முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சாயாவனம் - ஒரு வனத்தை பற்றிய உரையாடல்


இன்றைக்கு காலையில் ஆபிசில் காஃபி டைமில் ஒரு பேச்சு வந்தது.

ஒருத்தர் என்னவோ புக் ஃபேர் போனேன்னு சொன்னிங்கள ஒரு நாலஞ்சு புத்தகம் வாங்கிருப்பீங்களான்னு ஆரம்பிச்சாரு.

இல்லைங்ணா.. ஒரு முப்பத்தெட்டு ஆகிப்போச்சு இந்த வாட்டி அப்படினதுக்கு  அவர் மூஞ்சில ஈயோடல...

வாங்கறீங்க .. சரி எதுனாச்சும் படிப்பீங்களா அப்படினாப்டி..

உறுதியா, அதுக்குதான வாங்கறது அப்படின்னேன்..

சரி இதுவரைக்கும் படிச்ச எதயாது சொல்லுங்க பார்ப்போம்.. என்ன மாதிரி வாசிப்பிங்கன்னு தெரிஞ்சுக்கலாம் அப்படின்னாரு..
ரொம்ப பின்னாடில்லாம் போகலிங்க.. இப்போதைக்கு இந்த புக் ஃபேர்ல ஒரு வாங்கின புத்தகத்த பத்தி சொல்றேன் கேட்டுக்கோங்க அப்படின்னு சாயாவனத்த பத்தி சொல்ல ஆரம்பிச்சேன்.

“ தன்னோட கனவான ஆலைய நிர்மானிக்க வேண்டி ஒருத்தன் ஒரு வனத்த அழிச்ச கதைங்க இந்த சாயாவனம்”..

அதாவது சந்தர்ப்ப சூழ்நிலைகளால சின்ன வயசுல சொந்த மண்ண விட்டுபோன ஒருத்தன் ,பின்னாடி பல தேசம் சுத்தி சம்பாதிச்ச காச வைச்சுக்கிட்டு தன்னோட பிறந்த மண்ணுக்கே வரான்..  வந்த இடத்துல தன் சொந்த சனங்களுக்கு மத்தியில தான் நினைச்ச கரும்பாலைய அமைக்க  ,அந்த ஊருல இருக்கற ஒரு பெரிய மனுசன் கிட்ட ஒரு தோட்டத்த கிரையம் முடிக்கறான்.

தோட்டம்னா அது சும்மா ஒரு சின்னத் தோட்டம் இல்லைங்க.. ஒரு வனம்.. வனம்னா பல விலங்கினங்கள் , பட்சிகள் இன்னும் பல பல உயிரினங்கள் ஆன்ந்த கூத்தாடிட்டு இருக்கற பூமி.. அந்த தோட்டத்த வாங்கி அங்க ஆலைய நிர்மானிக்க வேலைக்கு ஆள் கிடைக்காம அவனே அந்த வனத்த அழிக்க ஆரம்பிக்கறான்.  கதையின் பெரும்பகுதி அவனுக்கும் அந்த வனத்துக்கும் நடக்கிற யுத்தத்த பத்திதான். அந்த ஊருல அவனுக்கு எல்லா விதத்திலும் சப்போட்டுன்னா அவனுக்கு இருக்க்கற மாமாதான்.. அப்பப்ப அவரும் துணைக்கு வர  அவனோட யுத்தம் நடக்க ஆரம்பிக்குது.. அந்த யுத்ததின் ஒட்டத்தோட அந்த வனத்துல படர்ந்திருக்கற செடி கொடிகளோட மனுசங்க குணத்த ஒப்பிட்டு வர விவரணைகைகள் சான்ஸே இல்லைங்க..  கதையின் போக்கோட இன்னும் சில விசயங்கள் அழகா சொல்லப்பட்டிருக்கு..  கதை நடக்கற காலம் சுதந்திரத்திற்கு  முற்பட்ட காலகட்டம்..  அப்ப மக்களிடைய பெரும்பாலும் பண்ட மாற்று முறைதான் நடந்துட்டு இருக்கு.. வேலைக்கு சம்பளமும் நெல்தான்..  முதலாளி மார்களுக்கும், வேலையாட்களுக்கும் இருந்த பிணைப்பு அவ்வளவ்வு அழகா சொல்லப்பட்டிருக்கு..

ஒரு கட்டத்துல சிதம்பரம்...

