31 மே, 2010

குற்றம் - 2

5


காட்சி 1

“ என்னப் பெத்த இராசா ஒன்னைய இந்த கோலத்துல பாக்கறதுக்கா நான் இன்னும் உசிரோட இருக்கேன்.” மாரி முத்துவை பார்த்த உடன் பொன்னாத்த கிழவியின் அடி வயிற்றில் இருந்து கிளம்பிய அந்த சத்தத்தில் அந்த அறையில் இருந்த மற்றவர்கள் எல்லாம் கிழவியை திரும்பி பார்த்தனர். 

கிழவியின் ஒப்பாரியை கண்டு எரிச்சலடைந்த வக்கில் ஸ்ரீதரன் “ எப்பா கணேசா நீ ஒன் ஆத்தாவ கூப்பிட்டு கொஞ்சம் வெளிய போய்யா. நீங்க வந்தாளாது அவன் வாய தொரந்து பேசுவான்னு சொல்லி உங்கள கூப்டுட்டு வநதா நீங்க இங்க வந்து இப்படி கத்துனா நான் என்ன பண்ண” என்று கத்தியதை கேட்டு கிழவியை கணேசன் வெளிய தள்ளிக்கொண்டு போனான்.

கிழவி போன உடன் “ எப்பா மாரிமுத்து எப்படி இருக்க. இங்க வெச்சு கேக்க கூடாதுதான். ஏன் கேக்கிறேனா போலிஸ் காரங்க எதுவும் தொந்தரவு பண்ணினாங்களா. யாரும் எதுவும் கைய கிய்ய வைக்கிலேயே” என்றவரை பார்த்து இல்லை என்றமாதிரி தலையசைத்து வைத்தான் மாரிமுத்து.

“ ஏம்பா இதுக்கு கூட வாயை தொறந்து பதில் சொல்ல மாட்டியா. என்ன மவுன விரதமா இருக்க. நீ எதுனாச்சும் பேசுனாதான் என்னையால எதுவும் செய்ய முடியும். உனக்கில்லாட்டியும் இன்னும் மூனு பேரு ஒன்னைய நம்பி இருக்காங்க " என்றவரிடம்  “சரிங்கய்யா” என்றான் மாரிமுத்து முதன் முதலாக. 

காட்சி 2
 மாரிமுத்துவிடம் பேசி முடித்து விட்டு வெளியே வந்த ஸ்ரீதரன் “ நீங்க எதுவும் பேசனுன்னா போய் பேசிட்டு வந்துருங்க. ”  என்றவ்ரை பார்த்து “ சரி சார் ” என்றான் கணேசன்.

“ ஆத்தா வா உள்ளார போய் அண்ணண பாத்துட்டு வரலாம்” என்ற கணேசனிடம் “ இல்லையா நீ போய்ட்டு வந்துரு . நான் திரும்பி உள்ளார வந்தா அழுது வெச்சுருவேன். நீ போய் அவனுக்கு தைரியம் சொல்லிட்டு நல்லதா நாலு வார்த்த பேசிட்டு வா. போ” என்றாள் கிழவி.

சுவர் ஒரமாக நின்றிருந்த மாரிமுத்து “ அண்ணே” என்று கூப்பிட்ட கணேசனின் குரல் கேட்டு திரும்பினான்.

“ கணேசு நல்லா இருக்கியா. ஆத்தா எப்படி இருக்கு. அதே நல்ல படியா பாத்துக்க”  என்ற் மாரிமுத்துவை பார்த்த கணேசன் “ ஆத்தா சதா சர்வ காலமும் ஒன்னைய நெனச்சுகிட்டு பொலம்பிக்கிட்டே கிடக்குன்னா” என்றான்.

“ அண்ணிய பாத்தியாடா”  என்றான் மாரிமுத்து.

 “ இல்லைனனா நாலு நாளைக்கு முன்னாடி போயிருந்தோம் நானும் ஆத்தாவும். ஆனா அவுக வீட்டு வாசல்லேயெ நிறுத்தி பேசி அனுபிச்சாடாங்கன்னே.   ஆத்தா கூட வாவும் வயிறுமா இருக்கற பொன்ன பாத்துட்டு போயிறோம்னு சொல்லிச்சு. அதுக்கு அண்ணி எங்கள் பார்க விருப்பம் இல்லைன்னு சொல்லிருச்சுன்னா ” என்றான் கணேசன்.

