31 ஜன., 2010

வாசிக்கப்படாத கடிதம்

5

சண்டே அதி காலை எட்டு மணிக்கு நல்ல உறக்கத்தில் இருந்த போது நிலநடுக்கம் வந்த மாதிரி உணர்ந்து விழித்துப்பார்த்தேன். முந்தய நாள் ஈவ்னிங் ஷோவிற்கு தான் விரும்பிய தமிழ்(ப்) படத்திற்கு டிக்கட் கிடைக்கவில்லை என்று பொய் சொல்லி நான் விரும்பிய கோவா படத்திற்கு கூட்டிப்போன கோபத்தில் பாத்திரங்களை உருட்டிக்கொண்டிருந்தாள் என் மனைவி. அவளின் கோபத்தை சந்திக்க மனதில் தில் இல்லாமல் திரும்பிப் படுத்தேன்.

“இன்னிக்கு வீட்ட ஒழிக்கனும்னு சொன்னது ஞாபகம் வரலையா ? சீக்கிரம் எந்திரிச்சு வாங்க. வேலை நிறைய இருக்கு.” அவளின் அன்பான கட்டளைக்கு அடிபணிந்து படுக்கையிலிருந்து எழும்பி காலை கடன்களை முடிக்க குளியல் அறைக்குள் தஞ்சம் புகுந்தேன். என்னை திட்டிக்கொண்டே படுக்கயை மடித்து வைக்கும் சத்தத்தை கேட்டுக்கொண்டே குளியல் அறையின் கதவை திறக்கும் போது படீர் என்ற சத்தமும் அதை தொடர்ந்து என் அன்பு மகனின் அழுகைசத்தமும் கேட்டது. கதவை திறந்த உடன் பளீர் என்று சிதறிக்கிடந்த கோலப்பொடியை பார்த்தபோது மகனின் அழுகைசத்தத்தின் காரணம் புரிந்தது.

மகனை தேற்றி ஒரமாக உக்காத்திவிட்டு, மனைவியின் அடுத்த வார்த்தைக்கு முன் வேலையை ஆரம்பித்தேன். பரணையில் இருந்து ஒவ்வொரு பொருட்களாக இறக்கி வைக்கும் போது அந்த பழைய டிரங்க் பெட்டியை திறந்துப்பார்த்தேன். அதனுள் பழைய புத்தகங்கள் நிறைய இருந்தது. அந்த பெட்டியை அப்படியே ஒரமாக வைத்து விட்டு மிதமிருந்த வேலைகளை விரைந்து முடித்து விட்டு குளிக்கச்சென்றேன். குளித்து முடித்து விட்டு வந்து அன்றைய நீயூஸ் பேப்பரை படித்து முடித்து மதிய உணவை முடித்து சிறிது நேரம் டீவி பார்த்து விட்டு மனைவியும் மகனும் தூங்கச்சென்றனர்.

ஒரமாக இருந்த அந்த டிரங்க் பெட்டி கண்ணில் பட அதை திறந்து பார்க்கையில் மேலாக இருந்த நா.பார்த்தசாரதியின் “பொன் விலங்கு” நாவலை கையில் எடுத்து புரட்டிக் கொண்டிருந்த போது அதனுள் இருந்து பழுப்பேறிய ஒரு கவர் வெளியில் விழுந்தது. என் தந்தையின் பெயருக்கு வந்திருந்த ஒரு பழைய கடிதம் அது. ஆவல் மேலிட அதை பிரித்து படிக்க தொடங்கினேன்.
பெயர் தெரியாத ஒரு பெண்ணிடம் இருந்து வந்திருந்த அந்த கடிதம் இப்படி தொடங்கியது.

“அன்பானவர்க்கு

உங்களை சந்திக்காத இந்த மூன்று மாதங்கள் ஏனோ முன்னூறு வருடங்களுக்கு உண்டான வருத்தங்களை தந்திருக்கிறது. என் வருத்தங்களின் நீட்சி உங்களுக்கும் ஏற்பட்டிற்கும் என்று நினைக்கிறேன். குட்டி கண்ணண் வயிற்றினுள் உதைக்க ஆரம்பித்திருக்கிறான். அவனின் ஒவ்வொரு உதையும் உங்களின் காலடிச்சத்தத்தை நினைவுபடுத்துவதுதான் இந்த பிரிவின் துயரத்தை சற்று தணிக்கிறது........” என்று நீண்ட அந்த கடிதத்தை படித்து முடித்த உடன் , வாழ்க்கையின் முழுவதும் பார்த்து பழகிய என் அம்மாவின் மெளனத்தின் அர்த்தம் புரிந்த மாதிரி இருந்தது.

5 கருத்துகள்:

கருத்துரையிடுக

உங்கள் கருத்து என்னை உற்சாக படுத்தும்.