 “யாரது சிதம்பரம்  ?”
ஒ.. சாரி .. உங்ககிட்ட அந்த கதைநாயகனோட பேரைய சொல்லலைல.  அதாங்க அந்த கரும்பாலை வைக்க அந்த வனத்த அழிக்கறவன்.. அவந்தான் சிதம்பரம்... அவன் காட்ட அழிக்கறதுல பொறுமை இழந்து அவனோட மாமாக்கிட்ட மாமா காட்டுக்கு தீ வச்சுறலாமாங்கிறான்.. அவரும் ஒ.கேன்னு சொல்ல.. காட்டுக்கு தீ வைக்கிறான்..

தீ வைக்கிறப்ப ஒரு காட்சி வருது.. தீயோட வெக்கை தாங்க முடியாம அந்த காட்டுல இருக்கற ஒவ்வொரு உயிரினமும் வெகுண்டு ஓடுது.  அப்ப ஒரு காக்கை வந்து சிதம்பரம் மேல விழுது..  அந்த காக்கைய அவன் தீயில திரும்பி தூக்கி போட்டு பொசுக்கற காட்சி...சே என்னடா இவன்லாம் ஒரு மனுசனானு எரிச்சலா வந்துச்சு...

காடு முழுக்க எரிஞ்ச உடனே அத பார்க்க சிதம்பரமும் மாமாவும் வராங்க..  அப்ப காடு முழுக்க இருந்த அழகான புன்னை, புளிய மரங்கள், மூங்கில்கள் எல்லாம் கரி கட்டையாகி கிடக்குது..  அதோட அங்க இருந்த ஆடு, மாடு, முயல் மற்றும்  இன்னபிற விலங்குகள் எல்லாம் செத்து விழுந்துருக்குதுங்க..  அத பார்த்த சிதம்பரத்தோட மாமா ஒரு மாதிரி ஆகிடராரு.. அவ சிதம்ப்ரம் சொல்றான் பாருங்க ஒரு வசனம்..

 “நம்ம வேணும்னு எதுவும் செய்யலீங்க மாமா”.....

கொஞ்சம் கடுப்பா வந்துச்சு இந்த இடம்.. இப்படித்தான் மனுச பய அவனோட தப்பு ஒவ்வொன்னுக்கும் ஏதாச்சும் சாக்கு போக்கு சொல்லி சமாதானம் சொல்லி தப்பிச்சுக்கறான் இல்லிங்களா...

  “இம்ம்”...

எப்படியோ காட்ட அழிச்சு ஒரு வழியா ஆலையா கட்ட ஆரம்பிக்கறான்.. அந்த ஆலைய கட்ட ஒரு பெரும் தச்சர் கூட்டமே வந்து வேலை பாக்குது..  அவங்களுக்கு கூலியா சிதம்பரம் காச கொடுக்க நினைக்க.. அந்த தச்சர் கூட்ட தலைவன் சொல்றான் “ காச திங்கவாங்க முடியும்.. எங்களுக்கு நெல்லுதாங்க வேணும்”... எனக்கு நம்மள நினைச்சு சிரிப்பு வந்தது...

பின்னாடி எப்படியோ சமாளிச்சு அவனோட மாமா, அப்புறம் அந்த ஊரு பெருந்தனக்காரங்க எல்லாத்துகிட்டயும் கெஞ்சி கூத்தாடி நெல்லு வாங்கி அவங்களுக்கு சம்பளமா கொடுக்கான்.. அப்படியே போயிட்டு இருக்கற வாழ்கைல நெல்லுக்கு தட்டுபாடு வர அவன் முழிச்சு கிட்டே வேலையாளுங்களுக்கு காசா கொடுக்க ஆரம்பிக்கறான்..  இதுக்கு பதிலுக்கு வேலையாளுங்க எங்களுக்கு பணம் வேணாம் நெல்லுதான் வேணும்னு ஸ்டரைக்கெல்லாம் பண்ண ஆரம்பிக்கறாங்க..