 “ சரி வுடு கணேசா . நாலப்பின்ன செரியா போவும். நீ சம்முவத்தா பாத்தியா” மாரிமுத்து.


“ அண்ணா அந்த செவத்த மூதி எங்க பாத்தும் கிடைக்கலன்னா. அவன் மட்டும் ஏன் கையில கிடைச்சான் அவன சவமாக்கிட்டுதான்னா வேற வேல” என்றான் குரலில் ஆத்திரத்துடன் கணேசன்.


“ கணேசு ஆத்திரப்படாத.  நீ ப்டிச்சவன். அவன் எங்கின இருந்தாலும் தேடி கண்டு பிடி. அவன் நமக்கு வேணும்” என்றான் மாரிமுத்து.


அண்ணண் குரலுக்கு அனுக்கமாக தலை ஆட்டினான் கணேசன்.

காடசி 3

அந்தி சாயும் அந்த நேரத்திலும் சூரியனின் வெப்பம் தகித்து கொண்டிருந்தது.  அந்த வெப்பத்திலும் கூட மதுரை மீனாச்சியம்மன் கோயிலை சுத்தி நகர்ந்து கொண்டிருந்த மக்கள் கூட்டம் எரும்பு சாரைய போலிருந்தது.

அப்பொழுது தானப்ப முதலி தெருவின் பக்கத்தில் இருந்த ஒரு சின்ன ஒட்டு வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த அவனின் கண்கள் மூன்று நாள் இடை விடாது தூங்கி எழுந்தவனின் கண்களை ஒத்திருந்தது.

அப்படியே செண்ட்ரல் தீயேட்டரை நோக்கி ந்டந்தவனின் வேட்டி தொடைக்கு மேல் ஏறியிருந்தது. எதிர்க்க அவனை இடிப்பது மாதிரி வந்த சைக்கிள் காரனை பார்த்து  வாயில் சொல்ல முடியாத அசிங்கமான வார்த்தைகளை உதிர்து விட்டு நகர்ந்தான். பதிலுக்கு அவனும் இவன் பரம்பரையில் வந்த பெண்களின் பெருமைகளை ஊருக்கு உரக்க சொல்லி விட்டு கடந்தான்.

வழியில் நின்றிருந்த கடலை வண்டிக்காரனிடம் ஒத்த ரூபாய் கொடுத்து அவன் தந்த கடலை பொட்டலத்தை பிரித்து படித்துக்கொண்டே நகர்ந்தான். செண்ட்ரல் தியேட்டர் வரவும் கடலை காலியாகவும் சரியாக இருந்தது. பொட்டல பேப்பரை பிரித்தவன் ஒரு மாததிற்கு முன்னதாக படத்துடன் வெளியாகி இருந்த “ கொடுக்கல் வாங்கல் தகராறில் வாலிபர் மரணம். கொலையாளி கைது” என்ற செய்திக்கு கிழே வெளியாகிருந்த படம் மாரிமுத்துவின் படமாயிருந்தது. பேப்பரை கசக்கி வீசியெறிந்து விட்டு “ ஒக்காலி அவசரப்பட்டுடான் ரொம்ப” என்றவாரு நகர்ந்தவ்ன் மாரிமுத்துவுக்கு மிகவும் வேண்டப்பட்ட ச்ம்முவம் என்றழைக்கபட்ட சண்முகமேதான்.

-- தொடரும்

30 மே, 2010

கிட்டாதாயின் வெட்டென மற

9

இலக்கை எண்ணு
அகம் உணர்.
செவி திறந்து வை.
கற்றுத் தெளி.
கற்றதை திணி

மனதை இயக்கு.
மயக்கத்தை அடக்கு
முயற்சி செய்
வெற்றி கிட்டாதாயின்
வெட்டன மற
இலக்கை எண்ணு.

