. இப்போது பள்ளியையும் ஆசிரியர்களயும் நினைத்து பார்பது  மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.சாத்தூர் மாதிரி ஒரு சிற்றூரில் இந்த மாதிரி ஒரு கலவி நிறுவனம் நூறாண்டுகளை கடந்தும் சேவை செய்து வருவது போற்ற வேண்டிய விசயம் ஆகும். தற்போது கோவை மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்து வரும் திரு. உமாநாத் இந்த பள்ளியின் முன்னால் மாணவர்.பள்ளியை பற்றி மேலதிக தகவல்களுக்கு. http://www.shnedwardschool.com.


6 கருத்துகள்:

கருத்துரையிடுக

உங்கள் கருத்து என்னை உற்சாக படுத்தும்.

 
Copyright © 2010 க ரா, All rights reserved
Design by DZignine. Powered by Blogger