அத சமாளிக்க இவனே அந்த ஊருல ஒரு பலசரக்கு கடைய ஆரம்பிச்சு அவங்ககிட்ட சொல்றான் நீங்க அந்த கடைல காசு கொடுத்தா உங்களுக்கு தேவையான பொருட்கள் கிடைக்கும்னு.. அப்படியே போராடி ஒரு வழியா ஆலைய கட்டி முடிச்சு உற்பத்தியயும் தொடங்கி தொழில்ல ஜமாய்கிறான்.. அதுலயும் ஒரு சிக்கல்..  என்ன சிக்கல்னா கரும்பு.. ஆலைக்கு கரும்ப எங்கேந்தோ கொண்டு வர வேண்டியிருக்கு.. அதுக்கும் அந்த ஊரு காரங்க கிட்ட போராடி கரும்ப விளைய வைக்கிறான்..

இப்படியே போயிட்டு இருக்கறப்ப இன்னொரு சிக்கல் வருது..
என்ன சிக்கல்னா அந்த ஊருல சமையல் புளிக்கு தட்டுப்பாடு.. இவனும் எப்படியோ நிறைய ஊருக்கு போயி ஒவ்வொரு இடத்திலேந்தும் இனிப்பு புளி, புளிப்பு புளின்னுல்லாம் வாங்கிட்டு வந்து எல்லாத்தயும் ஒன்னா கலந்து  விக்கிறான்..

அந்தப் புளிய வாங்கிட்டு போர ஒரு கிளவி , புளி வாயிலையே வைக்க வெலங்கலன்னு அவன் மூஞ்சில காரி துப்பிட்டு போகுது.. ஏன் ஆட்சின்னு கேக்கறப்ப அதான் நீ எல்லாத்தயும் அழிச்சிட்டியேன்னு போகுது..
என்ன விசயம்னா இவன் எந்த வனத்த அழிச்சானோ அந்த வனத்துல இருந்த ஒவ்வொரு புளிய மரமும் ஒவ்வொரு வீட்டுக்கு புளி சப்ளை பண்ணிட்டு இருந்திருக்கு..

“ நல்லாத்தான் இருங்குங்க கதை.. புத்தகம் எங்க கிடைக்கும் ? என்ன விலைன்னாரு கூட வேலை பாக்கறவரு..

புத்தகம் : சாயாவனம்
ஆசிரியர் : சா.கந்தசாமி
பதிப்பகம் : காலச்சுவடு
விலை : 150 ரூபாய்

இத சொல்லிருக்கேன் .. அவரு வாங்கறாருன்னு தெரியலை.. உங்களுக்கு தோணுச்சுன்னா நீங்க வாங்குங்க..  அருமையான புத்தகம்.. உங்க கலக்‌ஷன்ல கண்டிப்பா இருக்க வேண்டியது.. வாங்கி வச்சா போதாது.. கட்டாயமா படிக்கனும்...
க ரா

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அப்பா காணாமல் போனார்

காரை டெலிவரி எடுக்க வந்திருந்த கஸ்டமருடன் பேசிக்கொண்டிருந்தபொழுது, டேபிளில் இருந்த டெலிஃபோன் அடிக்க ஆரம்பித்தது.

போனை எடுத்தவுடன் “பிஸியா இருக்கேன். யாருன்னாலும் கனெக்ட் செய்யாதன்னு சொன்னேன்ல” என்றேன் ப்ரியாவிடம்.

ப்ரியா ரிஷப்பனிஸ்ட்.

 “இல்லை சார் உங்கம்மான்னு சொன்னாங்க அதான் “ என்றாள்.

 “அம்மாவா ? “ ஒரு கணம் கேள்விக்குறி மாதிரி புருவங்கள் ரெண்டும் வளைந்து நிமிர்ந்தது.  கஸ்டமருக்கு புரிந்திருக்கவேண்டும். “கிளம்பட்டுமா ? “ என்பது மாதிரி சீட்டை விட்டு எழுந்திருந்தார்.

“சாரி” என்றேன். கைக்குலுக்கி அவர் நகர்ந்தவுடன், “ம்ம்.. கனெக்ட் பண்ணு என்றேன்”.