           

27 மே, 2010

குற்றம்

8

காட்சி 1
இருக்கன்குடியில் இருந்து புரப்பட்ட அந்த கவன்மெண்ட் பஸ் நெம்மேனி பஸ் நிறுத்ததில் நின்று புறப்பட்ட ஆய்த்தமாக டிரைவர் கியரை மாற்றிய பொழுது பஸ் நிருத்தத்திற்கு ஒட முடியாமல் ஒடி வந்து கொண்டிருந்த பொன்னாத்தா கிழவி ” எய்யா செத்த நிறுத்துய்யா வண்டிய. நானும் ஏறிக்கிடுதேன்” என்று கத்திக்கொண்டே பஸ்ஸை தட்டினாள். கிழவியின் சத்தத்தை கேட்ட கண்டக்டர் விசில் ஊதி  வண்டியை நிறுத்தினார். கிழவியை ஏறிய உடன் அந்த ரோட்டில் முனங்கிகொண்டே சாத்தூரை நோக்கி பயணத்தை துவங்கியது பஸ்.
”ஏத்தா எங்க போவனும்” கண்டக்டர்.
“சாத்தூருக்குத்தான். எம்முட்டுய்யா “ என்ற கிழவியடம்
“டெய்லி பஸ்ல ஏறினாலும் இதே கேள்விதானா உனக்கு. 3.50 சில்லறை வெச்சுருக்கியா. இல்லேன்னா அப்படியே இறக்கி விட்றுவேன்” என்றார் கண்டக்டர்.
“ இருக்கு. இந்தா “ என்று இடுப்பில் மாட்டியிருந்த சுருக்குப் பையில் கிடந்த சில்லறைய பொருக்கி தந்து கண்டக்டர் கொடுத்த டிக்கெட்டை வாங்கி சுருக்கு பையில் திணித்தாள்.
“எல்லாரும் டிக்கெட்ட பத்திரமா வச்சுக்கங்க. வாங்கதவைங்க வாங்கிருங்க. ரெயில்வே கேட் பக்கத்துல செக்கிங் நிப்பாங்க. அவிங்க எதுவும் சொன்னா அப்புறம் கத்தாதிங்க” என்று குரல் கொடுத்துக்கொண்டே கண்டக்டர் நகர்ந்தார்.
பஸ்ஸில் உக்கார இடமில்லாமல் கூட்டம் நெருக்கி அடித்தது. பிடிமானதுக்கு பக்கத்தில் உள்ள சீட்டின் கம்பியை பிடித்து கொண்ட கிழவி “ ஏத்தா நீ சுடலையம்மா பேத்திதான. கல்யாணம் ஆயி சிவில்லிபுத்தூர்ல இருக்கறதா சொன்னாங்க. என்ன இந்த பக்கம். வீட்டுல அப்பன் ஆத்தால்லாம் எப்படி இருக்காங்க “ என்றாள்.
“ எல்லாம் நல்லா இருக்காங்க. நீங்க எப்படி இருக்க்கீங்க. மாரிமுத்து அண்ணனுக்கு ஏதோ வண்டி மோதி ஆசுபத்திரில இருக்காங்கன்னு சொன்னாங்க. இப்ப எப்படி இருக்காங்க. கணேசன்ன எப்படி இருக்கு. அண்ணி எப்படி இருக்காங்க” என்றாள் சீட்டில் உட்கார்ந்து இருந்தவள்.மாரிமுத்து கிழவியின் மூத்த மகன். கணேசன் இரண்டாம் மகன். சாத்தூர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த்தான். மாரிமுத்துவுக்கு மட்டும் கல்யாணம் ஆயிருந்தது.
“ நல்லா கேட்ட போ. அது நடந்து ஆச்சு ஒரு வருசம்.  இப்பத்தான் கேக்கனுன்னு தோணிச்சா ஒனக்கு. இப்பா நல்லா இருக்கான் “ என்று சொல்லவும்
“ முக்குராந்தகல் வந்த்ருச்சு. இறங்கவறங்க இறங்கிங்க “ என்ற கண்டக்டரின் குரல் கேட்டு “ ஏத்தா நான் இறங்கனும் . ஆத்தா அப்பனுல்லாம் கேட்டேன்னு சொல்லு” என்றவாறே பஸ்ஸில்ருந்து இறங்கினாள் கிழவி.
” ஏத்தா ஒனக்கு விசயமே தெரியாதா. ஒரு மாசத்துக்கு முன்னாடி மாரிமுத்து பய வட்டிக்கு காசு கொடுத்தவன் திரும்பி கேட்டான்னு அவன அடிச்சு கொன்னு போட்டான்னு அவன் போலிஸ் புடிச்சுட்டு போயிருச்சுல்ல. கிழவி பாவம்தா. வக்கில் ஆபிஸுக்கும் , கோர்ட்டுக்கும் நடையா நடந்துட்டுருக்கு. நல்லது நடந்தா சரிதான் “ என்றாள் பஸ்ஸில் சிவில்லிபுத்தூர் காரிக்கு பக்கத்தில் உட்கார்ந்து இருந்தவள்.
பஸ்டாண்டை நோக்கி பஸ் புறப்பட வக்கில் ஆபிஸ் இருந்த  பெருமாள் கோவில் தெருவை நோக்கி காலை தேய்த்து கொண்டு நடக்க ஆரம்பித்தாள் பொன்னாத்தா கிழவி.
காட்சி 2
தொரந்திருந்த வக்கில் ஆபிஸுக்குள் எட்டிப் பார்த்தால் பொன்னாத்தா கிழவி. எட்டிப்பார்த்த கிழவியை “வாங்க உள்ள “ என்றார் வக்கில் குமாஸ்தா சுப்பு. 
உள்ளே வந்த கிழவி “ வக்கில் அய்யா இருக்காங்களா” என்றாள்.

“அப்படி ஒரமா உக்காருங்க. சார் உள்ள போன் பேசிகிட்டு இருக்காங்க. பேசி முடிச்ச உடனே நான் போய் சொல்லிட்டு கூப்புடறேன்” சுப்பு.
“அய்யா என்ன சொல்றாங்க. மவன காப்பாத்திருவாங்கள். அவன் ஒரு தப்பும் செய்ஞ்சுருக்க மாட்டான்யா” கிழவி.
“ எல்லாம் சார் சொல்லுவார். பொருங்க ” என்று சொல்லிக் கொண்டே வக்கில் அறையை பார்த்து நகர்ந்தார் சுப்பு.
போனவர் சற்று நேரம் கழித்து வெளியே வந்து   “ போங்கம்மா உங்கள சார் கூப்பிடறாங்க ” என்று கிழவியை உள்ளே அனுப்பினார்.

உள்ளே சேரில் உட்கார்ந்திருந்த வக்கில் ஸ்ரீதரன் கிழவிய பார்த்து “ வாங்கம்மா” என்றார்.  “ உங்க மகன் கேஸைதான் பாத்துகிட்டு இருக்கேன். நாலன்னைக்கு போலிஸ்லேந்து உங்க மவன கோர்ட்டுல ஆஜர் பண்றாங்க. நான் நாளக்கு போய் அவன ஜெயில்ல போய பாத்து பேச போறேன். காட்சில்லாம் அவருக்கு எதிரா இருக்கு. என்னால என்ன பன்ன முடியும்னு பாக்கறேன். நீங்களும் ஏன் கூட வாங்க. அவற வாய தொறந்து நான் சொல்ல சொல்றத சொல்ல சொல்லுங்க. அவர் நான் சொல்றத கேட்டாதான் எதுவும் செய்ய முடியும் ” என்றார்.

“ அய்யா காப்பதிருங்கய்யா. அவுந்தான் என் குடும்பத்துக்கு முக்கியம் ” என்ற கிழவியை பார்த்து “ என்னால முடிஞ்சத நான் பண்ணறேன். நீங்க ஒங்க சின்ன பையனையும் கூட்டிகிட்டு நாளைக்கு ஜெயில்லுக்கு வந்துருங்க ” என்று சொல்லிக்கொண்டே சேரை விட்டு எழுந்தார்.

அறையை விட்டு வெளியே வந்தவள் குமாஸ்தா சுப்புவிடம் சொல்லிக்கொண்டு வக்கில் ஆபிஸை விட்டு வெளியே வந்தாள். வானம் கருத்திருந்தது.

காட்சி 3

மதுரை மத்திய சிறைச்சாலையில் விசாரணை கைதிகளுக்கான செல்லில் அடைக்கப்பட்டிருந்த மாரிமுத்து விட்டத்தை வெரித்துப்பார்த்து உட்கார்ந்த்ருந்தான். அவன் கண்களில் கிழே படிந்திருந்த கண்ணிரின் படிமம் அவனின் மன நிலைய சொல்லியது.