”அஷோக் “ என்று பதில்குரல் ஒலித்தது. கனெக்ட் செய்திருந்தாள். அம்மாவின் குரல்தானா என்று ஒரு நிமிடம் யோசனை வந்து போனது. அவளிடம் எப்போது கடைசியாக பேசினேன் என்று நினைவில்லை. “சொல்...லு..ம்மா” என்றேன் தயங்கி தயங்கி..
”அஷோக் ... அப்பாவ காணலடா “ என்றாள்..
தூக்கி வாரிப்போட்டது. “எத்தன மணி நேரம் ஆச்சும்மா . பக்கத்துலதான் போயிருப்பார். வந்துருவார்” என்றேன்.
“இல்ல அஷோக் .. மூணு நாளாச்சுடா” என்றாள்.
“என்னம்மா சொல்ற” ஜோதி மாமா வீட்டில் சோபாவில் உட்கார்ந்தி…

ஷகிலா சேச்சியும் சிநேகிதர்களும் பின்னே விஷாலும்

சித்திரை திருநாளை முன்னிட்டு வெளியான நான் சிகப்பு மனிதனில் விஷாலின் பக்கெட் லிஸ்ட்டில் இருப்பதிலயே ஆக முக்கியமான விசயமானது கேரளத்து பைங்கிளியாய் ஒரு கால கட்டத்தில் இருந்த லால்களயும், மம்முட்டிகளயும் முட்டி புறந்தள்ளிய அகில இந்திய சூப்பர் ஸ்டாரினி உயர்திரு ஷகிலா சேச்சியின் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்ப்பது.  இந்த பாயிண்ட் ஒரு பாடு மனதில் வைத்து பூட்டிய சாத்தூர் நினைவுகளை வெளியே கொண்டு வந்து விட்டது.
அது பள்ளி முடித்து காலேஜ் சேர்ந்த கால கட்டம். அதுவரைக்கும் வாழ்வினிலே மிகவும் மகிழ்ந்து செய்த விசயம் சாப்பிடுவது நண்பர்களுடன் ஊர் சுற்றுவது, ஆற்றங்கரை மணலில் கால் கடுக்க கிரிக்கெட் விளையாடுவது மற்றும் வெட்டி அரட்டை அடிப்பது. இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமானதாக இருந்தது சரோஜாதேவி புத்தகம் படிப்பது. காலேஜ் சேர்ந்த கால கட்டத்தில் +2 முடித்தும் இஞ்சியரிங் சேரும் ஆசையில் இருந்தும் இஞ்சியரிங் சீட் கிடைக்காத சில நண்பர்கள் மட்டும் இம்ப்ரூவ்மெண்ட் எழுதுவதற்காக பயிற்ச்சியில் இருந்தனர். அவர்களின் ஆகப்பெரும் காரியம் தினமும் சாயங்கால வேளையில் இருட்டிய பின்னர் தேவி தியேட்டருக்கும் முருகன் திய…

வாசிப்பு என்னும் பேரானந்தம்.

சிறு வயதிருலிருந்து எனது நினைவு தெரிந்த நாள் முதல் என்னுடைய முக்கியமான பொழுது போக்கு கனவு காண்பது.. எனக்கு நானே கதைகள் சொல்லி கொண்டு ஏதோ ஒரு கனவில் அழைந்த பொழுதுகள் ஏராளம்.   அந்த பழக்கம் பிற்கு வந்த நாட்களில் பல கதை புத்தகங்களை வாசிப்பதில் கொண்டு போய் சேர்த்தது.  
மற்ற சிறுவர்கள் பூந்தளிர், அம்புலிமாமா, சிறுவர் மலர் என்று படித்து கொண்டிருந்த காலத்திலேயே ஆனந்த விகடனை வாசிக்க காத்து கிடப்பேன் நான்.   ஏனோ எனக்கு புராண காலத்து கதாபாத்திரங்களின் மேல அந்த அளவு ஈடுபாடு இருந்தது இல்லை அந்த நாட்களில். அதானாலேயே என்னவோ காலப்போக்கில் தேவிபாலா, ரமணிசந்திரன் போன்றோர் எழுதிய நிகழ்கால மனிதர்களை போன்ற கதாபாத்திரங்களை உள்ளடக்கிய நாவல்கள் என்னை பெரிதும் கவர்ந்திருந்தன.  பாடப் புத்தகங்களை தொடாமல் நாவல்கள் , ஆனந்த விகடன் போன்ற புத்தகங்களிலேயே சஞ்சரித்திருந்தது என் மனம். இந்த பழக்கத்தினால் பள்ளியில் மதிப்பெண்கள் குறைய குறைய வீட்டில் வசவும் அடியும் ஏறுமுகம் அடைந்தது.
சிறுவயதிலேயே என்னிடம் ஒட்டிகிடந்த பிடிவாத குணம் அடிகளையும் வசவுகளையும் தாண்டி கதை புத்தகங்களை நோக்கி என்னை ஒட வைத்தது. வீட்டிற்கு தெரியாமல் கத…