கடந்த ஒரு மாதமாக நடந்த சம்பவங்கள் அவனில் மனதில் ஒடிக்கொண்டிருந்தது. தனக்கு நடந்த துரோகமும், வட்டிக்கு காசு கொடுத்தவன் பேசிய பேச்சும், தம்பி , மனைவி மற்றும் ஆத்தாளை பற்றிய நினைப்பும் அவனை ஒரு மாதமாக தூக்கம் கொள்ளாமல் செய்திருந்ந்தது.

சிந்தனை வயப்பட்டு கிடந்தவனின் சிந்தனைய கலைத்தது “ ஏய் உன்னைய பாக்க ஒன் ஆத்தாளும், தம்பியும் வக்கிலோட வந்துருக்காங்க. எந்திச்சு வா” என்ற வார்டனின் குரல்.

-- தொடரும்.18 மே, 2010

இறந்து போனவனின் டைரிகுறிப்புகளிலிருந்து

14

என் உயிர் சிநேகிதன் மாதவன் இறந்து இன்றைக்கு பத்தாம் நாள். பத்து நாட்களுக்கு முன் என் கம்பெனியின் போர்டு மீட்டிங் மற்றும் புது புராடக்ட்ஸின் புரோமசன்களுக்கான ஆட் சூட்டிங்ஸ் சிலவற்றை காணவேண்டி என் கம்பெனி சகாக்களுடன் மலேசியா கோலாலம்பூரில் இருந்த பொழுது என் மனைவியிடம் இருந்து வந்த தகவல் இடியென தாக்கியது என்னை. 

  “ மாதவன்னா போயிட்டார் ” என்றவளிடம் நம்ப முடியாமல் “ ஏய் லூஸு மாதிரி என்னத்தயாது சொல்லாத. அதல்லாம் இருக்க முடியாது. இப்பத்தான் மலேசியா கிளம்பறதுக்கு முன்னாடி கூட அவன் கூட பேசிட்டு வரேன் ” என்று என்னை அறியாமல் நான் இருக்கும் இடத்தை மறந்து கத்தினேன். “ இல்ல இப்பத்தான் கீர்த்தனாக்கா போன் பண்ணினா ” என்றாள் என்னவள். கீர்த்தனா மாதவனின் அக்கா.

போன் பேசி முடித்து சற்று பைத்தியம் பிடித்த மாதிரி ஒன்றும் தெரியாமல் அங்கே அருகினில் இருந்த சேரில் பொத்தென்று சரிந்து உட்கார்ந்தேன். என்ன மாதிரி பழக்கம் அது. நான் பிறந்ததில் இருந்து என் வீட்டாருடன் இருந்தை விட மாதவனுடன் இருந்த பொழுதுகள் அதிகம்.  எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் நாங்கள் இருவரும் பேசாமல் இருந்த நாட்கள் ரொம்ப கம்மி. என்னுடன் கூட பிறந்தவர்கள் யாருமில்லாத போது பக்கத்து வீட்டில் இருந்த கீர்த்தனாக்காவும், மாதவனும் என் துணையாகி போனார்கள். சற்றே வளர்ந்த உடன் நானும் மாதவனும் பேசி தீர்த்த பொழுதுகள் ஏராளம். ஊரில் இருந்தவர்கள் எங்களை தனி தனியாக பார்த்ததில்லை. 

பொன்னியின் செல்வனிலிருந்து , ஜெப்ரி ஆர்ச்சர் வரை அவன் தான் என்னை தேடி தேடி படிக்க வைத்தான்.என் வாழ்க்கையில் ஏராள விசயங்களை கற்று தந்தவன் அவன்தான். திருட்டு தம்மிலிருந்து,  ஜாக் டேனியல்ஸ் விஸ்கி வரை எனக்கு கற்று கொடுத்தவன் அவன் தான். கல்லூரி காலத்தில் நெரைய விசயங்களை கிரகிக்க முடியாமல் நான் தினறிய போது அவன் தான் எனக்கு சொல்லி கொடுத்தது. இதல்லாம் விட நான் காதலித்த போது என் காதலுக்கு தூது போனதில் இருந்து எங்கள் இரு வீட்டாரிடமும் பேசி என் திருமணமும் முடிந்ததில் அவன் எனக்கு செய்த உதவி ! என்ன சொல்ல . நினைக்க நினைக்க கண்ணில் நீர் திரண்டு வந்து முட்டியது.

மலேசிய வேலைகள் முடிந்து திரும்பி வந்தவுடன் இன்றுதான் மாதவனின் வீட்டிற்கு போக முடிந்தது. போனவுடன் என்னை பார்த்து அழுத மாதவனின் அப்பா அம்மாவுக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் எனக்கும் அழுகை கட்டு படுத்த முடியாமல் பொங்கி வந்தது . எல்லாம் முடிந்து கிளம்புகையில் கீர்த்தனா அக்கா ஒரு பெட்டியை கையில் கொடுத்து மாதவன் என்னிடம் கொடுக்க சொன்னதாக கொடுக்க வாங்கி கொண்டு காரில் ஏறினேன்.

காரில் போகும் போது கீர்த்தனாக்கா கொடுத்த பெட்டியை திறந்து பார்த்த போது பெட்டி முழுவதும் வருட வாரியாக டைரியாக அடுக்கி வைக்க பட்டிருந்தது. ஒவ்வொரு டைரியாக எடுத்து புரட்டிய போது எங்களின் நினைவுகளின் பதிவுகளாக ஒவ்வொரு பக்கங்களும் இருக்க மாதவன் என்னுடன் இருப்பது போலவே பட்டது .  டைரிகளை படித்து கொண்டிருந்த போது மனைவியிடம் இருந்து போனில் அழைப்பு வர திரும்பிக்கொண்டிருப்பதாக சொல்லி போனை வைத்தேன். 

அடுத்தாக எடுத்த டைரியின் முகப்பு பக்கத்தில் அழகிய பச்சை நிற எழுத்துகளில் என் காதல் பக்கங்கள் என்றிருக்க ஒரு அதிர்ச்சி தாக்கியது என்னை. அவனின் எல்லாமும் எனக்கு தெரியும் என்று நினைத்திருக்கையில் இந்த விசயம் பெரிய அதிர்ச்சியாக இருந்தது . அந்த டைரி முழுவதும்  பல அற்புதமான காதல் கவிதைகளால் நிரப்ப பட்டிருந்தது . படித்துக்கொண்டே இருக்கையில் வந்த ஒரு கவிதை இப்படி எழுதப்பட்டிருந்தது. 

 “ என் உடம்பின்
உதிரத்தில் கலந்திருக்கும்
நட்பை விட 
என் மனதில் ஒரத்தில்
பூத்திருக்கும் காதல்
பெரிதென படவில்லை 
எனக்கு


அதற்கு பின் அந்த டைரியில் எதுவும் எழுதப்பட்டிருக்க வில்லை. அந்த கவிதை எழுதப்பட்டிருந்த நாள் “ 19-ஏப்ரல்-1999 ”. மாதவனிடம் நான் எனக்கும் என்னவளுக்கும் இடையேயான காதலை சொன்ன நாள். கண்ணில் நீர் கோர்க்க டைரியை மூடிய எனக்கு உலகம் என் காலடியில் மிக வேகமாக உருண்டோடுவது போல் இருந்தது.

14 மே, 2010

சொத்து

13

மேலத்தெரு கிருஷ்ணண் ஆசாரிக்கு
இன்று பத்தாம் நாள் காரியம்
காரியம் முடிந்து மூத்த அண்ணன் சொன்னான்
மேலத்தெரு வீடும் ரைஸ் மில்லும் எனக்கு
கொல்லபட்டிதென்னந்தோப்பும் 
10 ஏக்கர் கரிசல் காடும் எனக்கு
சின்ன அண்ணன் சொல்லிப்போனான்
மகளுக்கும் சம உரிமை இருக்கு
எல்லாம் நகையும் எனக்குத்தான்
சொல்லிபோனாள் வீட்டின் கடைக்குட்டி லச்சுமி
 யாரும் கேக்காத அம்மா  சொன்னாள்
அய்யா எல்லாரும் சாப்பிட வாங்க
பசியாத்திட்டு அப்புறம் பேசிக்கடலாம்

13 மே, 2010

நட்பு சூழ் உலகு

15

இன்று நண்பர்கள் தினமாம். நட்பை நினைத்து பார்க்கையில் மிகவும் சந்தோஷமாகிறது மனசு. வாழ்க்கை அள்ள அள்ள குறையாமல் நண்பர்களை அள்ளிக்கொடுத்திறுக்கிறது எனக்கு. அந்த நண்பர்களை பற்றி எழுத எனக்கு இந்த வாய்பை கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லிகொள்கிறேன் முதலில்.

பள்ளி பருவத்தில் தொடங்கிய நட்பு, கல்லூரி காலம் தொட்டு அதை தாண்டி இன்றும் தொடர்கின்றது எனக்கு. என பால்ய பருவத்தில் எனக்கு முதலில் அறிமுகமானவன் நிருபன் என்ற நண்பன். நான் இரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாய் நியாபகம். அவனது வீடு என் தெருவில் இருந்து இரண்டு தெருதள்ளி பிள்ளையார் கோவில் தெருவில் இருந்தது. சிறிது காலமே எங்கள் நட்பு நீடித்திருந்தது. அதற்கு பிறகு அவன் பக்கத்தில் இருந்த சிவகாசிக்கு சென்று விட்டான். அதை தொடர்ந்து வந்த சில வருடங்களில் வந்த எந்த நட்பும் என் மனதில் நிற்க வில்லை.ஜந்தாம் வகுப்பு முடிந்து ஆறாம் வகுப்பிற்கு உயர் நிலை பள்ளியில் அடியெடுத்து வைத்ததில் இருந்து தொடங்குகிறது என் நட்பு காலம்.

ஆறாம் வகுப்பில் என்னுடன் இணைந்த பல பேர் என்னுடைய நண்பர்களாக தொடர்வது எனக்கு கடவுள் அளித்த கொடைதான். சரவணண், சங்கர், கணேஷ், கங்காதரன், ஜெயவேலன், கார்த்திகேயன், கணேஷ் பாபு, செந்தில் குமார், சரவணப்பாண்டியன், கே.எஸ்.சரவண்ணன், குமரன், கிங்ஸ்லி, சுவாதி, ஸ்டான்லி, பரத் பாலாஜீ, சீனிவாசன் என்று அந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும்.


மேலிருக்கும் போட்டோ நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது எடுத்தது. இதில் உள்ள எல்லோருடனும்(அல்மோஸ்ட்) இன்று வரை நட்பு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்த போட்டோவில் மேலிருந்து முதல் வரிசையில் வலது ஒரத்தில் இருப்பது நெல்சன் சந்திரசேகர். கவிதை எழுத கற்றுதருகிறேன் என்று சொல்லி எங்கள் ஊர்(சாத்தூர்)
சொக்கலிங்கம் பூங்காவில் நாங்கள் எழுதி தீர்த்த கவிதைகள் நியாபகத்தில் வந்து போகிறது. சரியாக கற்றுக்கொடுக்க்காமல் போய் விட்டாய் நெல்சா, இன்னும் சரியாய் எழுத வராமல் படுத்துகிறது இந்த கவிதை. எங்கிருக்கிறாய் நெல்சா ? நாங்கள் ஒன்பாதவ்து ப்டிக்கும் போது எங்களுடன் வந்து சேர்ந்த பிரசன்னா வெங்கடேஷ்(இவனுக்கு சொந்த ஊர் நாகப்பட்டினம்), சுந்தரேசன்(இவன் இன்று கோயம்புத்தூரில் ஒரு பிரபல தொழிலதிபர்) போன்றவர்கள் திரும்பி பாதியிலேயே பிரிந்து சென்றாலும் இவர்கள்னுடான நட்பு மட்டும் இன்னும் மனதில் அப்படியே உள்ளது. இந்த போட்டோவில் மேலிருந்து இரண்டாவது வரிசையில் இடமிருந்து நான்காவதாக நிற்கும் கதிர்வேல் ஒரு இண்டரஸ்டிங் பெர்சனாலிட்டி.
அவன் ஆறாவதிலிருந்து பத்தாவது வரை ஐந்து வருடங்கள் வரை எங்களுடன் குப்பை கொட்டினான. அவன் அனிந்து வரும் டரவுசர் மிகவும் பெரிதாக இருக்கும். நண்பர்கள் எல்லாரும் அவனை பார்த்து “ஏட்டய்யா உன் டரவுசர் ஒட்டய்யா”(குணா படத்தில் வரும் கண்மணி அன்போடு நான் பாடலின் மெட்டில் படிக்கவும்) என்று கிண்டல் அடிப்போம்.
அதனால் கோபித்துக்கொண்டு கிளாஸில் பெரும்பாலனவர்களுடன் பேசாமல் இருந்தான். கேட்டதற்கு “நான் நெரயை தப்பு பண்ணிட்டேன். அதான் எனக்கு நானே தண்டனை கொடுத்திருக்கிறேனு” அச்சு பிச்சு தத்துவம்லாம் அந்த வயதிலேயே சொல்லுவான். பத்தாம் வகுப்பு முடிந்து மேல படிக்க திருநெல்வேலி போய்விட்டான். அதற்குப்பின் அவனுடன் தொடர்பு இல்லாமல் போய்விட்டது.

இந்த காலத்தில் (ஆறாவதில் இருந்து 12ஆம் வகுப்பு வரை) இந்த நண்பர்களோடு ஊரில் புழுதி பறக்க சுற்றி திரிந்ததும், ஆசை தீர கிரிக்கெட் விளையாடி திரிந்ததும் மறக்க முடியாத அனுபவங்கள். பின்னர் கல்லூரி சேர்ந்ததும் புதிதாக இன்னும் பல நட்புகள் கிடைத்தது. பொன்ராஜ், அழகர்ராஜ், அசோக், ரமேஷ்(http://sirippupolice.blogspot.com) மற்றும் ப்ல பேரை கொடுத்தது நண்பர்களாக காலம். கல்லூரி முடித்து பல இடங்களில் வேலை கிடைத்து செட்டில் ஆனாலும் இன்னும் எங்களை சேர்த்தே வைத்திருக்கிறது இந்த மனமும், இணையமும். வேலைக்கு வந்த பின்னரும் காலம் எனக்கு அளித்த வீரா, செல்வேந்த்திரன், சேஷாத்திரி, லதா பாலமுருகன், சுரேஷ், ஃபிலிக்ஸ், சிவா போன்ற வர்களின் நட்பால் இன்னும் அழகானது என் வாழ்க்கை.

வலைஉலகத்தில் எழுத வந்த இந்த சிறுகாலத்தில் எனக்கு கிடைத்த ஹாலிவுட் பாலா, சைவகொத்துப்ப்ரோட்டா, கொஞ்சம் வெட்டிப் பேச்சு  சித்ரா போன்றவர்களின் நட்பும் நெரைய சந்தோசங்களை கொடுத்திருக்கிறது. மொத்தத்தில் நட்பினால் சூழப்பட்ட என் உலகம் இன்று போல் என்றும் அழகாக இருக்கும் என்று நினைக்கும் போது மனசு மிக லேசாகி போகிறது.

9 மே, 2010

கவிதைகள் மூன்று.

18

1. 

தோற்றுப் போகும் 
கிரிக்கெட் மேட்ச்சுகளிலும்
 வெள்ளி விழா நாயகர்கள் 
பேசும் திரை வசனங்களிலும்
அரசியல்வாதிகளின்
அற்புத அறிக்கைகளிலும்
ஒளிந்துக்கொண்டிருக்கின்றன
நேஷனல் ஸ்பிரிட்டும்
தேசத்தின் வளமும்

2.
கேதன் தேசாயின் 1800 கோடி
ராமலிங்க ராஜுவின் 10,000 கோடி
 ஐ.பி.எல் மோடியின்`xxxx கோடி
வளர்ந்துக்கொண்டுதான் இருக்கின்றது
தேசத்தின் பொருளாதாரம்

3.
சினிமா டிக்கெட் 200 ரூபாய்
பெட்ரோல் 52 ரூபாய் லிட்டருக்கு
குவாட்டர் பிராந்தி 70 ருபாய்
ஹோட்டல் சாப்பாடு 50 ரூபாய்
கட்டுக்குள்தான் இருக்கிறது
தேசத்தின் விலைவாசி